Sunday, January 17, 2010

எதிர்க்கட்சியின் தோல்வியின் பிரதிபலிப்பே வன்முறைகளாக வெடிக்கின்றன:ஐ.ம.சு.மு. ஆதரவாளர்களை அசைக்க முடியாது - மைத்திரிபால



எதிர்க்கட்சியினர் நாளுக்கு நாள் எதிர்நோக்கும் தோல்வியின் பிரதிபலிப்பே நாட்டில் தேர்தல் வன்முறையாக வெடிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.

எத்தகைய வன்முறைகள் இடம்பெற்றா லும் ஜனாதிபதியையோ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களையோ அதன் ஆதரவாளர்களையோ அசைக்க முடியாதெனவும் நீதியானதும் சுதந்திரமானது மான தேர்தலை நடத்துவதற்குத் தாங்கள் தயாராகவிருப்பதனால் அநாவசியமான வன்முறைகளைச் செய்து வீணான பிரச்சினைக்குள் சிக்க வேண்டாமெனவும் அமைச்சர் மைத்திரிபால எதிர்க்கட்சியினருக்கு எச்சரிக்கைவிடுத்தார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேக்கா வும் அவருடைய ஆதரவாளர்களான குண்டர்களும் ஆளும் கட்சியினை வன்முறைகளால் பயமுறுத்தி வெல்ல நினைப்பது வெறும் கனவு மாத்திரமே என்பதனை அவர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். தங்கல்லையிலும் மதுரங்குளியிலும் இருவர் உயிரிழப்பதற்கு காரணம் எதிர்க்கட்சியினர் முன்னெடுத்த வன்முறை களேயெனவும் அவர் குறிப்பிட்டார்.

துப்பாக்கிச்சூடு நடத்துவதாலும் குண்டு வைப்பதாலும் பிரசாரக் கூட்டங்களை குழப்பியடிப்பதனாலும் நாம் ஒரு போதும் எமது நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. எதிர்க்கட்சியினரின் இயலாமையின் வெளிப்பாடே இந்த வன்முறைகள். இத்தகைய தேர்தல் வன்முறைகளை கையாள்வதன் மூலம் நாட்டின் அரசியலை அதளபாதாளத்துக்கு தள்ள முயற்சிக்கின்றனர் எதிரணியினர் என்றும் அமைச்சர் கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இராணுவ ஆட்சி நடத்துவதே சரத் பொன்சேகாவின் ஒரே கனவு. அது வெறும் கனவு மாத்திரமே. ஒரு போதும் நனவாக வாய்ப்பில்லை.

பொன்சேகா முதலில் அரசியலில், நாட்டு மக்களிடம் பேசப் பழகிக் கொள்ள வேண்டும். இராணுவத்தில் அவருக்கு கீழே சேவையாற்றிய அதிகாரிகளிடம் பேசுவது போல மக்களிடம் பேசி அரசி யல் நடத்த முடியாது. அரசியல் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால் பொன்சேகா விசேட வகுப்புகளுக்கு செல்லலாம்.

எதிரணியினரான ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஜே.வி.பி.யினரும் வாய்க்கு வந்த மாதிரி பொய்ப்பிரசாரங்களை முன்னெடுத்தனால் தோல்வி நிச்சயமென்பது அவர்களுக்கே உறுதியாகிவிட்டது. அதனாலேயே வன்முறைகளை ஆரம்பித்துள்ளனர். நாம் இதற்காக ஒரு போதும் அஞ்சப் போவதில்லை. மக்களின் உரிமையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக நீதியான தேர்தலை நடத்துவதற்காக நாம் எதற்கும் முகம் கொடுக்கத் தயார்.

தங்கல்லையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பெண்ணின் கணவர் சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், நாங்கள் பரம்பரை பரம்பரையாக சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள்.

எதிர்க்கட்சியினரின் பிரசாரக் கூட்டத்தில் பொருட்கள் கொடுப்பதாக கூறியே எனது மனைவியை அதற்கு அழைத்துள்ளனர். பொருட்கள் கொடுக்கிறார்களென்றால் எனது மனைவி எந்த கூட்டத்துக்கும் செல்வாரென்றும் அவரது கணவர் கூறியுள்ளார்.
MONDAY, JANUARY 18, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment