ஜனாதிபதித் தேர்தலின் உத்தியோகபூர்வ தபால்மூல வாக்களிப்பு நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது. 4 இலட்சத்து ஆயிரத்து 118 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யு. பி. சுமணசிறி தெரிவித்தார்.
அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த 15 ஆயிரம் அரச நிறுவனங்களில் இம்முறை தபால்மூல வாக்களிப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.
ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு சமுகமளிக்க முடியாத 4 இலட்சத்து 58 ஆயிரத்து 154 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனர். இவர்களுள் பல்வேறு காரணங்கள் காரணமாக 57 ஆயிரத்து 36 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
தபால்மூல வாக்களிப்பு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட தெரிவத்தாட்சி அலவலகர்களால் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் அலுவலகம் தெரிவித்தது.
12 ஆம் 13 ஆம் திகதிகளில் தவிர்க்க முடியாத காரணமொன்றினால் வாக்களிக்க முடியாத போதும் தபால்மூல வாக்காளரொருவருக்கு 26 ஆம் திகதி பிற்பகல் 4 மணி வரை அந்த வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இருப்பினும், அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் குறிப்பிட்ட மாவட்டத் தின் தெரிவத்தாட்சி அலுவலருக்கும் 26 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு முன்னதாக கிடைக்க வேண்டுமென்பதை கவனத்திற்கொள்ளுமாறும் சிரேஷ்ட அதிகாரி சுட்டிக் காட்டினார்.
அத்தாட்சிப்படுத்தும் அலுவலரொருவரின் அலுவலகத்தில் அஞ்சல் வாக்குகளை அடையாளமிடும் சந்தர்ப்பத்தில் வேட்பாளரொருவர் சார்பாக முகவரொருவரும் ஒரு கண்காணிப்பு நிறுவனம் சார்பாக கண்காணிப்பாளரொருவரும் நியமனஞ் செய்யப்படலாம். இப்பணியை கண்காணிப்பதற்கு பெப்பரல், சி.எம்.இ.வி. ஆகிய நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விசேட பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தபாலகங்களினூடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 08 ஆம் திகதி ஆரம்பமான வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும் 18 ஆம் திகதிக்குள் நிறைவுபெறுமெனவும் 10 ஆம் திகதியாகிய நேற்று விசேட தபால் விநியோகம் முன்னெடுக்கப்பட்டதாகவும் தபால்மா அதிபர் எம். கே. பி. திஸாநாயக்க நேற்றுக் கூறினார்.
MONDAY, JANUARY 11, 2010லக்ஷ்மி பரசுராமன்
No comments:
Post a Comment