Monday, March 29, 2010

சாவகச்சேரி மாணவன் கடத்திப் படுகொலை:ஒருவர் கைது; மற்றொருவரை தேடி வலைவிரிப்பு



சாவகச்சேரியில் மாணவரொருவன் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதனுடன் தொடர்புடைய இன்னுமொரு சூத்திரதாரியை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி நேற்றுத் தெரிவித்தார்.

ஒருகோடி ரூபா கப்பம் கோரி கடத்தப்பட்ட பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீசாலையைச் சேர்ந்த க.பொ.த. சாதாரணதர மாணவனான அருள்விநாயகம் கபில்நாத் என்பவரே இவ்வாறு கடத்தி கொலை செய்யப்பட்டவராவார்.

கப்பம் கோரி குறித்த மாணவன் இனந்தெரியாத குழுவினரால் இருவாரங் களுக்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்டார். தனது மகனை காப்பாற்றுவதற்காக தந்தை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தவேளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் பொலிஸார் இவர்கள் மீது நடத்திய தீவிர விசாரணைகளின் பயனாக அவர்களுள் ஒருவரினால் வழங்கப்பட்ட வாக்கு மூலத்துக்கமையவே சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் சாவகச்சேரி நீதவான் ரி.ஜே. பிரபாகரன் முன்னிலையில் சங்கத்தானை டச் வீதியிலுள்ள வீடொன்றின் பின்புறமிருந்து குறித்த மாணவன் சடலமாக மீட்கப் பட்டுள்ளார்.

வீட்டின் உரிமையாளரும் அவரது மனைவியும் வீட்டில் இல்லாத போதே சடலம் அங்கே புதைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

சடலம் மீட்கப்பட்டதையடுத்து தகவல் வழங்கிய மேற்படி நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன் அதனுடன் சம்பந்தப்பட்ட இன்னுமொரு சூத்திரதாரியை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்தி ருப்பதாகவும் அவர் கூறினார்.
MONDAY, MARCH 29, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment