மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கென இந்தியாவிலிருந்து இலங்கை வருகை தந்திருந்த மருத்துவக் குழு தமது ஆறு மாதகால பணியை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ளது.
புதுமாத்தளனிலும் வவுனியாவிலும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இந்த மருத்துவக் குழுவைச் சேர்ந்த வைத்தியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு நேற்று தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் போஷாக்கு மற்றும் சுகாதார பராமரிப்பு சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இதன்போது நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் 25 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டன.
இந்த மருந்துப் பொருட்களின் ஒரு தொகுதியினை நிகழ்வின் போது இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் அமைச்சர் நிமல் சிறிபாலவிடம் கையளித்தார்.
நாட்டில் மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தவேளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரால் கிரீன் ஓசன் கப்பல் மூலம் புல்மோட்டைக்கு கொண்டு செல்லப்பட்ட நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை உதவிகளை முன்னெடுப்பதற்காக கடந்த மார்ச் 09 ஆம் திகதி இந்தியாவிலிருந்து மருத்துவக் குழுவொன்ற இலங்கை வந்து மருத்துவ முகாமை நடத்தி வந்தது.
புல்மோட்டையில் 02 மாத காலம் அமைக்க ப்பட்டிருந்த இந்த மருத்துவ முகாம் 21 தடவைகள் கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட 7 ஆயிரம் இடம்பெயர்ந்தவர்களுக்கும் புல்மோட்டையை வதிவிடமாகக் கொண்ட 100க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கும் சிகிச்சையளித்து வந்தது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் கருத்து தெரிவிக்கையில் :-
இலங்கையில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது என்பதற்காக நாம் இந்தியாவிலிருந்து வைத்தியர்களை வரவழைக்கவில்லை.
இங்கே போதுமானளவு வைத்தியர்கள் இருக்கின்ற போதும் இலங்கையுடனான மிகவும் நெருங்கிய நட்பு காரணமாகவே இந்த மருத்துவக் குழு இங்கு வந்து சேவையாற்றியது. புல்மோட்டை மணற் பரப்பில் 72 மணித்தியாலங்களுக்குள் 50 கட்டில்களுடன் மருத்துவ முகாமை ஆரம்பித்து சிகிச்சைகளை முன்னெடுத்தோம்.
இது பின்னர் 115 கட்டில்களாக விரிவுபடுத்தப்பட்டது. இந்திய மருத்துவர்கள் தமது சேவையை சரிவர முன்னெடுக்க சுகாதார அமைச்சின் அதிகாரிகள் எமக்கு பூரண ஒத்துழைப்பைத் தந்தனர்.
இந்நிலையில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் வவுனியாவில் தங்க வைக்கப்பட்டதையடுத்து அங்கு அம்மக்களுக்கு சிகிச்சையளிக்கும் நோக்கில் இந்திய மருத்துவ முகாம் வவுனியாவின் மெனிக்பாம் மற்றும் செட்டிக்குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டது.
அங்கே நான்கு மாத காலம் சேவையாற்றிய மருத்துவக் குழு 40 ஆயிரம் நோயாளர்களுக்கு சிகிச்சையளித்த அதேவேளை 1000 சத்திர சிகிச்சைகளையும் முன்னெடுத்துள்ளது.
இந்திய அரசாங்கம் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக 125 மில்லியன் (இலங்கை) ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை வழங்குவதாக ஏற்கனவே வாக்குறுதியளித்திருந்தது.
இதன்படி 100 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மிகுதி 25 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டன.
THURSDAY, SEPTEMBER 10, 2009 லக்ஷ்மி பரசுராமன்
No comments:
Post a Comment