பம்பலப்பிட்டி கடலில் நேற்று மாலை இளைஞரொருவர் அடித்துக் கொல் லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.
குறித்த இளைஞனை பொல்லினால் தாக்கியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து தடுப்புக் காவலில் வைக்குமாறு தான் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டிருப்ப தாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மெத்திவக்க கூறினார்.
இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர் கள் எவராகவிருப்பினும் கைது செய்யப்படும் அதேவேளை, பொலிஸாராயிருந்தாலும் பக்கச்சார்பின்றி உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
பம்பலப்பிட்டி கரையோரத்தில் நேற்று மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:-
கரையோரத்திலிருந்த இளைஞரொருவர் நேற்றுக்காலை முதல் அவ்வழியாக சென்ற வாகனங்கள் மற்றும் ரயில்கள் மீது கற்களை எறிந்து வந்ததாக கூறப்படுகிறது. இறுதியாக ரயில் ஒன்றின் மீது குறித்த இளைஞன் கற்களை வீசி எறிந்த போது அங்கிருந்தவர்கள் கூடி அவனை நையப்புடைத்துள்ளனர்.
அதனையடுத்து கரையோரத்தில் சனக்கூட்டம் அதிகமாகவே அங்கிருந்த ஒருவரினால் இச்சம்பவம் வீடியோ படமாக்கப்பட்டுள்ளது.
அதில் சிலர் கடலுக்குள் வைத்து குறித்த இளைஞனை பொல்லினால் தாக்க முயற்சிப்பதாயும் சிறிது நேரத்தில் அவன் உயிரிழந்த நிலையில் கடலுக்குள் தாழ்ந்து செல்வதாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
உண்மையில் இளைஞன் பொதுமக்களினால் கரையில் வைத்து தாக்கப்படும் போது தவறி கடலுக்குள் விழுந்தானா? அல்லது சம்பவ இடத்துக்கு விரைந்த பம்பலப்பிட்டி பொலிஸார் அவனை கைது செய்ய முற்பட்டவேளை தான் தப்புவதற்காக கடலுக்குள் குதித்தானா? என்பது குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மெத்திவக்க தெரிவித்தார்.
உயிரிழந்த இளைஞன் புத்தி சுவாதீனமற்றவன் எனத் தகவல்கள் கிடைத்துள்ளமையால் அது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனக் கூறிய பொலிஸ் பேச்சாளர், இளைஞன் பொல்லினால் தாக்குண்டதினால் தான் கொல்லப்பட்டானா என்பது குறித்தும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் நேற்று இரவுவரை மீட்கப்படவில்லை. மீட்புப் பணி கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
FRIDAY, OCTOBER 30, 2009 லக்ஷ்மி பரசுராமன்
No comments:
Post a Comment