Friday, October 23, 2009

வறுமைக் கோட்டுக்குள் வாழ்வோரின் தொழிலை மேம்படுத்த உலகவங்கி ரூ.8.6 பில்லியன் உதவி


நாட்டில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களின் வாழ்வாதார தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் 8.6 பில்லியன் இலங்கை ரூபாவினை வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது.

செயற்படுத்தப்பட்டு வரும் சமுதாய அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிலை முன்னேற்றும் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளுக்காக இந்நிதி பயன்படுத்தப்படுமென நிதி, திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இச் செயற்திட்டத்தின் மூலம் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 800 பின்தங்கிய கிராமங்களிலுள்ள ஒரு மில்லியன் மக்கள் நன்மையடையவுள்ளனர். இதற்கான ஒப்பந்தம் நேற்று நிதி, திட்டமிடல் அமைச்சில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.

அரசாங்கத் தரப்பில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தரவும் உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் நாக் கோ இஷியும் இதில் கையொப்பமிட்டனர்.

உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் பதுள்ளை, மொனராகலை, அம்பாந் தோட்டை, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களை இலக்கு வைத்து இச்செயற்திட்டம் அமுல்படுத்தப்படும்.

இதன் பிரதான நோக்கம் கிராம அபிவிருத்தி, கிராமங்களுக்கிடையிலான தொடர்பை அபிவிருத்தி செய்தல், வாழ் க்கைத் தொழிலை முன்னேற்றல் என்ப னவாகும். தேச நிர்மாண மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கெமிதிரிய மன்றம், சமுர்த்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் இணைந்து இத்திட்டத்தை செயற்படுத்தவுள்ளது.
FRIDAY, OCTOBER 23, 2009 லஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment