Friday, August 28, 2009

புலிகளின் சொத்துக்களை பெறுவது குறித்து சர்வதேச மட்டத்தில் இலங்கை பேச்சு




வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை முடக்கி அவற்றின் உரிமைகளை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்வது குறித்து சர்வதேச மட்டத்தில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

சர்வதேச மட்டத்தில் வியாபித்திருக்கும் புலிகளின் வலைப்பின்னல்களை தடைசெய்வது குறித்து தூதுவர்களுடன் பேச்சு நடத்தி வரும் அதேநேரம் வெளிநாடுகளிலிருக்கும் புலிகளின் சொத்துக்களை இனங்கண்டு அவற்றின் உரிமைகளை இலங்கை அரசாங்கத்தின் கரங்களுக்கு கிட்டும்படி செய்ய அந்நாடுகளின் அரசாங்கங்கள் உதவ முன்வர வேண்டுமெனக் கோரி உலக நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களிடம் பிரத்தியேகமாக எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் அமைச்சர் போகொல் லாகம கூறினார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் :-

பயங்கரவாதமென்பது தனியே ஒரு நாட்டிற்குள் மாத்திரம் கட்டுப்பட்டதல்ல.
சர்வதேசம் முழுவதும் பரவி காணப்படுவதொன்றாகும். புலிகள் சர்வதேச வலையமைப்பை கொண்டிருப்பது மாத்திரமன்றி எமது அண்டைய நாடான இந்தியாவின் முன்னாள் பிரதமரையே கொலை செய்துள்ளனர்.
புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னமும் செயற்பட்டு வருகின்றது. அதனை தடை செய்து வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை முடக்குவது குறித்து நாம் தொடர்ந்தும் சர்வதேச மட்டத்தில் பேச்சுகளை நடத்தி வருகின்றோம். உலக நாடுகளும் எமது கோரிக்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள்.

அதனை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகளினூடாக காணக்கூடியதாக இருக்கின்றதெனவும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.
ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர்களினால் ‘செனல் – 04’ அலைவரிசையில் அண்மையில் ஒளிபரப்பப்பட்ட இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான வீடியோக் காட்சிகள், குறித்து எழுப்பப்பட்ட வினாவுக்கு அமைச்சர் பதிலளிக்கையில் :-

அதில் எவ்வித உண்மையும் இல்லை. புலி ஆதரவாளர்கள் இல்லாத ஒன்றை இருப்பதாக உருவகித்து காட்டியுள்ளார்கள் எனக் கூறினார்.
இலங்கை அரசாங்கம் சார்பாக வெளிவிவகார அமைச்சு இதனை வன்மையாக கண்டித்துள்ளதுடன் பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தினூடாக ‘செனல் – 04’ தனியார் அலைவரிசைக்கு இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கி கூறியிருக்கிறோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வெளிவிவகார அமைச்சரென்ற வகையில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருடன் தொடர்புகொண்டு நான் இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளேன்.
மோதலின் போது இடம்பெற்ற சூழ்நிலைகளை நாம் நன்கு அறிவோம். எம்மால் இந்தக் காட்சிகளில் உண்மை யிருப்பதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இணைய தளத்தினூடாக தற்காலத்தில் வேண்டிய மாயாஜலங்களை மேற்கொள்ளலாமென்பது சகலருக்கும் தெரிந்த விடயமேயெனவும் அமைச்சர் போகொல்லாகம கூறினார். FRIDAY, AUGUST 28, 2009லக் ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment