இலங்கைக்கு வருகை தந்திருக்கும் அமெரிக்க புலம்பெயர் அகதிகளுக்கான மக்கள் பணிமனையின் உதவி இராஜாங்கச் செயலாளர் எரிக் பி. ஸ்வாட்ஸ், நிவாரணக் கிராமங்களில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை நேரில் கண்டு திருப்தி தெரிவித்துள்ளார்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு அரசாங்கத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகளை நேரில் கண்டறிவதற்கென இலங்கை வந்திருக்கும் உதவிச் செயலாளர் எரிக் டி. ஸ்வாட்ஸ், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர், நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட உள்ளிட்ட குழுவினர் சகிதம் நேற்று வவுனியாவுக்கு விஜயம் செய்தனர்.வவுனியா மெனிக்பாமில் வைத்து மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அமெரிக்க உதவிச் செயலாளர் மற்றும் குழுவினரை வரவேற்றார்.
இவர்களுக்கிடையிலான சந்திப்பின் போது, நிவாரணக் கிராமங்களில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கும் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் ரிசாட் மற்றும் வவுனியா அரசாங்க அதிபர் சார்ள்ஸ் ஆகியோர் உதவிச் செயலாளருக்கு விளக்கமளித்தனர்.உதவிச் செயலாளர் எரிக் பி ஸ்வார்ட்ஸ் அனைத்து நிவாரணக் கிராமங்களையும் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அங்கிருந்த மக்களுடனும் நேரடியாக உரையாடினார்.குறிப்பாக சுகாதார வசதிகளிலேயே கூடுதல் கவனம் செலுத்திய அமெரிக்க உதவிச் செயலாளர் அங்கிருக்கும் வைத்தியசாலையை பார்வையிட்டதுடன் வைத்தியருடனும் உரையாடினார்.
அருணாச்சலம் நிவாரணக் கிராமத்திலுள்ள மக்கள், தாங்கள் தமது சொந்த இடங்களில் விரைவில் மீளக்குடியமர்த்தப்படுவதையே விரும்புவதாக அமெரிக்க உதவிச் செயலாளரிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு அவர், உலகம் முழுவதிலுமுள்ள இடம்பெயர்ந்த மக்களின் ஆசை இதுதான்.நீங்கள் விரைவில் மீளக்குடியமர்த்தப்பட வாழ்த்துவதுடன் அதற்காக இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.
நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் முன்னெடுத்துவரும் இலங்கை அரசாங்கத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் அமைச்சர் ரிசாத்திடம் கூறியுள்ளார். (தினகரன் 27-07-2009)
Tuesday, July 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment