Monday, December 28, 2009

பண்டிகைக் காலம்; மக்கள் நலன் கருதி நாடு பூராவும் விசேட பொலிஸ் பாதுகாப்பு திட்டம் கொழும்பு நகரில் மட்டும் 500 பொலிஸார் சேவையில்



பண்டிகை காலங்களில் பொதுமக்களின் நலனைக் கருத்திற் கொண்டு நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாகங்களிலுமுள்ள பிரதான நகரங்களில் இவ்விசேட பாதுகாப்பு செயற்திட்டம் அமுல்படுத்தப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

சன நடமாட்டம் நிறைந்த பிரதான நகரங்களில் ஏமாற்றுப் பேர் வழிகள் மற்றும் முடிச்சு மாறிகளிடமி ருந்து மக்களை பாதுகாப்பதற்காகவே இவ்விசேட திட்டத்தினை பொலிஸ் திணைக்களம் ஏற்பாடு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெளியிடங்களிலிருந்து பொருள் கொள்வனவுக்காக கொழும்பு மற்றும் பிரதான நகரங்களுக்கு வரும் மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு 24 மணித்தியாலமும் பொலிஸ் பாதுகாப்புச் சேவை நடத்தப்படவுள்ளது. இதன் போது பொலிஸார் சீருடையில் மாத்திரமன்றி சிவில் உடையுடனும் களத்திலிறங்கி சேவையிலீடுபடவிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

கொழும்பின் பிரதான நகரில் மாத்திரம் மேலதிகமாக ஐநூறு பொலிஸாரை சேவையிலீடுபடுத்த தீர்மானித்திருப்பதாகவும் ஏனைய நகரங்களில் சன நடமாட்டத்தின் அளவுக்கேற்ப பொலிஸார் சேவையிலீடுபடுத்தப்படுவரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த மாதம் இறுதி வரையில் இப்பாதுகாப்புச் சேவையை நடைமுறையில் வைக்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிவில் சேவையிலீடுபடுத்தப்படும் பொலிஸார் வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனைகளை நடத்துவதன் மூலம் ஏமாற்றும் நோக்குடன் செயற்படும் போலி வர்த்தகர்களிடமிருந்து நுகர்வோர் பாதுகாக்கப்படுவர்.

இதனால் பொருள் கொள்வனவுக்காக வெளியிடங்களிலிருந்து கொழும்பு வருவோர் எவ்வித தடையுமின்றி தாராளமாக தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியுமென சுட்டிக்காட்டிய பொலிஸ் பேச்சாளர் இருப்பினும், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுவது சிறந்தது எனவும் தெரிவித்தார்.
MONDAY, DECEMBER 28, 2009லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment