Tuesday, December 1, 2009

பாரிய அபிவிருத்தியும் பொருளாதார வலுவூட்டலுமே ஜனாதிபதியின் குறிக்கோள்:அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எந்த நோக்கத்தோடு பதவியேற்றாரோ அந்த நோக்கம் நிறைவேறி விட்டது. தற்போது அவர் அபிவிருத்திப் பாதையில் நாட்டை இட்டுச் செல்கின்றார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதன் மூலம் அபிவிருத்தி திட்டங்களின் பாரிய இலக்குகளை நிறைவேற்றுவதே ஜனாதிபதியின் தற்போதைய ஒரே குறிக்கோளாகுமென தகவல் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமது ஜனாதிபதி முப்படைகளினதும் தலைவராக விருந்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இனி அவரது இலக்கு நாட்டில் பாரிய மட்டத்திலான அபிவிருத்திகளை முன்னெடுப்பதும் பொருளாதாரத்தை வலுவூட்டுவதாகும்.

35 வருட அரசியல் அனுபவமுடைய ஜனாதிபதிக்கு பொருளாதாரம் மற்றும் அரசியல் பற்றி புதிதாக கற்க வேண்டிய அவசியமில்லை. உலக நாடுகள் பல பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்த வேளையிலும் எமது நாட்டில் ஒரு கோடியே 80 இலட்சம் ரூபா செலவில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள தென்றால் அது ஜனாதிபதியின் சிறப்பான ஆட்சிமுறையினை வெளிப்படுத்துவதாகவே உள்ளதெனவும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா கூறினார்.

நாட்டின் அபிவிருத்திப் பணிகள் ஒரு இடத்துக்கு மாத்திரம் உரித்தானவையல்ல. அது சகல மூலை முடுக்கிற்கும் கொண்டு செல்லப்பட வேண்டுமென்பதனையே ஜனாதிபதி மீண்டும் மீண்டும் கூறிவருகிறார்.
அரசியலுக்குள் பிரவேசிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு.

அந்த வகையில் முன்னாள் இராணுவ அதிகாரி மாத்திரம் இதற்கு விதி விலக்காக மாட்டார். அதற்காக தேர்தல் பிரசாரம் என்ற பெயரில் அரசாங்கம், தான் கோரிய பாதுகாப்பினை தனக்கு தர மறுத்து விட்டதாகக் கூறி பொதுமக்களிடையே தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தி அவர்களது சிந்தனையை திசை திருப்ப முயல்கின்றார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவினால் கோரப்பட்டிருந்த 05 பெண் இராணுவ வீராங்கனைகளை தவிர்ந்த ஏனைய அனைத்தும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் 70 பாதுகாப்பு அதிகாரிகளையே கோரியிருந்தார். ஆனால் மொத்தமாக 72 பேர் அவருக்காக வழங்கப்பட்டுள்ளனர். இது அரசாங்கத்தின் கடமை. இது பற்றி பலரும் பிழையான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தெரிவித்தார்.

சுமார் 40 வருட கால வரலாற்றைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே ஒரு பெது வேட்பாளரை தெரிவுசெய்ய முடியாமல் போய்விட்டது.

சிறுபிள்ளைத்த னமாக யாரோ ஒருவரை நிறுத்த வேண்டுமென்பதற்காகவே பொது வேட்பாளரை நிறுத்தியுள்ளனர். இது இலட்சியம் கொண்ட பொது வேட்பாளருக்கும் குறிக்கோள் எதுவுமற்ற கேட்பாட்டாளர்களுக்குமிடையிலான போட்டியென்பதனை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
TUESDAY, DECEMBER 01, 2009 லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment