Tuesday, April 5, 2011

பொலிஸ், அதிரடிப்படை, விமானப்படை வீரர்களுக்கிடையில் மோதல் 11 பேர் காயம், 45 பேர் கைது; பதற்றம் தணிவு


களுத்துறையில் நேற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், விமானப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு மிடையில் இடம்பெற்ற மோதல் நிலை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர ப்பட்ட தையடுத்து பதற்றம் தணிந்துள்ளது.

இம்மோதலினால் 11 பேர் காயமடைந்த நிலையில் களுத்துறை, நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், விமானப் படையினர் உள்ளடங்கலாக 45 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தினகரனுக்குத் தெரிவித்தார்.

ஞாயிற்றுக் கிழமை இரவு 9 மணிய ளவில் ஆரம்ப மான இம்மோதல் நேற்று நண்பகல் வரை நீடித்து ள்ளது. இம்மோதல் காரணமாக களுத்துறை கிராமமொ ன்றில் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார். வீடுகளின் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டிரு ப்பதுடன் பல முச்சக்கர வண்டிகள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவருக்கும் விமானப்படையதிகாரி ஒருவருக்குமிடையே ஏற்பட்ட தனிப்பட்ட வாய்த்தர்க்கமே இறுதியில் முத்தரப்பினருக்குமிடையிலான மோதலாக உருவெடுத்திருப்பது ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

மோதலில் களுத்துறையைச் சேர்ந்த பெண் ஒருவர் உள்ளிட்ட 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர். இவர்களது உடல்நிலை தேறி வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். கைது செய்யப்பட்டிரு க்கும் 45 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவ ரெனவும் அவர் கூறினார்.

இதேவேளை, மோதலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸ் குழுவொன்று அப்பகுதி மக்களிடையே கலந்துரையாடி அவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியதையடுத்து அப்பகுதியில் பதற்றம் தணிந்துள்ளது. இம்மோதல் குறித்து விசேட பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.லக்ஷ்மி பரசுராமன் TUESDAY, APRIL 05, 2011

Thursday, October 28, 2010

பம்பலப்பிட்டி சோதனைச்சாவடி அகற்றப்பட்டது


பம்பலப்பிட்டி காலி வீதியில் செயற்பட்டு வந்த வீதி சோதனைச் சாவடி நேற்று முதல் முழுமையாக அகற்றப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவள கூறினார்.

இதன்படி, கொழும்பு நகரிலுள்ள பிரதான வீதி சோதனைச் சாவடிகளை படிப்படியாக களைவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் மேஜர் ஜெனரல் குறிப்பிட்டார்.

கொழும்பின் பாதுகாப்பு நிலைமைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதனை தொடர்ந்து வீதிச் சோதனை சாவடிகளை படிப்படியாக களைவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் சுட்டிக்
காட்டினார்
THURSDAY, OCTOBER, 28, 2010லக்ஷ்மி பரசுராமன்

Thursday, October 21, 2010

ருஹுணு உபவேந்தர் மீது மாணவர் குழு தாக்குதல்:மாத்தறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை


ருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுசிறித் மெண்டிஸ் நேற்றுக்காலை பல் கலைக்கழக மாணவர் குழுவொன்றி னால் தாக்கப்பட்டுள்ளார். மக்கட் பண்பியல் பீடத்தைச் சேர்ந்த இரு மாணவ குழுக்களிடையே நேற்று இடம்பெற்ற மோதலை சீர்செய்வதற்காக உபவேந்தர் அவ்விடத்துக்கு சென்றிருந்த போதே குறித்த மாணவக் குழு உபவேந்தரை தாக்கியுள்ளது.

காயமடைந்த உபவேந்தர் மாத்தறை பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் சிரேஷ்ட மாணவ ஆலோசகரான சமன் சந்தன என்பவரும் சில மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக உபவேந்தர் மாத்தறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார். அண்மைக்காலமாக ருஹுணு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தொடர்ச்சியாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்துப் பல்கலைக்கழகங்களுக் குமிடையிலான மாணவ ஒன்றியமும் விஞ்ஞான பீட மாணவர்களும் கடந்த செவ்வாய்க்கிழமை மோதிக் கொண்டதில் ஏழு பட்டதாரி மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் எம். என். ஹேரத்தின் பணிப்புரையின் பேரில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் பத்மசிறியின் மேற்பார்வையில் விசேட பொலிஸ் குழுவொன்று இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
THURSDAY, OCTOBER, 21, 2010லக்ஷ்மி பரசுரமான்

Monday, October 18, 2010

பொதுநலவாய நாடுகளின் பிரிட்டிஷ் எம்.பிக்கள் தூதுக்குழு இலங்கை விஜயம்


பொதுநலவாய நாடுகளின் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தூதுக்குழுவொன்று நேற்று இலங்கை வந்திருப்பதாக வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இக்குழுவினர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பர். இக்காலப் பகுதியினுள் நாட்டின் முக்கிய பல தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்துவரெனவும் எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கிடையில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் அழைப்பின்பேரில் இத்தூதுக்குழு நாளை (19) செவ்வாய்க்கிழமை காலை பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
MONDAY, OCTOBER, 18, 2010லக்ஷ்மி பரசுராமன்

இந்திய வெளிவிவகார அமைச்சர் நவம்பர் 25ம் திகதி இலங்கை வருகை


கொழும்பில் நடைபெறவிருக்கும் இலங்கை-இந்திய கூட்டு ஆணைக்குழுவில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா நவம்பர் 25ஆம் திகதி இலங்கை வரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

ம்மாதம் 27ஆம் திகதி மேற்படி ஆணைக்குழு கொழும்பில் கூடுவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தபோதும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் திடீர் ஜப்பான் விஜயம் காரணமாக இது அடுத்த மாத இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டிரு ப்பதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி யொருவர் கூறினார்.

இலங்கை வரவிருக்கும் இந்தியப் பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமை தாங்க விருக்கும் அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா மூன்று தினங்கள் வரை இங்கே தங்கியிருப்பதுடன் வடக்கில் மோதல் இடம்பெற்ற பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்வதுடன் அங்கு இந்திய அரசின் நிதியுதவியின்கீழ் முன்னெடுக்கப் பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களையும் பார்வையிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை-இந்திய கூட்டு ஆணைக்குழு கடந்த 2005ஆம் ஆண்டு கொழும்பில் கூடி ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.
MONDAY, OCTOBER, 18, 2010லக்ஷ்மி பரசுராமன்

போலிமருந்துகள் கடத்தலுக்கு விரைவில் தீர்வு; சட்டவிரோத செயலுக்கு உடந்தையான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை


சட்டவிரோதமான முறையில் இலங்கையினுள் போலி மருந்துகளை கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குத் துரித கதியில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுமென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

பதிவு செய்யப்படாத மருந்துகள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதனை நிறுத்தும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின்பேரில் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த நான்கு குழுக்களினதும் உறுப்பினர்களில் சிலர் இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு தொடர்ந்தும் ஒத்தாசை வழங்கி வருவது அம்பலத்திற்கு வந்திருப்பதாகவும் அமைச்சர் மைத்திரிபால தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்றுக்காலை ‘போலி மருந்துகளைக் கட்டுப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கருத்தரங்கொன்று நடைபெற்றது.

அமெரிக்க அரசாங்கம் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்க மருந்தக சம்மேளனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் இலங்கை மருந்துகள் உற்பத்தி சங்கத்தின் சம்மேளனம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உலகின் பிரதான வியாபார மோசடியை எடுத்துக் கொண்டால் அதில் பிரதானமானது ஆயுதக் கடத்தல். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது மருந்துக் கடத்தல் ஆகும். இதனை நாட்டினுள் அனுமதிக்கக் கூடாது என்பதற்காகத்தான் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் அதனை ஆராய்ந்து கட்டுப்படுத்தும் நோக்கில் நான்கு பிரதான குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.

இக்குழுக்களின் உறுப்பினர்களுள் பலர் நேர்மையான முறையில் தமது கடமைகளை முன்னெடுத்து வந்த போதிலும் சிலர் சட்டவிரோத மருந்து கடத்தலுக்கு உடந்தையாக இருந்துள்ளமைக்கான ஆதாரங்கள் எமக்கு கையும் மெய்யுமாக கிடைத்துள்ளன. இச்செயற்பாடுகளுடன் அரச அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்ட போதிலும் அரசாங்கத்துக்கு பதில் கூறியே ஆகவேண்டும். சுகாதார அமைச்சரென்ற வகையில் தொடர்ந்தும் நாட்டில் போலி மருந்து மாபியா நடப்பதற்கு என்னால் இடம் வழங்க முடியாது. இதற்கெதிராக மிக விரைவில் நடவடிக்கையெடுப்பதுடன் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியாக தண்டனைப் பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் அமைச்சர் இதன்போது கூறினார்.
MONDAY, OCTOBER, 18, 2010லக்ஷ்மி பரசுராமன்