Wednesday, July 29, 2009

பஹ்ரேன் பிரதமர் தலைமையில் உயர்மட்ட குழு இலங்கை வருகை:விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு இருதரப்பு பேச்சுக்கள் ஆரம்பம்

பஹ்ரேன் பிரதமர், பிரதிப் பிரதமர் உட்பட உயர்மட்டக் குழுவினர் நேற்று மாலை இலங்கை வந்தனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டின் பிரதமர் செய்க் கலிபா பின் சல்மான் அல்- கலிபா மற்றும் பிரதிப் பிரதமர் செய்க் மொஹமட் பின் முபாரக் அல்-கலிபா ஆகியோருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கை வந்திருக்கும் பஹ்ரேன் பிரதமர், பிரதிப் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் நேற்று மாலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை சந்தித்து இரு தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டில் அமைதி நிலைநாட்டியிருப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, இலங்கை வந்திருக்கும் பஹ்ரேன் பிரதமர் வாழ்த்துக்களை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொண்டதாக அமைச்சர் போகொல்லாகம கூறினார்.

சந்திப்பையடுத்து வெளிவிவகார அமைச்சர் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கையில் கூறியதாவது :-

இடம்யெர்ந்துள்ளவர்களை மீளக் குடியமர்த்துவதற்கு பஹ்ரேன் அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை பெற்றுத்தருமென அந்நாட்டின் பிரதமர் உறுதியளித்தார்.

அரசாங்கத்தின் 180 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக நான் அவர்களிடம் விளக்கிக் கூறினேன். அதனை நன்கு புரிந்துகொண்டதாக கூறிய பஹ்ரேன் பிரதமர், அதனை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு அனைத்து வளைகுடா நாடுகளினதும் ஒத்துழைப்பை பெற்று தருவதாகவும் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தக மற்றும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது குறித்தும் பேச்சுவார்த்தையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

பெரும் எண்ணிக்கையான இலங்கையர்கள் பஹ்ரேனில் சேவையாற்றி வருகின்றார்கள். எதிர்காலத்தில் அங்கே சேவையாற்றும் இலங்கையர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது கலந்தாலோசிக்கப்பட்டது என்றும் வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம கூறினார்.

இதேவேளை, பஹ்ரேன் பிரதமர் மற்றும் பிரதிப் பிரதமர் ஆகியோர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதோடு இருதரப்பு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவர். (29-07-2009)

No comments:

Post a Comment