Tuesday, September 1, 2009

தோட்ட தொழிலாளர் சம்பள அதிகரிப்பு விவகாரம்:முதலாளிமாருடனான பேச்சு தோல்வி; தொழிற்சங்க போராட்டத்திற்கு முஸ்தீபு


தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கக் கோரி முதலாளிமார் சம்மேளனத்துடன் நேற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை யடுத்து தொழிற்சங்க நடவடிக் கைகளை முன்னெடுக்க தயாராகி வருவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

தோட்ட முகாமைத்துவ முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தோட்டத் தொழிலாளர் சார்பான கூட்டு கமிட்டிகளுக்கு மிடையிலான சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது குறித்த பேச்சுவார் த்தை நேற்று கொட்டகலை காங்கிரஸ் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது.
இதன் போது தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 500 ரூபா வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இப்பேச்சுவார்த்தையில் தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தோட்ட தொழிற்சங்க கூட்டு கமிட்டி ஆகியன கலந்து கொண்டன.
இருபத்திரண்டு தனியார் கம்பனிகளை உள்ளடக்கிய முதலாளிமார் சம்மேளனம், தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தில் 12 சதவீத அதிகரிப்பை மாத்திரமே முன்னெடுக்க முடியும் என்று தமது கொள்கையில் உறுதியாக இருந்துள்ளது. இரு தரப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை காணப்படவே நேற்றைய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஒருவார கால அவகாசத்தினை தருமாறு முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த வேண்டுகோளை கூட்டு கமிட்டி நிராகரித்துள்ளதுடன் அடுத்த கட்ட நடவடிக்கையாக தொழிற் சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க விருப்பதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பிரதி அமைச்சருமான மு. சிவலிங்கம் கூறினார்.தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக கொட்டகலை தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று காலை 11 மணிக்கு விசேட ஆலோசனைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

இதில் மாவட்டத் தலைவர்கள், தலைவிகள், உத்தியோகத்தர்கள், பெண் இணைப்பாளர்கள், மாவட்ட சம்மேளன உத்தியோகத்தர்கள் மற்றும் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்வார்களெனவும் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.TUESDAY, SEPTEMBER 01, 2009லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment