Monday, March 22, 2010

வாகன விபத்துகளில் அறுவர் பலி


நாட்டின் வெவ்வேறு இடங்களில் நேற்றும் நேற்று முன்தினமும் இடம்பெற்ற வெவ்வேறு வாகன விபத்துக்களில் அறுவர் கொல்லப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி நேற்றுத் தெரிவித்தார்.

மாரவிலை, பண்டாரவளை ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவருர் உயிரிழந்திருக்கும் அதேவேளை மாத்தளை, அம்பலாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நால்வர் கொல்லப்பட்டிருப்ப தாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

மாரவிலையிலிருந்து நீர்கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த வான் ஒன்றின் சாரதி நித்திரை கொண்டதன் காரணமாக எதிரே வந்த லொறியொன்றுடன் மோதுண்டதில் சாரதியின் மனைவி உயிரிழந்துள்ளார். இவர் கொஸ்கஸ் சந்தியைச் சேர்ந்த சத்துரிக்கா நிரஞ்சலா பெர்ணாந்து (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காயமடைந்த வான் சாரதி மாரவிலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இதேவேளை, நேற்று அதிகாலை பண்டாரவளை பெரகலை வீதியில் லொறியொன்று பாதையை விட்டு குடை சாய்ந்து பள்ளத்தில் விழுந்ததில் லொறிச் சாரதி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டிரு ப்பதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன், நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் தம்புள்ளையிலிருந்து மாத்தளை நோக்கிச் சென்ற வானொன்று மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். தெல்தெனிய (இ. போ. ச) டிப்போவின் முகாமையாளரும் அவரது மகனுமே உயிரிழந்துள்ளனர். வான் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சூரியவெவ பிரதான வீதியில் புதிதாக மின்கம்பங்கள் பொருத்தும் வேளையில் இருவர் ஈடுபட்டிருந்தவேளை சீமெந்து மூடைகளை எற்றி வந்த லொறியொன்று மின்கம்பங்களை மோதியதில் அவை உடைந்து வீழ்ந்ததில் அதில் நின்று வேலை பார்த்த இரண்டு இளைஞர்களும் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.
இருவரும் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்திருப்பதாக கூறிய பொலிஸ் பேச்சாளர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
MONDAY, MARCH 22, 2010லஷ்மி பரசுராமன்,

No comments:

Post a Comment