Monday, May 31, 2010

யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டையில் இந்திய பிரதி உயர்ஸ்தானிகராலயங்கள்? இரு நாடுகளின் உயர்மட்ட குழுக்கள் ஆராய்வு



இலங்கையில் புதிதாக இரண்டு இந்திய பிரதி உயர் ஸ்தானிகராலயங்களை ஸ்தாபிப்பது தொடர்பாக இரு நாடுகளினதும் உயர்மட்டக் குழுக்கள் ஆராய்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
யாழ்ப்பாணத்திலும் அம்பாந் தோட்டையிலுமே இந்திய பிரதி உயர் ஸ்தானிகராலயங்கள் ஸ்தாபிக்கப்படுவது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது.

கண்டியில் தற்போது இயங்கி வரும் இந்திய பிரதி உயர் ஸ்தானிகராலயத்துக்கு மேலதிகமாகவே யாழ்ப்பாணத்திலும் அம்பாந்தோட்டையிலும் இவற்றை நிறுவுவது தொடர்பாக இரு நாடுகளிடையிலும் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இவ் விடயம் தொடர்பாக ஆராயப்படுமெனவும் எதிர்பார்க்கப்ப டுகிறது.
MONDAY, MAY31, 2010லக்ஷ்மி பரசுராமன்

Thursday, May 27, 2010

ஜீ. எல். பீரிஸ் - ஹிலாரி இன்று சந்திப்பு



அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இச்சந்திப் பானது திட்டமிட்டபடி வொஷிங்டனிலுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலகத்தில் (இலங்கை நேரப்படி) இன்று மாலை நடைபெறவிருப்பதாக அமைச்சு வட்டார ங்கள் தெரிவித்தன.

இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனின் விசேட அழைப்பினையேற்றே வெளிவிவகார அமைச்சர்ஜீ. எல். பீரிஸ் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த 23ம் திகதி அமெரிக்காவுக்குப் பயணமானார்.

அமைச்சரின் அமெரிக்காவுக்கான விஜயத்தையடுத்து, அந்நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான பயண எச்சரிக்கை அமெரிக்க அரசாங்க த்தினால் திரும்பப் பெறப்பட்டுள்ளமை யானது பாரிய திருப்பு முனையாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தை கடந்த 25ம் திகதி செவ்வாய்க்கிழமை சென்றடைந்த அமைச்சர் பீரிஸ் ஐக்கிய நாடுகள் சபையின் செயலகத்துக்கு விஜயம் செய்ததுடன் அங்கு ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சு நடத்தினார்.

ஐ. நா. செயலாளர் நாயகத்தின் பிரதான ஆலோசகர் விஜே நம்பியார், பிரதி செயலாளர் நாயகம் ஷின் பாஸ்கோ உள்ளிட்ட ஐ. நாவின் பல சிரேஷ்ட அதிகாரிகளையும் அமைச்சர் சந்தித்து நாட்டின் சமாதானம், அபிவிருத்தி, புனர்நிர்மாணம், மீள்குடியேற்றம் ஆகியவை குறித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்புக்களில் அமைச்சருடன் ஜ. நா.வின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி பாலித கொஹன, பிரதி நிரந்தர பிரதிநிதி பந்துல ஜயசேகர மற்றும் கவுன்சிலர் மக்ஸ்வெல் கீகல் ஆகியோரும் பங்குபற்றினர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் பீரிஸ் நியூயோர்க்கில் உள்ள சர்வதேச தந்திரோபாய கற்கைகளுக்கான கேந்திரத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டார். இதில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்; இலங்கை மக்கள் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் காணமுடியாத சந்தோஷத்தை தற்போது அனுபவித்து வருவதாக கூறினார்.

சமாதான முன்னெடுப்பு, நிறைவடையும் கட்டத்தில் உள்ள மீள்குடியேற்றம், குறிப்பாக வடக்கில் அமுல்படுத்தப்பட்டு வரும் புனர்நிர்மாணம், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு இதனால் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சாதகமான சூழ்நிலை, இலங்கை யாப்பில் புதிய திருத்தங்களை மேற்கொள்ளக்கூடிய சாத்தியக்குகூறுகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது அமெரிக்காவின் தலைநகரான வொஷிங்டன் டி.சியை வந்தடைந்திருக்கும் அமைச்சர் பீரிஸ், வெளியுறவு அலுவல்களுக்கான அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதி ஹோவோர்ட் பேர்மன், இரா ஜாங்க உப குழுவின் தலைவர் நீட்டா லோகேய், அமெரிக்க காங்கிரஸ் உறுப் பினர்கள் மற்றும் செனற்சபை உறுப் பினர்களையும் சந்தித்துப் பேச்சு நடத் தியுள்ளார். வொஷிங்டனுக்கான இலங்கைத் தூதுவர் ஜஸிய விக்கிரமசூரியவும் இதில் கலந்துகொண்டார்.
FRIDAY, MAY 28, 2010லக்ஷ்மி பரசுராமன்

நாடு முழுவதும் கண்கவர் வெசாக் கொண்டாட்டங்கள்



வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் இம்முறை வெசாக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. கொழும்பு உள்ளிட்ட அனைத்து பிரதான நகரங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும் பாரிய அலங்கார பந்தல்கள், வெளிச்சக் கூடுகள், கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

ஜுன் 08 ஆம் திகதி வரை வெசாக் உற்சவத்திற்கான காலப் பகுதியாக அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் வெளியிடங்களிலிருந்து அலங்காரப் பந்தல்களை பார்வையிடுவதற்காக கொழும்பு வருவோரின் பாதுகாப்புக் கருதி பெரும் எண்ணிக்கையான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

புத்த பெருமானின் பிறப்பு, இறப்பு மற்றும் பரி நிர்வாணம் ஆகிய மூன்றையும் குறிக்கும் இன்றைய தினத்தை முன்னிட்டு கதிர்காம் கிரி விஹாரை, தலதா மாளிகை, சிவனொளிபாதமலை உள்ளிட்ட அனைத்து விகாரைகளிலும் விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றதுடன் பெளத்தர்கள் சில் அனுஷ்டிப்பில் ஈடுபட்டதனையும் காண முடிந்தது.

கொழும்பு பெளத்தாலோக்க மாவத்தை, கங்காராமை வீதி ஆகியன வெசாக் பிராந்தியங்களாக பிரகடனம் செய்யப்பட்டு ள்ளன. லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் விசேட வெசாக் நிகழ்ச்சிகள் நிறுவனத்தின் முன்றலில் இடம் பெற்றன.

நேற்றைய நிகழ்ச்சிகளை தகவல் ஊடகத்துறையமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆரம்பித்து வைத்தார். கொட்டாவை பகுதியில் 20 வது வருடமாக இம்முறையும் பாரிய அலங்கார பந்தலொன்று அமைக்கப்பட்டுள்ளது. காய்ந்த இலை, கொடிகளைக் கொண்டே இப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தமை அதன் சிறப்பியல்பாகும்.

பொரளையில் 64 அடி உயரத்திலும் 55 அடி அகலத்திலுமாக அலங்கார பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தெமட்டகொடை பிரதேசத்தில் 36 வது தடவையாக இம்முறை பந்தல் போடப்பட்டுள்ளது. பலாமரத்தடிச் சந்தியில் 8 வது தடவையாக 27 ஆயிரம் மின் விளக்குகளுடன் பந்தல் போடப்பட்டுள்ளது. பாலத்துறையில் 58 வது தடவையாக இம்முறை 70 அடி உயரத்தில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

முல்லேரியாவில் 10 ஆயிரம் மின் விளக்குகளுடன் 40 அடி உயரத்திலும் 30 அடி அகலத்திலுமாக அலங்கார பந்தல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர புறக்கோட்டை, இராஜகிரிய, பிலியந்தலை, இரத்மலானை, மாலபே, அத்துருகிரிய என பல்வேறு இடங்களிலும் வெசாக் பந்தல்களையும், தான சாலைகளையும் காண முடிந்தது.

வெளியிடங்களைச் சேர்ந்த மக்கள் குடும்பம் குடும்பமாக வேன்களிலும் லொறிகளிலும் ட்ரக்டர்களிலும் வந்து அலங்கார வேலைப்பாடுகளை பார்வையிட்டுச் சென்றதுடன் தான சாலைகளிலும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம்
இதேவேளை, வெசாக் உற்சவத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் 700 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ். பாதுகாப்புக்கான கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இம்முறை வெசாக் உற்சவத்தை சிறப்பாக நடத்துவதற்கு யாழ். பாதுகாப்பு பிரிவு தலைமையகமும், பொலிஸ் தலைமையகமும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.

யாழ். பாதுகாப்பு பிரிவு தலைமையகம், யாழ். கோட்டை, துரையப்பா விளையாட்டரங்கு மற்றும் யாழ். பொது நூலகம் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண நகரின் மணிக் கூண்டு கோபுரத்துக்கு முன்னால் கண்கவர் வெசாக் தோரணம் அமைக்கப்பட்டுள்ளது.

யாழ். கோட்டை, துரையப்பா வி¨ளாயட்டரங்கு மற்றும் யாழ். பொது நூலகத்துக்கு இடைப்பட்ட பிரதேசம் நேற்று 27 ஆம் திகதி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தெற்கில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்காக வெசாக் வலயமாக மாற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இம் முறை நடைபெறும் வெசாக் உற்சவத்துக்கு நகரிலுள்ள வர்த்தகர்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்க தீர்மானித்துள்ளனர்.
தமது வர்த்தக நிலையங்களை வர்ண மின்சார பல்புகளால் அலங்கரித்துள்ளதுடன் பல்வேறு அலங்காரங்களையும் செய்துள்ளனர்.
FRIDAY, MAY 28, 2010லக்ஷ்மி பரசுராமன்

Wednesday, May 26, 2010

உள்ளூர் உல்லாச பயணிகளுக்கும் வழிகாட்டிகளுக்குமிடையில் மோதல்:வில்பத்துவில் சம்பவம்; ஐவர் காயம்; ஐவர் கைது


வில்பத்து தேசிய சரணாலயத்தை பார்வையிடச் சென்ற உள்ளூர் உல்லாச பயணிகளுக்கும், வழிகாட்டிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஐவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

சரணாலயத்தை பார்வையிடச் சென்ற உள்ளூர் உல்லாச பயணிகள் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதையடுத்து அவர்களை கட்டுப்படுத்தச் சென்ற வழிகாட்டிகளுக்கும் பயணிகளுக்குமிடையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளது.

இதில் சரணாலயத்தின் வழிகாட்டிகள் இருவர் உட்பட ஐவர் காயமடைந்து நொச்சியாகம வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருப் பதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார். குடிபோதை யிலிருந்த உல்லாச பயணிகள், சரணாலய வழிகாட்டிகள், அவர்களது வாகனங்கள், வாகன சாரதி ஆகியோரை தாக்கியிருப் பதாகவும் அவர் கூறினார்.
WEDNESDAY, MAY 26, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, May 24, 2010

பதிவு செய்யப்படாத தெரு விளக்குகளால் வருடாந்தம் ரூ. ஒன்றரை பில்லியன் நட்டம்:ஜூன் 1 முதல் இவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கை



பதிவு செய்யப்படாத தெரு விளக்குகளி னால் வருடமொன்றுக்கு ஏற்படும் ஒன்றரை பில்லியன் ரூபா நட்டத்தினை இனிமேலும் பொறுப்பேற்க இலங்கை மின்சார சபை தயாரில்லையென மின்சக்தி வலு சக்தியமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஜூன் முதலாம் திகதி முதல் இவ்வாறான தெரு விளக்குக ளுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக் கப்படுமெனவும் அமைச்சர் கூறினார்.

உரிய முறையில் பதிவு செய்யப்படாத சுமார் 3 இலட்சம் வரையிலான தெரு விளக்குகள் நாடளாவிய ரீதியில் இயங்கி வருவது கணக்கெடுப்புகளிலிருந்து தெரிய வந்துள்ளது. தெரு விளக்குகளுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் 150 ஜிகா வெக்ற் மின்சாரத்தில் 52 ஜிகா வெக்ற் மின்சாரம் பதிவு செய்யப்படாத தெரு விளக்குகளுக்கே செலவிடப்படுகின்றன. இந்நிலை தொட ருமாயின் மின் விநியோகத் திட்டம் முழுவதுமே சரிவடையும் அபாயத்தை எதிர்நோக்க நேரிடுமெனவும் அமைச்சர் சம்பிக்க சுட்டிக்காட்டினார்.

இலங்கை மின்சார சபையில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்ட கருத்துகளை கூறி னார். அமைச்சருடன் இலங்கை மின்சார சபைத் தலைவர் வித்யா அமரபால, நடவடிக்கைகள் பணிப்பாளர் ரொஷான் குணவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி மன்றங்களினூடாகவே பெரும்பாலான தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே முதற் கட்டமாக நாம் இதற்கு உடனடி நடவடிக்கையெடுக்குமாறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிக்கவுள்ளோம். இலங்கை மின்சார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட 3 இலட்சத்து 40 ஆயிரத்து 308 தெரு விளக்குகள் உள்ளன. இதனைத் தவிர லெக்கோ நிறுவனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 60 ஆயிரம் தெரு விளக்குகள் உள்ளன.
இவற்றைத் தவிர்ந்த ஏனையவை அனைத் தும் உரிய முறையில் பதிவு செய்யப்படாத தெரு விளக்குகளாகவே கணிக்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் கூறினார்.
TUESDAY, MAY 25, 2010லக்ஷ்மி பரசுராமன்

செட்டிக்குளம் நிவாரணக் கிராம விவகாரம்:முறையாக முன் அனுமதி பெறாததனாலேயே கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு அனுமதி மறுப்பு



செட்டிக்குளம் நிவாரணக் கிராமங் களுக்குள் செல்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் பாதுகாப்பு அமைச்சில் முறையாக முன்அனுமதி பெறாததன் காரணமாகவே அவர்க ளுக்கான அனுமதி மறுக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜென ரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

“நிவாரணக் கிராமங்களுக்குள் செல் வதற்கென ஒரு நடைமுறையிருக்கிறது.
அதன்படி, பாதுகாப்புத் தரப்பில் அனுமதி பெற்றால் எவ்வித சிரமமுமின்றி
முகாமுக்குள் உட்செல்லமுடியும்” எனவும் இராணுவ பேச்சாளர் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், பாதுகாப்பு அமைச்சிடம் உரிய முறையில் முன்அனுமதியை பெற்றுக்கொள்வார் களாயின் அவர்கள் நிவாரணக் கிரா மங்களுக்குச்சென்றுவர அனுமதிக் கப்படுவார்கள். அதற்கான அனுமதியை வழங்குவதில் வேறு எவ்வித பிரச்சி னைகளும் இல்லையெனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

‘அவர்கள் மீண்டும் உரிய முறையில் விண்ணப்பித்தால் நிவாரணக் கிராமங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும்’ என்கிறார் இராணுவப் பேச்சாளர்.

கூட்டமைப்பைச் சேர்ந்த 12 பேர் கொண்ட எம்.பிக்கள் குழு கடந்த வெள்ளிக்கிழமை முதல் வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்ற ப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்துக்கு விஜயம் செய்த இந்தக் குழுவினர் அங்கிருந்து ஒட்டுசுட்டான், தண்ணீர் ஊற்று, முல்லைத்தீவு போன்ற பகுதி களுக்கும் சென் றனர்.

வவுனியா வடக்கு நெடுங் கேணி பிரதேச செயலகப் பிரிவு க்குச் சென்றிருந்த இவர்கள், அங்கே மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் குறை, நிறைகளை கேட்டறிந்து கொண் டனர்.

அதனைத் தொடர்ந்து செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களை பார்வையிடு வதற்காக சென்றிருந்தபோது நிவாரணக் கிராமத்துக்குள் செல்வதற்கான அனுமதி அவர்களுக்கு மறுக்கப்பட்டது.

அது தொடர்பாக இராணுவப் பேச்சாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பாதுகாப்பு அமைச்சிடம் உரிய முறையில் முன் அனுமதி பெறாமை மாத்திரமே இவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டமைக்கான காரண மென குறிப்பிட்ட இராணுவப் பேச் சாளர், இவர்களது வருகை குறித்து ஏற்கனவே அமைச்சுக்கு அறிவித்தி ருப்பார்களாயின் இதில் எவ்வித சிக் கல்களும் எழுந்திருக்காது எனவும் தெரிவித்தார்.
MONDAY, MAY 24, 2010லக்ஷ்மி பரசுராமன்

வெள்ள நிவாரணப் பணிகளில் 2000 இராணுவ வீரர்கள்:8000 உணவுப் பொதிகள் நேற்று பங்கீடு


வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கும் பகுதிகளில் இராணுவத்தினர் அயராது நிவாரணப் பணிகளை முன் னெடுத்து வருவதாக இராணுவப் பேச் சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

கொழும்பு, களுத்துறை, புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவ ட்டங்களில் சுமார் 2 ஆயிரம் இராணு வத்தினர் வெள்ளத்தினால் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரணப் பணிகளை வழங்கி வருகின்றனர். கட்டுநாயக்க பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இராணுவத்தினர் நேற்று எண்ணாயிரம் சமைத்த உணவுப் பொதிகளை பகிர்ந்தளித்த தாகவும் இராணுவப் பேச்சாளர் கூறினார்.

வெள்ளத்தில் மிதந்து வரும் கட்டைகள், மரங்கள் மரக் கிளைகள் மற்றும் ஏனைய குப்பைக் கூளங் களை அகற்றும் பணியில் கடற் படையினரும் இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
MONDAY, MAY 24, 2010லக்ஷ்மி பரசுராமன்

Wednesday, May 19, 2010

கொழும்பு துறைமுகத்தில் நேற்றிரவு இரசாயன வாயு கசிவு


கொழும்பு துறைமுகத்தில் நேற்று இரவு 8.35 மணியளவில் திடீரென ஏற்ப ட்ட இராசாயன வாயு ஒழுக்கின் காரண மாக கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவியது.

துறைமுகத்தின் அபாயகரமான பொருட்கள் கையாளும் பிரிவிலிருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து குறித்த இரசாயன வாயு ஒழுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் துறைமுகத்தை அண்மித்த பகுதிகளில் வானில் கரும்புகை மண்டலம் தோன்றியதுடன் சுவாசிப்பதில் பெரும் அசெளகரியங்கள் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். கொள்கலன் ஒன்றி லிருந்து நைட்ரிக் அமில வாயு ஒழுக்கின் காரணமாக புகை மாத்திரமே தோன்றியதா கவும், இதனால் தீ ஏற்படவில்லையெனவும் துறைமுகத்தில் கடமையிலிருந்த அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இரசாயன வாயு ஒழுக்கின் காரணமாக உயிர்களுக்கோ உடமைகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைக்கும் படையினர் புகையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
WEDNESDAY, MAY 19, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, May 17, 2010

புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளோருக்கு பதிவுத்திருமணம்



புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள முறையான திருமணப் பதிவை மேற்கொள் ளாத தம்பதியினருக்கு சட்டபூர்வமான முறையில் திருமணத்தை நடத்தி வைப்ப தற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப் படுகின்றன.

வடக்கில் யுத்தம் இடம்பெற்று வந்த காலப்பகுதிகளில் கோயில் மற்றும் தேவாலயங்களில் திருணம் செய்துகொண்ட பல தம்பதியினர் தற்போது எமது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான புனர் வாழ்வு நிலையங்களில் பயிற்சி பெற்று வருகின்றனரென ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

இத்தம்பதியினர் சேர்ந்து வாழ விரும்பும் பட்சத்தில், அவர்களது பெற்றோர் அல்லது உறவினர்களை அழைத்து முறையே பேச்சு நடத்தி, அனைவருக்கும் ஒரே தினத்தில் திருமணம் நடாத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியா கலாசார மண்டபத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி இத்திருமண வைபவத்தை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
MONDAY, MAY 17, 2010லக்ஷ்மி பரசுராமன்

மின்னல் தாக்கி இருவர் பலி



செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் சனிக்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்திருப்பதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

ஹபரவெவ எனும் பிரதேசத்திலுள்ள வயல்வெளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஐவரே மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இச்சம்பவம் மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் செவனகல பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரதிலக்க (45) மற்றும் ஜயந்த (44) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். செவனகல பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
MONDAY, MAY 17, 2010லக்ஷ்மி பரசுராமன்

கனகராயன் குளம், நெடுங்கேணி:மீளக்குடியமர்ந்தோருக்கு சொந்தக் காணியில் வீடுகள்


கனகராயன் குளம் உட்பட நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு அவர்களது சொந்த காணிகளில் சுமார் 600 நிரந்தர வீடுகள் கட்டப்படவுள்ளன.

யூ. என். ஹெபிடாட் நிறுவனம் உட்பட அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த வீடுகளை கட்டிக்கொடுக்க முன்வந்துள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

நெடுங்கேணி பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுகான வாழ்வாதார உதவிகளையும் பெற்றுக் கொடுப்பதுடன் மலசலகூட வசதிகளுடன் கூடிய நிரந்தர வீடுகளும் அமைக்கப்படவுள்ளன.

நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் குடிநீர் விநியோகத் திட்டமொன்று 100 மில். ரூபா செலவில் முன்னெடு க்கப்படவுள்ளது. என்ரிப் நிறுவனம் இதனை நடைமுறைப்படுத்தவு ள்ளது. 43 மில். ரூபா செலவில் பஸ் நிலையம், பொதுச் சந்தைக் கட்டடம் என்பவற்றுடன் முதல் தர தபாலகமும் கட்டப்படவுள்ளன.

இப்பகுதியில் அரச ஊழியர்களுக்கென பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு 30 மில்லியன் ரூபா செலவில் கூட்டு விடுதிகளை கட்டுவதற்கும் ஏற்பாடு செய்துள்ளது.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் மீளக்குடியேறவுள்ள மக்களின் மேட்டு நிலம் மற்றும் வயற் காணிகளை துப்புரவு செய்வதற்கும் உலக வங்கி நிதி உதவியை வழங்க
MONDAY, MAY 17, 2010லக்ஷ்மி பரசுராமன்

Thursday, May 13, 2010

வத்தளையில் 1 1/2 வயது குழந்தை மாயம்; தீவிர விசாரணை


வத்தளை பள்ளியாவத்தையைச் சேர்ந்த தம்பதியினரின் காணாம ற்போன ஒன்றரை வயது குழந்தை தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளைமுன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
சித்தும் சத்கார எனும் இந்த குழந்தை தனது பாட்டியுடன் வீட்டிலிருந்த வேளை கடந்த 04 ஆம் திகதி காணாமற் போயுள்ளது.

தாயும் தந்தையும் வேலைக்குப் போகும் நிலையில் குறித்த குழந்தை பாட்டியுடன் வீட்டிலிருப்பது வழக்கம்.

அன்றைய தினம் வீட்டு முன்றலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமற் போயுள்ளது. இவர்களது வீட்டுக்கு முன்னால் 20 அடி ஆழமான களனி கங்கை ஆறு காணப்படுகிறது.

குழந்தை திட்டமிட்டு யாரானேனும் கடத்தப்பட்டுள்ளதா அல்லது களனி அவற்றில் விழுந்து காணாமற் போயுள்ளதா என்ற சந்தேகம் பொலிஸாருக்கு எழுந்துள்ளது. கடற் படையினரின் ஒத்துழைப்புடன் களனியாற்றில் தேடுதல் நடத்தப்பட்டு வரும் அதேவேளை பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
THURSDAY, MAY 13, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, May 10, 2010

அரச ஆஸ்பத்திரிகளில் 319 வகை மருந்துகளுக்கு தட்டுப்பாடுவிமானப்படை விமானங்கள் மூலம் மருந்து இறக்குமதி:


அரச வைத்தியசாலைகளில் தற் போது நிலவி வரும் மருந்து தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் வெளிநாட்டிலிருந்து மரு ந்துகளை இறக்குமதி செய்ய இலங்கை விமானப் படையினரின் விமானங்கள் பயன்படுத்தப்பட விருப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித் துள்ளார்.

உடனடியாக மருந்துகளை இந்தி யாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்டு இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான சரக்கு விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளனவெனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த காலங்களில் அரச வைத்திய சாலைகளில் மருந்துகளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு தொடர்பாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் பாதுகாப்புச் செயலாளரினதும் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து, இலங்கை விமானப் படையினரின் விமானங்களை பயன்படுத்தி தேவை யான மருந்துகளை உடனடியாக இறக்குமதி செய்யும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் இரண்டு வாரங்களினுள் அரச வைத்திய சாலைகளில் நிலவும் மருந்துகளுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியுமெனவும் சுகாதார அமைச்சு நம்பிடிக்கை தெரிவித்து ள்ளது.
அரச வைத்தியசாலைகளில் 319 வகையான மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதில் 44 வகையான மருந்துகள் கப்பல் மூலம் இலங்கை துறைமுகத்தை வந்தடைந்து ள்ளன.

ஏனைய 27 வகை மருந்துகள் இலங்கை மருந்தக கவுன்சிலிலிருந்து விலைக்கு வாங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவற்றைத் தவிர்த்த ஏனைய மருந்து கள் இந்தியாவிலிருந்து உடனடியாக கொண்டுவரப்பட வுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான விமானங்கள் மூலம் மருந்துகள் கொண்டு வரப்படவு ள்ளமை இதுவே முதற்தடவை யென்பது குறிப்பிடத்தக்கது.
MONDAY, MAY 10, 2010லக்ஷ்மி பரசுராமன்

Friday, May 7, 2010

ஷெல் - ரூ. 219, லாஃப் - ரூ. ௩௨௩:சமையல் எரிவாயுக்களின் விலைகள் அதிகரிப்பு



சமையல் எரிவாயுக்களின் விலைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இதன்படி ஷெல் காஸின் விலை 219 ரூபாவாலும், லாஃப் காஸின் விலை 323 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நேற்று நள்ளிரவு முதல் இவைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக கூட்டுறவு உள்ளூர் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நேற்றுத் தெரிவித்தார்.

இதற்கமைய ஷெல் சமையல் எரிவாயு வொன்றின் புதிய விலை 1769 ரூபாவாகவும், லாஃப் சமையல் எரிவாயு வின் புதிய விலை 1744 ரூபாவாகவும் இன்று முதல் விற்பனை செய்யப்படவுள்ளது.

சமையல் எரிவாயு விலையதிகரிப்புத் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று அமைச்சில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்புக் காரணமாகவே ஷெல் மற்றும் லாஃப் சமையல் எரிவாயுக்களின் விலையில் மாற்றங்களை செய்ய வேண்டி ஏற்பட்டிருப்ப தாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
FRIDAY, MAY 07, 2010லக்ஷ்மி பரசுராமன்

Wednesday, May 5, 2010

30 நாடுகள் பங்கேற்கும் ஆசிய பசுபிக் மாநாடு ஜூனில் கொழும்பில் ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பண நிகழ்வு



ஆசிய பசுபிக் அமைப்பின் 9வது வட்ட மேசை மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கையில் நடை பெறவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவிருக்கும் இந்த மூன்று நாள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சுமார் 32 நாடுகளைச் சேர்ந்த 150க்கு மேற்பட்டோர் இலங்கை வரவுள்ளனர். இம் மாநாடு தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பு இன்டர்கொன்டினல் ஹோட்டலில் நடைபெற்றது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சின் செயலாளர் திலக் கொலரே, அமைப்பின் தலைவர் கலாநிதி அந்தனி ச்யு, சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளர் பத்மினி பட்டுவிட்டகே, 09வது வட்டமேசை மாநாட்டுக்கு தலைமை வகிக்கவிருக்கும் பொறியி யலாளர் சேன பீரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஸ்திரமான நுகர்வு மற்றும் உற்பத்தி எனும் தொனிப்பொருளிலேயே இம்மாநாடு நடத்தப்படவுள்ளது. ஆசிய பசுபிக் வட்டமேசை மாநாடு தெற்காசிய நாடொன்றில் நடைபெறவிருப்பது இதுவே முதல் தடவையாகுமென கலாநிதி அந்தனி க்யூ தெரிவித்தார்.

இம்மாநாட்டினை இலங்கையில் நடத்துவதன் மூலம் வெளிநாடுகளைச் சேர்ந்த பல புத்திஜீவிகளின் அனுபவங்களை பரிமாறிக்கொள்ள முடிவதுடன், உல்லாசப் பயணிகளுக்கான வருகையை அதிகரிக்க முடியுமெனவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தனது உரையில் கூறினார்.

ஆசிய பசுபிக் அமைப்பின் 7வது வட்ட மேசை மாநாடு வியட்நாமிலும் 08வது மாநாடு தன்சானியாவிலும் நடைபெற்றன. அப்போது தீர்மானிக்கப்பட்டதற்கமைய 09வது மாநாடு இலங்கையில் ஜூன் 10 முதல் 12 வரை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இதில் அங்கத்துவம் வகிக்கும் பிலிப்பைன்ஸ், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, தாய்லாந்து, மலேசியா, இந்தியா, சீனா, வியட்நாம், கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இலங்கை வரவுள்ளனர்.

இவர்களது அனுபவங்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் நாட்டிலுள்ள அதிகூடிய வளங்களைப் பயன்படுத்தி சூழல் மாசடையாத வகையில் சிறந்த பொருட்கள் உற்பத்தி செய்வது தொடர்பான நுட்பங்களை அறிந்து கொள்வதே மாநாட்டை நடத்துவதற்கான எமது இலக்கு என பொறியியலாளர் சேன பீரிஸ் கூறினார்.
WEDNESDAY, MAY 05, 2010லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, May 4, 2010

கண்டி மாவட்ட ஐ.ம.சு.மு. எம்.பிக்களுடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு


பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்திலிருந்து தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அலரிமாளிகைக்கு இன்று வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

நாவலப்பிட்டியில் இடம் பெற்றதாக கூறப்படும் தேர்தல் வன்முறைகளை ஆராய் வதற்காக நியமிக்கப்பட்ட குழு ஜனாதிப தியிடம் நேற்று தனது அறிக்கையை சமர்ப் பித்ததனையடுத்தே ஜனாதிபதி கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

மக்கள் வங்கியின் தலைவர் டபிள்யூ. கருணாஜீவ தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவே நாவலப்பிட்டி தேர்தல் தொகுதி தொடர்பாக ஆராய்ந்து ஜனாதிபதியிடம் நேற்று அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.
இந்த அறிக்கையில் விசாரணைகளுடன் போட்டியாளர்களின் கருத்துக்களும் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
TUESDAY, MAY 04, 2010லக்ஷ்மி பரசுராமன்

Sunday, May 2, 2010

புனர்வாழ்வுபணி: கூரைத்தகடுகள் கிடுகுகளை தந்துதவ முடியும் :அமைச்சர் மில்ரோய்


வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வரும் இடங்களில் சேதமடைந்த நிலையில் அரைகுறையாக இருக்கும் வீடுகளை புனரமைக்க ஆகக் குறைந்தது கூரைத் தகடுகள் அல்லது ஓலைக் கிடுகுகளையாவது தந்துதவுமாறு மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ, தனவந்தர்கள் மற்றும் சமூக சேவையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மீள்குடியேற்ற அமைச்சராக பதவியேற்றுக் கொண்டதனையடுத்து மன்னார், வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கு தான் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டபோது மோதல் இடம்பெற்ற பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளும் கூரைகளின்றிய நிலையில் இருப்பதனைக் கண்டு தான் வியப்படைந்ததாகவும் அமைச்சர் கூறினார்.

மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதிக் காலகட்டத்தில் படை வீரர்கள் பொதுமக்களின் வீடுகளில் தங்கி விடக் கூடுமென்ற சந்தேகத்தில் அனைத்து வீடுகளின் கூரைகளையும் அகற்றி விடுமாறு புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உத்தர விட்டுள்ளார். சில வீடுகளின் கூரைகள் புலிகளினால் பலவந்தமாக அகற்றப்பட்டு ள்ளன.

அதற்கமையவே வீடுகள் கூரையின்றி காட்சியளிக்கின்றன. பெரும்பாலான வீடுகளின் சுவர்களில் எவ்வித சேதமும் இல்லை. கூரை மாத்திரம் இருப்பின் அவ்வீட்டு உரிமையாளர்களால் தாராளமாக அங்கே மீளக்குடியேற முடியுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

வீடுகள் மாத்திரமன்றி பாடசாலைகளும் கூரைகளின்றிய நிலையிலேயே காணப்படுகின்றன.
MONDAY, MAY 03, 2010லக்ஷ்மி பரசுராமன்

இடியுடன் கடும் மழை; ரொனாடோ ஏற்படும் வாய்ப்பு


நாட்டில் நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை இன்றும் சில தினங்களுக்கு நிலவுமென வானிலை அவதான நிலையத்தின் அதிகாரி நந்தலால் பீரிஸ் தெரிவித்தார்.

மாலை வேளைகளில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதனால் ரொனாடோ சுழல்காற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்
MONDAY, MAY 03, 2010லக்ஷ்மி பரசுராமன்

பாணின் விலை ஒரு ரூபாவினால் அதிகரிப்பு


பாணின் விலை நேற்று நள்ளிரவுடன் ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருப்பதாக பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.

இதன்படி 450 கிராம் நிறைகொண்ட பாணின் விலையே நேற்று நள்ளிரவு 12 மணி முதல் ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் சங்கத்தின் தலைவர் கூறினார்.
MONDAY, MAY 03, 2010லக்ஷ்மி பரசுராமன்

கிளிநொச்சி: 4000 குடும்பங்களை மீள்குடியேற்றும் பணிகள் துரிதம்:3700 வீடுகளை கட்டும் நடவடிக்கை ஆரம்பம்


கிளிநொச்சி மாவட்டத்தில் இம்மாத இறுதிக்குள் நான்காயிரம் குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா நிவாரணக் கிராமங்களிலும் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கியிருப்போரை கட்டம் கட்டமாக அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கிளிநொச்சியின் மேற்கு மற்றும் கிழக் கில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு குடியேற்றத்துக்கு ஏற்ற வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் இடங்க ளைச் சேர்ந்தோர் தொடர்பான பெயர், விவரங்கள் தற்போது திரட்டப்பட்டு வருவதாகவும் அரச அதிபர் மேலும் கூறினார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் 3700 வீடுகள் கட்டும் பணி ஆரம்பிக்கப் பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு வீட்டு நிர் மாணத் திட்டத்தின் கீழ் 3600 வீடுகளும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் 100 வீடுகளுமே அமைக்கப்படவுள்ளன. யு. என். ஹெபிட்டாட் சேதமடைந்த 1500 வீடுகளை புனர்நிர்மாணம் செய்துகொடுக்க இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் அரச அதிபர் திருமதி கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.

மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த 30 பாடசாலைகள் தற்போது இயங்கி வரு கின்றன. மோதல்களால் இடம்பெயர்ந்து மீண்டும் தமது சொந்த இடங்களில் குடி யேறியுள்ளோர் இதுவரையில் 5 ஆயிரத்து 850 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர்ச் செய் கையினையும் சிறிய அளவில் மேட்டு நிலப் பயிர்ச் செய்கையிலும் ஈடுபட்டுள் ளனர்.

பூநகரில் சிறியளவில் மீளக் குடி யமர்த்தப்பட்டிருக்கும் மீனவக் குடும்பங்கள் தமது மீன்பிடித் தொழிலை ஆரம்பித் திருப்பதாகவும் அடுத்த வாரமளவில் அவர் களுக்கான வலைகள் மற்றும் வள்ளங்கள் பெற்றுக்கொடுக்கப்படவிருப்ப தாகவும் அரசாங்க அதிபர்
தெரிவித்தார்
MONDAY, MAY 03, 2010லக்ஷ்மி பரசுராமன்

வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் ஆடைத் தொழிற்சாலை அமைக்க முடிவு


வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் பல ஆடைத் தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு கைத்தொழில், வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஆடைத் தொழிற்சாலைகள் மூலம் நாட்டுக்கு வருடாந்த வருமானமாக கிடைத்துவரும் 3.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை 05 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவதனை இலக்காக வைத்து அதற்கான செயற்திட்டங்களை முன்னெடுக்கவிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை அண்மையில் பசில் ராஜபக்ஷ எம்.பி. தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதில் நாட்டிலு ள்ள பல முன்னணி ஆடைத் தொழிற்சாலை உரிமையாளர்களும் கலந்துகொண்டனர்.
MONDAY, MAY 03, 2010லக்ஷ்மி பரசுராமன்