ஊவா மாகாண சபைத் தேர்தல் மற்றும் யாழ்ப்பாணம், வவுனியா உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடவடிக்கைகளின்போது சுமுகமான நிலைமையே காணப்படுவதால் நீதியாகவும் அமைதியானதுமான முறையில் நாளை தேர்தல்கள் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
கடந்த கால தேர்தல்களுடன் ஒப்பிடும்போது இம்முறை வன்முறைகள் குறித்து கிடைக்கப் பெற்றிருக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை பெரிதும் குறைவடைந்திருப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.
ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று தேர்தல்கள் ஆணையாளர் தலைமையில் செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது.
இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேர்தல் வன்முறைகள் இம்முறை குறைவடைந்திருப்பது சாதகமான முடிவாக இருப்பதுடன் பாரிய முன்னேற்றமாக தென்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்காக இம்முறை கொழும்பிலிருந்து 638 அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். யார் எதிர்ப்புத் தெரிவித்தாலும் யாழ்ப்பாணத்துக்கு 81 அதிகாரிகளையும் வவுனியாவுக்கு 21 அதிகாரிகளையும் தான் அனுப்பி வைக்கவிருப்பதாக ஆணையாளர் கூறினார்.
குறிப்பாக வடக்கில் தேர்தல்கள் உரிய முறையில் நடத்தப்படுகின்றதா என்பதனை அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே தனது பிரதிநிதிகளாக அவர்களை அங்கு அனுப்பி வைப்பதாகவும் இவர்களனைவரும் தேர்தல் திணைக்களத்தைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாளை நடைபெறவிருக்கும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெப்ரல், சி. எம்.ஈ. ஆகிய அமைப்புக்கள் கண்காணிப்பு நட வடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளன.
தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் 8 ஆம் திகதி அதிகாலை முதல் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட ஆணையாளர், பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்வதற்காக வாக்குச் சாவடிகளுக்குச் செல்லும் வாக்காளர்கள், வேட்பாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட யாரும் எந்தவொரு ஆயுதத்தையோ கையடக்கத் தொலைபேசி களையோ எடுத்துச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள தெனக் குறிப்பிட்டார். உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இடம்பெயர்ந்துள்ளவர்களுக்காக இம்முறை ஆறு மாவட்டங்களில் வாக்கெடுப்புக்கள் நடத்தப்படுகின்றன.
இடம்பெயர்ந்துள்ளவர்களிட மிருந்து கிடைக்கப்பெற்ற ஆறாயிரத்து 30 விண்ணப்பங்களை முதலில் ஏற்றுக்கொண்டபோதும் பின்னர், இரு இடங்களில் தம்மை வாக்காளராக பதிவு செய்துள்ளமை மற்றும் தவறான தகவல்களை சமர்ப்பித்துள்ளமை போன்ற காரணங்களுக்காக ஊர்ஜிதம் செய்யப்பட்டதையடுத்து அதில் ஆயிரத்து இருபத்தேழு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 5003 பேர் மாத்திரமே தமக்கு வழங்கப்பட்டிருக்கும் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க முடியுமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.
இதன்படி, இடம்பெயர்ந்திருப்போருள் கொழும்பில் 138 பேரும் கம்பஹாவில் 619 பேரும் களுத்துறையில் 136 பேரும் யாழ்ப்பாணத்தில் 75 பேரும் புத்தளத்தில் 3, 927 பேரும் அநுராதபுரத்தில் 108 பேருமே இம்முறை வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
நாளை நடைபெறவிருக்கும் தேர்தலுக்காக பதுளையில் 507 வாக்குச் சாவடிகளும் மொனராகலையில் 307 வாக்குக்சாவடிகளும் யாழ்ப்பாணத்தில் 70 வாக்குச்சாவடிகளும் வவுனியாவில் 18 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் நிலையங்களாக பதுளையில் 56 நிலையங்களும் மொனராகலையில் 29 நிலையங்களும் யாழ்ப்பாணத்தில் 13 நிலையங்களும் வவுனியாவில் 03 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அடையாள அட்டை
அடையாள அட்டை இல்லாதவர்களின் எண்ணிக்கை நாளடைவில் குறைந்துவிடும். அதற்கு ஊவா மாகாணம் சிறந்த எடுத்துக்காட்டென ஆணையாளர் கூறினார். கல்வியாளர் சமூகத்தினரைக் கொண்ட மாத்தறையுடன் ஒப்பிடும்போது மொனராகலை, பதுளை ஆகிய மாவட்டங்களில் தேசிய அடையாள அட்டை வைத்திருப்போரின் எண்ணிக்கை 82 சதவீதமாகும். இது எமது பணி முழுமையாக நிறைவேற்றப்பட்டிருப்பதனை சுட்டிக்காட்டுகிறது. மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களையொட்டி தேசிய அடையாள அட்டை இல்லாதோர்க்கு அவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்காக நான்கு மாவட்டங்களில் 59 தடவைகள் நடமாடும் சேவைகள் நடத்தப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டார்.
சுவரொட்டிகள்
தேர்தல் முடிவடைந்ததையடுத்து வீதிகளிலிருந்து சுவரொட்டிகளை அகற்றுவதற்காக ஒவ்வொரு தடவையும் ஒரு கோடியே இரண்டு இலட்சம் ரூபா வரையில் செலவிடப்படுகிறது. ஆனால் கடந்த முறை தேர்தலின்போது ஒட்டப்பட்ட சுவரொட்டியை நான் இன்னும் எனது வீடு செல்லும் வழியில் காண்கிறேன்.
ஆகவே இம்முறை சுவரொட்டிகளை அகற்றும் பணிக்கு எவ்வித நிதி ஒதுக்கீடும் செய்ய நான் அனுமதிக்கப்போவதில்லையெனவும் ஆணையாளர் கூறினார். (FRIDAY, AUGUST 07, 2009 லக்ஷ்மி பரசுராமன்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment