தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு ஆறு மாவட்டங்களில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்வுகளை இன்றைய தினத்திலும் நடத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலேயே இன்று பிற்பகல் 3 மணி முதல் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடத்தப்படவி ருப்பதாக நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் காமினி ஹெட்டியாராச்சி நேற்று தெரிவித்தார்.
இடர்முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சில் நேற்று மாலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்தார்.
சுனாமி அனர்த்தம் எதிர்காலத்தில் இடம்பெறுமாயின் அதற்கு மக்கள் தைரியத்துடன் முகம் கொடுக்க வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டே இந்த முன் னெச்சரிக்கை ஒத்திகையை இன்று நட த்துவதாக கூறிய மேஜர் ஜெனரல் காமினி ஹெட்டியாராச்சி, தேசிய பாது காப்பு தினமான டிசம்பர் 26 ஆம் திகதி இந்த ஒத்திகையை 11 மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.
பூகம்பம் இடம்பெற்று சுனாமி ஏற்படக் கூடிய ஆபத்து இருப்பதாகக் கொண்டே இன்று 29 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு எமது ஒத்திகை நிகழ்வை ஆரம்பிக்கவுள்ளோம். அனர்த்த முகாமைத்துவ நிலையங்களுக்கூடாக குறித்த 06 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அதனூடாக பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் அங்கிருந்து கிராம சேவகர் பிரிவுகளினூடாக பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்கப்படும். சுமார் ஒரு மணித்தியாலத்துக்குள் மக்களை பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்வதே இச்செயற்பாட்டின் பிரதான நோக்கமெனவும் அவர் கூறினார்.
தொலைபேசி, குறுந்தகவல், மின்னஞ்சல், தொலைபண்ணி ஆகியவற்றினூடாக நாளை குறித்த ஆறு மாவட்டத்துக்கும் இது தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல் அனுப்பி வைக்கப்படும்.
கொழும்பில் லுனாவை, காலியில் பெரலிய, அம்பாந்தோட்டையில் பட்டஅத்த தெற்கு, அம்பாறையில் சாய்ந்தமருது, மட்டக்களப்பில் கல்குடா, திருகோணமலையில் நிலாவெளி ஆகிய பிரிவுகளிலேயே சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை இன்று நடத்தப்படும்.
இதற்கு முன்னர் இரு தடவைகள் இது போன்ற ஒத்திகை நிகழ்வுகளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
THURSDAY, OCTOBER 29, 2009 லக்ஷ்மி பரசுராமன்
No comments:
Post a Comment