மடுமாதா ஓகஸ்ட் திருவிழாவில் கலந்துகொள்ள வரும் பக்தர்கள் இறுதி நான்கு நாட்களுக்கு மாத்திரமே மடு புனிதப் பிரதேசத்தில் தங்க முடியுமென உயர்மட்டத் தரப்பில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
மடு தேவாலயத்துக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
இவ்விசேட கலந்துரையாடலில் மன்னார் மறை மாவட்ட ஆயர் உட்பட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் பிரார்த்தனையில் ஈடுபடும் வகையிலும் ஒழுங்குகள் இக்கூட்டத்தின் போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் எதிர்வரும் 06 ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரையில் மடு தேவாலய உற்சவத்துக்காக வரும் பக்தர்கள் மடு புனித பிரதேசத்தில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். உற்சவம் முடிந்ததும் பக்தர்கள் மதவாச்சி சோதனைச்சாவடிக்கூடாக அநுராதபுரம் சென்றுவிட வேண்டும்.
அதனைத் தொடர்ந்து 12 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையிலான இறுதி நான்கு நாட்களும் பக்தர்கள் மடு புனிதப் பிரதேசத்தில் தங்க அனுமதிக்கப்படுவர்.
ஓகஸ்ட் 06 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் மதவாச்சி சோதனைச் சாவடி திறந்திருக்கும்.
12, 13 ஆகிய தினங்களில் காலை 6 மணி முதல் மாலை 4 மணிவரையிலும், 14 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரையிலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் சோதனைச்சாவடி திறந்திருக்கும். விசேட உற்சவ தினமான 15 ஆம் திகதியன்று அதிகாலை மூன்று மணி முதல் மாலை 4 மணி வரையிலும் சோதனைச் சாவடியினூடாக பக்தர்கள் தேவாலயத்தை தரிசிக்க வந்துபோக முடியும்.
இதேவேளை 06 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையில் இரவு 10 மணிக்குப் பின்னரும் 14 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னரும், 15, 16 ஆகிய திகதிகளில் இரவு 10 மணிக்குப் பின்னரும், 17 ஆம் திகதி இரவு 2 மணிக்குப் பின்னரும் மதவாச்சி சோதனைச் சாவடி திறக்கப்பட்டிருக்கும். (29-07-2009)s
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment