சவூதி அரேபியாபில் நிராதரவான நிலையில் இருக்கும் இலங்கையர்களை விரைவில் நாட்டுக்கு திருப்பியழைப்பது தொடர்பாக அந்நாட்டு அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவென பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் பைலா தலை மையிலான உயர்மட்டக் குழு இன்று சவூதி பயணமாகின்றது.
ஜித்தாவிலுள்ள பாலமொன்றின் கீழ் தமது தொழில் வாய்ப்புக்கள் பறிபோன நிலையில் இலங்கையர்கள் பலர் நிராதரவான நிலையிலிருப்பதாக அண்மையில் வெளிவந்த செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
இதனையடுத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இப்பிரச்சினைக்கு தீர்வுக் காணும் பொருட்டு விசேட குழுவொன்றை நியமித்ததாக பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் பைலா, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் ஹரிஸ்சந்திர பட்டகொட, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஜான் ரட்நாயக்க, பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய உள்ளிட்ட குழுவினரே இன்று திங்கட்கிழமை சவூதி அரேபியா புறப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொழில் வாய்ப்புக்கள் பறிபோன நிலையில் ஜித்தா பாலத்தின் கீழ் கடந்த காலங்களில் நிராதரவான நிலையிலிருந்த 2040 இற்கும் மேற்பட்ட இலங்கையர்களை சவூதி அரேபிய அரசாங்கம் 156 மில்லியன் ரூபா செலவில் கட்டம் கட்டமாக இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.
இருப்பினும் தற்போது அந்நாட்டு சட்ட விதிமுறைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் காரணமாக தொழிலற்ற நிலையில் பாலத்தின் கீழ் இருப்போரை அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்புவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
ஜித்தாவிலுள்ள பாலத்தின் கீழ் தற்போது சுமார் மூவாயிரம் பேர் வரையிலானோர் தொழில் வாய்ப்பற்ற நிலையில் தங்கியுள்ளனர். இவர்களுள் 250 பேர் இலங்கையர்களாவர்.
அந்நாட்டு சட்ட விதிமுறைகளுக்கமைய விரைவில் இலங்கையர்களை திருப்பியழைப்பது தொடர்பான பேச்சுக்களை இக்குழு மேற்கொள்ளுமெனவும் பணியகத்தின் தலைவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
MONDAY, NOVEMBER 16, 2009 லக்ஷ்மி பரசுராமன்
No comments:
Post a Comment