வடமாகாணத்தில் எதிர்வரும் 02 ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட விருப்பதாக ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
இவ்வேலைத் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான பிரதான டெங்கு ஒழிப்பு மாநாடு நாளை (27) வவுனியா அரச அதிபர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் தலைமையில் நடைபெறவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் பாரியளவில் முன்னெடுக்கப்படவுள்ளன.
வவுனியாவில் நாளை நடைபெற விருக்கும் மாநாட்டில் ஐந்து மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்கள், உதவி அரசாங்க அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்து கொள்வரெனவும் ஆளுநர் கூறினார்.
இம் மாநாட்டின் போது ஒவ்வொரு மாவட்டத்திலும் டெங்கு நுளம்பு பரவக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் காணப்படும் பகுதிகள், அவற்றைக் கட்டுப்படுத்தும் விதம் தேவையான உபகரணங்கள் ஆகியன குறித்து கலந்துரையாடி அவசியமானவற்றை எதிர்வரும் 02 ஆம் திகதிக்கு முன் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அரசாங்க உத்தியோகத்தர்களைக் கொண்டு நாட்டில் டெங்கு பரவுவதைத் தடுக்கும் வேலைத்திட்டம் தற்போது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் எதிர்வரும் 02 ஆம்திகதி வடமாகாணத்துக்கான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம்.
ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடமாகாணத்தில் மிகவும் குறைந்தளவினரே டெங்கு நோய்க்கு ஆளாகியுள்ளனர். இருப்பினும் மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் நீர் தேங்கக்கூடிய மற்றும் நுளம்பு பெருகக்கூடிய இடங்களை சுத்திகரிப்பதற்காக தீவிர முயற்சியில் இறங்கவுள்ளோமெனவும் ஆளுநர் தெரிவித்தார்
MONDAY, JULY 26, 2010லக்ஷ்மி பரசுராமன்