Thursday, January 28, 2010

பொன்சேகா, தேர்தல் ஆணையாளரை வீட்டு காவலில் வைத்துள்ளதாக கூறும் செய்தி பொய்யானது:அனுதாபம் தேட முயற்சிக்கிறார் பொன்சேகா - அமைச்சர் சமரசிங்க



எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவையும், தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவையும் வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் அரசாங்கம் அவற்றை முழுமையாக மறுப்பதாகவும் மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார்.

தனது தோல்வியை தாங்கிக் கொள்ள இயலாத பொன்சேகா சர்வதேச ஊடகங்கள் வாயிலாக பொய்ப் பிரசாரங்களைச் செய்து அனுதாபம் தேட முயல்கின்றார். இது போன்ற இழிவான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் நாட்டின் நற்பெயருக்கு கலங்கத்தையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்த வேண்டாமெனவும் அமைச்சர் சமரசிங்க பொன்சேக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொன்சேகா வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை. அவர் நினைத்த நேரம் அந்த ஹோட்டலை விட்டு வெளியே செல்லலாம். ஒரு ஜனாதிபதி வேட்பாளரென்ற வகையில் பாதுகாப்பு வழங்குவதற்காக அவ்வீதியில் பாதுகாப்பு படையினர் சேவையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர் அதனை தவறாக கருத்தில் கொண்டுள்ளதுடன் ஊடகங்களில் போலி பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார்.

மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று மாலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையி லேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட் டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த், மைத்திரிபால சிறிசேன, ஜீ. எல். பீரிஸ், பாட்டளி சம்பிக்க ரணவக்க, அனுர பிரியதர்ஷன யாப்பா, ரிஷாட் பதியுதீன், விமல் வீரவன்ச எம்.பி, சட்டத்தரணி காலிங்க இத்ததிஸ்ஸ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜ பக்ஷ அமோக வெற்றியீட்டியிருப்பதனை புரிந்து கொண்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த சதிகார கும்பல், மேற்கூறியது போன்ற கட்டுக்கதைகளை குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள், இணையத் தளங்களினூடாக பரப்பி வருகின்றது.

அது மட்டுமன்றி எதிரணி வேட்பாளரும் கட்சித் தலைவர்க ளும் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். பொன்சேகாவை யாரும் வீட்டுக் காவலில் வைக்கவில்லை. அவர் இருப்பது வீடு அல்ல அது பல உள்நாட்டு வெளிநாட்டவர்கள் வந்து போகும் பிரபலமான ஹோட்டலாகும் என்றும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.

எமக்கு கிடைத்த தகவலடிப்படையில் 26ம் திகதி மாலை 4.30 மணியளவில் பொன்சேகாவும் அவருடனிருந்த கட்சித் தலைவர்களும் மற்றும் ஆதரவாளர்களும் குறித்த ஹோட்டலிருந்த இரண்டு மாடிகளிலிருந்த 70 அறைகளை வாடகைக்கு அமர்த்தி தங்கியிருந்துள்ளனர். இவரை அரசாங்கம் அங்கே அழைத்து செல்லவில்லை. தானாக விரும்பியே அவர் அங்கு சென்றுள்ளார்.

குறித்த ஹோட்டல் அமைந்திருக்கும் பகுதி அதியுயர் பாதுகாப்பு வலையம் என்பது சகலரும் அறிந்ததே. ஹோட்டலுக்கு முன்பாகவே விமான படைத் தளம் அமைந்திருப்பதனால் எப்போதுமே அப்பகுதியில் படையினர் குவிக்கப்பட்டி ருப்பது வழமை.

அதேவேளை, இராணுவத்திலிருந்து தப்பி வந்த ஒன்பது பேர் ஆயுதங்களுடன் ஹோட்டலுக்குள் இருந்துள்ளனர். இவர்கள் குறித்த விபரங்கள் கிடைத்ததும் மேற்படி ஒன்பது பேரும் ஹோட்டலுக்கு வெளியே வரவழைக்கப்பட்டே கைது செய்யப்பட்டனர்.

இதன் காரணமாகவும் வழமைக்கு மாறாக பாதுகாப்புப் படை யினர் இப்பகுதியில் சேவைக்கு அமர்த் தப்பட்டுள்ளனர். இவற்றை காரணமாக காட்டி சர்வதேச நாடுகளிடம் அனுதாபம் தேட முயற்சிக்கிறார் பொன்சேகா எனவும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.
THURSDAY, JANUARY 28, 2010லக்ஷ்மி பரசுராமன்

Wednesday, January 27, 2010

வவுனியாவில் விஜிதஹேரத்துடன் சென்ற 40 பேர் விசாரணை; விடுவிப்பு


ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உள்ளிட்ட 40 பேர் சென்ற இரண்டு பஸ்கள் வவுனியா பொலிஸ் சோதனைச் சாவடியில் சந்தேகத்தின்பேரில் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத் தப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டிரு ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம். கருணாரட்ன தெரிவித்தார்.

தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக கொழும்பிலிருந்து இரண்டு பஸ் களில் வவுனியா நோக்கிச் சென்றவர்களே பொலிஸாரினால் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

பஸ்களில் எம்.பி.யுடன் பிரயாணம் செய்த 40 பேருள் 20 பேர் இராணுவத்திலிருந்து தப்பி வந்தவர்கள் என்ற விபரம் தெரிய வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காலை 8.50 மணியளவில் வவுனியா பொலிஸ் சோதனைச் சாவடியில் விசார ணைக்காக தடுத்து வைக்கப்பட்டவர்கள் காலை 10.45 மணியளவில் விடுவிக்கப்பட்ட தாகவும் அவர் கூறினார்.

WEDNESDAY, JANUARY 27, 2010லக்ஷ்மி பரசுராமன்

யாழ்ப்பாணத்தில் இரு பெற்றோல் குண்டு வீச்சு; வாக்களிப்பில் பாதிப்பில்லை




யாழ்ப்பாணத்தில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் வாக்களிப்பில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

வல்வெட்டித்துறைக்கும் உடுப்பிட்டிக்கும் இடைப்பட்ட வீதியில் நேற்று அதிகாலை இரண்டு பெற்றோல் குண்டுகள் வெடித்துள்ளன.

இருப்பினும் இக்குண்டு வெடிப்புக்க ளால் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லையெனவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

வாக்குச்சாவடிகள் அமையப் பெற்றிராததும் ஆள்நடமாட்டம் இல்லாததுமான வீதியி லேயே பெற்றோல் குண்டுகளை இனந் தெரியாதோர் வெடிக்கச் செய்திருப்பதனால் வாக்களிப்பில் இது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும் அவர் தெரி வித்தார்.

அதிகாலை வேளை குறித்த பிரதேச மொன்றிலிருந்து சத்தம் கேட்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப் பட்டதையடுத்து பொலிஸாரும் இராணுவத்தினரும் சம்பவ இடத்துக்கு விரைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
WEDNESDAY, JANUARY 27, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, January 25, 2010

தேர்தல் வன்முறைகளில் ஈடுபடத் திட்டம்:20 முன்னாள் கொமாண்டோக்கள் கொக்கரெல்லயில் கைது



தேர்தல் தினமான இன்று வன்முறைகளில் ஈடுபடுவதற்கென தயாராகவிருந்த 20 முன்னாள் இராணுவ கொமாண்டோக்கள் ஆயுதங்களுடன் நேற்று கைது செய்யப்பட்டி ருப்பதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

காலி, கொக்கரெல்ல பிரதேசத்தில் வைத்தே இவர்கள் கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தலின் போது வன்முறைகளை முன்னெடுப்பதற்காக பாரிய திட்டங்களை இவர்கள் தீட்டி வருவதாக கிடைத்த தகவலையடுத்து கொழும்பிலிருந்து சென்ற விசேட இராணுவக் குழுவினரே மேற்படி இருபது முன்னாள் கொமாண்டோக்களை ஆயுதங்களுடன் கைது செய்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள 20 பேரும் இராணுவ பொலிஸார் மற்றும் சி. ஐ. டி.யினரால் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

இவர்கள் முன்னாள் இராணுவ கொமா ண்டோ பிரிவினரென தெரியவந்த போதும், இவர்கள் ஒவ்வொருவரும் என்னென்ன தரங்களைச் சேர்ந்தவர்களென்ற விவரம் பூரண விசாரணகளுக்குப் பின்னரே தெரியவருமெனவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.
TUESDAY, JANUARY 26, 2010லக்ஷ்மி பரசுராமன்

சி.ஐ.டி.யினர் மீது அபகீர்த்தி ஏற்படுத்துவதற்கு முயற்சி:பொன்சேகாவின் கருத்து உண்மையில்லை - பணிப்பாளர்



ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா தனியார் தொலைக்காட்சியொன்றில் வழங்கியுள்ள பேட்டியில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (சி.ஐ.டி.) சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறியதாக தெரிவித்திரு க்கும் கருத்தினை அதன் பணிப்பாளர் எம். கே. டி. விஜய அமரசிங்க நேற்று மறு த்தார். கட்சி, மத, சமய பேதமின்றி சி.ஐ.டி. பிரிவு செயற்பட்டு வருகிறது.

அரசியல் இலாபத்துக்காக சிலர் சி.ஐ.டி.யினர் மீது அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் தெரிவிக்கும் கருத்துகளால் பொது மக்களிடையே நம்பகத்தன்மை குறைய இடமுண்டு. இருப்பினும், பொன்சேகா கூறியிருக்கும் கருத்துக்களில் எவ்வித உண்மையுமிருக்க வாய்ப்பில்லை யெனவும் சி.ஐ.டி. பணிப்பாளர் விஜய சமரசிங்க நேற்று தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று மாலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து பணிப்பாளர் விஜய அமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்;

சி.ஐ.டி. யினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய கொழும்பு மற்றும் அமெரிக்காவில் அமையப்பெற்றி ருக்கும் ‘ஹை கோர்ப்’ நிறுவனம் தொடர் பான விசாரணைகள் முன்னெடுக்க ப்படுகின்றன.

அதற்கமைய, 109வது சட்ட மூலத்தின் 06 வது உப பிரிவின்படி விசாரணைகளுக்கான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக வேட்பாளர் பொன்சேகாவின் மருமகனான தனுன திலக்கரட்ணவை விசார ணைகளுக்காக சி.ஐ.டி. க்கு வருகை தருமாறு கடிதம் ஒன்றை கடந்த 19 ஆம் திகதி அனுப்பி வைத்தோம்.

அதில் 20 ஆம் திகதி காலை சமுக மளிக்குமாறு குறிப்பிடப்பட்டிரு ந்தது.
இருப்பினும், 20 ஆம் திகதி எமக்கு கிடைக்கப்பெற்ற பல்வேறு முறைப்பாடுகளின் வேலைப்பளு காரணமாக விசாரணையை மறு அறிவித்தல் வரை ஒத்திவைத்திரு ப்பதாக குறிப்பிட்டு எனது கையொ ப்பத்துடன், தபாலை பொலிஸ் அதிகாரியொருவரூடாக தனுன திலக்கரட்ணவின் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.

நான் அதனை 10 மணிக்கு அனு ப்பி வைத்த அதே நாள் 11.45 மணி யளவில் தனுன திலக்கரட்ணவிடமி ருந்து எனக்கொரு தொலைநகல் கிடைத்தது. அதில் அவர், தனது மாமாவுடன் தேர்தல் வேலையில் ஈடுபட்டிருப்பதனால் 26 ஆம் திகதிக்கு பின்னரே விசாரணைக்காக சமுகமளிக்க முடியுமெனக் குறிப்பி ட்டிருந்தார்.

தேர்தலைப் பொறுத்தவரை இது முக்கிய விசாரணையாக மதிக்கப் பட்ட போதிலும் சி.ஐ.டி. யைப் பொறுத்தவரை இது அவ்வளவு முக்கியமானதல்ல.
எனவே, எதிர்வரும் 26ஆம் திகதி க்குப் பின்னர் இது குறித்து தினம் ஒன்றை ஒதுக்கவோமென நான் எனது சிரேஷ்ட அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தேன்.

அதற்கிடையில், சி.ஐ.டி. யைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரியொருவர் விசாரணைக்காக பொன்சேகாவின் மருமகனை இங்கே வரவழைப்பத னைவிட எனது சீருடையை களை ந்துவிட்டு வீடு செல்லலாம் என கூறியதாக பொன்சேகா செவ்வி யொன்றில் தெரிவித்திருந்தார். இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் சி.ஐ.டி. பணிப்பா ளராக பதவியேற்ற இரண்டு மாதக் காலப்பகுதிக்குள் அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் தொடர்பா கவும் நன்கு அறிந்து வைத்துள்ளேன்.

அதேவேளை, நாம் கட்சி பேதமின்றி செயற்படும் ஒரு நிறு வனம் என்பதனையும் பொது மக்க ளுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன் எனவும் தெரிவித்தார்.
TUESDAY, JANUARY 26, 2010லக்ஷ்மி பரசுராமன்

1000 வாகனங்கள் பணியில்தேர்தல் கண்காணிப்பில் 35,000 வெளிநாட்டு, உள்நாட்டு பிரமுகர்கள்:



வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் நாளை நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்காக சுமார் ஆயிரம் வாகனங்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் பொது நலவாய மற்றும் தெற்காசிய பிராந்தியம் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கை வந்திருக்கும் 85 க்கு மேற்பட்ட வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தமது பணிகளை ஆரம்பித்திருப்பதாகவும் தேர்தல் திணைக்களம் மற்றும் தனியார் கணிகாணிப்பு அமைப்புக்களின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்தல் கணிகணிப்புக்கான வலையமைப்பு தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் (விணிரிV) தேசிய வாக்களிப்பு கண்காணிப்பு நிலையம், பெப்ரல், கபே உள்ளிட்ட சில தனியார் தேர்தல் கண்காணிப்பு நிலையங்கள் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. தேர்தல் ஆணையாளர் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு தெற்காசிய பிராந்தியத்திலிருந்து 40 பேரையும் பொது நலவாயத்திலிருந்து 10 பேரையும் இலங்கைக்கு வரவழைத்திருப்பதாகவும் திணைக்களத்தின் அதிகாரியொருவர் கூறினார்.

இதேவேளை, பெப்ரல் அமைப்பு 17 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களையும் சி. எம். இ. வி. 18 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களையும் வரவழைத்திருப்பதாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், மியன்மார், தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா, ஜப்பான், நோர்வே, அமெரிக்கா, சுவீடன், கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கிaஸ், துருக்கி ஆகிய நாடுகளிலிருந்தே இலங்கை வந்துள்ளனர்.

வாக்களிப்பு நடைபெறும் இடங்களில் நடமாடும் கண்காணிப்பினை நடத்துவதற்காக சுமார் ஆயிரம் வாகனங்களை மேற்படி தனியார் கண்காணிப்பு நிலையங்கள் சேவையில் ஈடுபடுத்தியுள்ளதுடன் வடக்கு, கிழக்கில் நிவாரணக் கிராமங்களில் அமைக்கப்படும் வாக்குச் சாவடிகளுக்கென விசேடமாக உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெப்ரல் அமைப்பு ஆறாயிரம் உள்நாட்டு மற்றும் 17 வெளிநாட்டவர்களை கண்காணிப்பில் ஈடுபடுத்தவிருப்பதாக அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

ஆசிய நாடுகளிலிருந்தும் ஜப்பான், நோர்வே, அமெரிக்கா, சுவீடன் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கை வந்திருக்கும் 17 பேரும் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, கண்டி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, பெப்ரல் அமைப்பினால் 352 வாகனங்கள் இம்முறை நடமாடும் சேவைக்கு ஈடுபடுத்தப்படுமெனவும் ரோஹண கூறினார்.

சி. எம். ஈ. வி. – நிலையம் 3500 உள்நாட்டவர்களையும் 18 வெளிநாட்டவர்களையும் கண்காணிப்பில் ஈடுபடுத்தியுள்ள அதே நேரம், 80 வாகனங்களை நடமாடும் சேவைக்காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் அதன் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

ஆசிய நாடுகளிலிருந்தும் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து 18 பேரை சி. எம். ஈ. வி. வரவழைத்துள்ளது. இதில் நேபாளத்திலிருந்தே ஆகக் கூடுதலாக 10 கண்காணிப்பாளர்கள் வந்துள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, புத்தளம், அம்பாந்தோட்டை, கண்டி, மாத்தறை, ஆகிய மாவட்டங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனரெனவும் அவர் கூறினார்.

ஐ. எப். எச். ஆர் நிலையம் நாடளாவிய ரீதியில் 5 ஆயிரத்து 872 பேரை இம்முறை கண்காணிப்பில் ஈடுபடுத்தியிருப்பதாகவும் 08 வாகனங்கள் நடமாடும் சேவையினை மேற்கொள்வதாகவும் அதன் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கபே அமைப்பு நாடளாவிய ரீதியில் 6 ஆயிரத்து 563 உள்நாட்டு கண்காணிப்பாளர்களையும் 300 வாகனங்களையும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தியிருப்பதாக அதன் பேச்சாளர் கி. பி. தென்னகோன் கூறினார்.
தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் இம்முறை 1200 உள்நாட்டு கண்காணிப்பாளர்களையும் 150 வாகனங்களையும் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக அதன் அதிகாரி தெரிவித்தார்.
MONDAY, JANUARY 25, 2010லக்ஷ்மி பரசுராமன்

Friday, January 22, 2010

எதிர்க்கட்சியினரின் தேர்தல் விஞ்ஞாபனம்:‘பிரதான அபிவிருத்திகளை அடையும் வழிமுறைகள் எதுவும் இல்லை’



சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணமுடியாத பொருளாதார அபிவிருத்திக்கான பாதையினை மஹிந்த சிந்தனை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றதென பொருளியலாளர் கலாநிதி லலிதசிறி குணருவன் நேற்று தெரிவித்தார்.

பிரதான இரு ஜனாதிபதி வேட்பாளர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களின் பொருளாதார அபிவிருத்தி நோக்குப் பற்றி பொருளியலாளர்கள் நேற்று தகவல் திணைக்களத்தில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினர். இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினர் வெளியிட்டிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரதான அபிவிருத்திகளை அடைவதற்கான வழி முறைகள் எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எதிரணியில் கூட்டுச் சேர்ந்திருக்கும் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக பிரிந்து செல்ல நேரிடுமோ என்ற பயத்தினாலோ என்னவோ பொன்சேக்கா அதுபற்றி எதுவுமே கூறாமல் இருக்கிறார் போலும், என்றும் அவர் தெரிவித்தார்.

இச் செய்தியாளர் மாநாட்டில் பேராசிரியர் புத்ததாச ஹேவாவித்தாரண, பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன், கலாநிதி லொயிட் பெர்னாண்டோ ஆகியோரும் கருத்துத் தெரிவித்தனர்.

கலாநிதி லொயிட் பெர்னாண்டோ கூறுகையில் :-

ஒவ்வொரு மனிதனுக்கும் இலக்கு அவசியம். அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கு இது மிகவும் இன்றியமையாதது. அப்படியானதொரு இலக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் காணக்கூடியதாகவுள்ளது. எமது நாட்டையும் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைப் போல அபிவிருத்தி செய்வதே எமது ஜனாதிபதியின் கனவு.

ஒரு நாடு அபிவிருத்தியடைய வேண்டுமாயின் அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், தொழில்நுட்ப மயம், சிறந்த நிர்வாக முறை என்பது அவசியம், இவற்றை மஹிந்த சிந்தனையில் காணக்கூடியதாகவுள்ளதாக தெரிவித்தார்.

பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் தெரிவிக்கையில் :-

கடந்த வருடம் இலங்கையின் பொருளாதாரம் உறுதியானதொரு நிலையிலிருப்பதனை எதிர்க் கட்சியினர் நன்கு அறிவர். தேர்தல்களையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை மேலும் உறுதிப்படுத்துவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லையென்றார்.

பேராசிரியர் புத்ததாச ஹேவாவித்தாரண, ஜனாதிபதி நாட்டில் ஐங்கேந்திரங்களின் மையத்தை தோற்றுவிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தவுள்ளார். இது இலங்கை வரலாற்றில் முன்னொரு போதும் இல்லாத சவாலாகும். ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனையில் தேசிய வேலை திட்டத்துக்கு உட்பட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை காணமுடிகின்றது.

SATURDAY, JANUARY 23, 2010 லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, January 19, 2010

வாரியபொலவில் ஒருவர் அடித்துக்கொலை:சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது


வாரியபொலவில் நேற்று அதிகாலை இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

ச். எம். தம்மிக்க ஹேரத் (33) எனும் வர்த்தகரே இச்சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் தலைமையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இது குறித்து விளக்கமளித்தார்.

வாரியபொல பிரதேசத்தில் நேற்று அதிகாலை பத்து பேர் சேர்ந்து தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவ்வேளை ஏழு மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்த குழுவினர் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டி ருந்தவர்கள் மீது தடிகளால் தாக்கியுள்ளனர்.
இத்தாக்குதலிலிருந்து அனைவரும் தப்பியோட முயற்சித்த போதும், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட குற்றப்புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க தெரிவித்தார்.

இத்தாக்குதலில் ஈடுபட்ட அறுவரின் பெயர் விவரங்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும், நேற்றுவரை ஐவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். உயிரிழந்தவர் அமக்கடவர வித்தியாலயத்தின் ஓய்வுபெற்ற அதிபரின் மகனாவார். அவரது உடல் பிரேத பரிசோதனைகளுக்காக குருணாகலை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.
TUESDAY, JANUARY 19, 2010லக்ஷ்மி பரசுராமன்

Sunday, January 17, 2010

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 67 சதவீதமான மக்கள் ஆதரவு:பொன்சேக்காவின் தோல்வி உறுதி - அமைச்சர் மைத்திரிபால



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 67 சதவீத மக்கள் ஆதரவைப் பெற்று முன்னணியில் திகழ்வதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் பெறுபேறுகள் சுட்டிக்காட்டியிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான மக்களின் ஆதரவு குறித்து மூன்றாவது தடவையாக எடுக்கப்ப ட்டிருக்கும் கணக்கெடுப்பின் பெறுபேறே இதனை சுட்டிக்காட்டு கிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் இயலாமையையும் வங்குரோத்து அரசியல் பிரசாரங்களையும் நன்கு அறிந்து வைத்துள்ள நாட்டு மக்கள் என்றுமில்லாதவாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டத்துக்கு அணிதிரண்டு வருகிறார்கள். எமது கூட்டங்களுக்கு வருகைதரும் இலட்சக் கணக்கான மக்களை பார்க்கையில் இந்த நாட்டின்
தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான் என்பதனை அவர்கள் உறுதிசெய்துவிட்டா ர்கள் என்பது மேலும் ஊர்ஜிதமாகியி ருப்பதாகவும் அமைச்சர் மைத்திரிபால கூறினார்.

கொழும்பு மகாவெலி கேந்திர நிலையத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார். அதில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெல்வது உறுதியாகியுள்ளது. வீதியில் எங்கு பார்த்தாலும் 90 சதவீதம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அலுவலகங்களும் நீலக்கொடிகளும் வெற்றிலைச் சின்னங்களுமே காணப்படு கின்றன.

நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி சரத் பொன்சேகாவுக்கும் எதிர்க்கட்சியினரின் வங்குரோத்து அரசியல் பிரசாரம் நன்கு புரிந்துவிட்டது.
தான் தேர்தலில் தோல்வியடையப் போகின்றேன் என்பது பொன்சேகாவுக்கு நன்கு விளங்கிவிட்டது.

இயலாமையை தோல்வியின் வேதனையை பொன்சேக்காவின் நடவடிக்கைகள், முகபாவம் மற்றும் பிரசாரங்கள் வாயிலாகவே அறிந்துக்கொள்ள முடிகிறதெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் மைத்திரிபால இது தொடர்பாக மேலும் கூறுகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் போட்டியிட்டு ஐக்கிய தேசியக் கட்சியால் ஒருபோதும் வெற்றி காண முடியாதென அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்கு தெரியும். தோல்வி உறுதியென்பது நிச்சயமானதன் பின்னரே மக்களுக்கு வேடிக்கை காண்பிப்பதற்காக அரசியல் அனுபவமில்லாத இந்த பொன்சேக்காவை அறிமுகம் செய்துள்ளனர்.

பொன்சேக்காவின் மனசாட்சிக்கு இந்த உண்மை நன்கு தெரியும்.
சரத் பொன்சேக்கா இராணுவத்தில் பதவியிலிருந்த காலப்பகுதியிலேயே ரணில் விக்கிரமசிங்க பிரபாகரனுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டிருந்தார்.

அவரது ஒப்பந்தப்படி புலிகள் படையினருக்கு எத்தனை அவதூறு செய்திருந்தாலும் அதனை படையினர் கைகட்டி பார்த்திருக்க வேண்டும்.
பொன்சேக்கா திறமையான படை வீரரென்றால் அந்த நேரமே யுத்தத்துக்கு முடிவு கண்டிருக்கலாமே? ஏன் அவரால் அதனை செய்ய முடியவில்லை.
எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்சிக்கு வந்த பின்பே நாட்டில் பல தசாப்த காலமாக நிலவி வந்த மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இப்போது, பொன்சேக்கா தானே மோதல்களை தீர்த்து வைத்ததாக பெருமை தேடிக்கொள்கிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியினரின் வங்குரோத்து அரசியல் நிலையினை மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கின்றனர். போலிப் பிரசாரங்கள் மூலம் மக்களை ஏமாற்ற நினைப்பது வெறும் கனவு மாத்திரமே.

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மாத்திரமேயுள்ளன. அதற்கிடையில் எமது ஜனாதிபதிக்கான ஆதரவினை இன்னும் பல மடங்கு பலப்படுத்துவோம். ஜனாதிபதிக்கு வெற்றி நிச்சயமெனவும் அவர் கூறினார்.
MONDAY, JANUARY 18, 2010லக்ஷ்மி பரசுராமன்

எதிர்க்கட்சியின் தோல்வியின் பிரதிபலிப்பே வன்முறைகளாக வெடிக்கின்றன:ஐ.ம.சு.மு. ஆதரவாளர்களை அசைக்க முடியாது - மைத்திரிபால



எதிர்க்கட்சியினர் நாளுக்கு நாள் எதிர்நோக்கும் தோல்வியின் பிரதிபலிப்பே நாட்டில் தேர்தல் வன்முறையாக வெடிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.

எத்தகைய வன்முறைகள் இடம்பெற்றா லும் ஜனாதிபதியையோ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களையோ அதன் ஆதரவாளர்களையோ அசைக்க முடியாதெனவும் நீதியானதும் சுதந்திரமானது மான தேர்தலை நடத்துவதற்குத் தாங்கள் தயாராகவிருப்பதனால் அநாவசியமான வன்முறைகளைச் செய்து வீணான பிரச்சினைக்குள் சிக்க வேண்டாமெனவும் அமைச்சர் மைத்திரிபால எதிர்க்கட்சியினருக்கு எச்சரிக்கைவிடுத்தார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேக்கா வும் அவருடைய ஆதரவாளர்களான குண்டர்களும் ஆளும் கட்சியினை வன்முறைகளால் பயமுறுத்தி வெல்ல நினைப்பது வெறும் கனவு மாத்திரமே என்பதனை அவர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். தங்கல்லையிலும் மதுரங்குளியிலும் இருவர் உயிரிழப்பதற்கு காரணம் எதிர்க்கட்சியினர் முன்னெடுத்த வன்முறை களேயெனவும் அவர் குறிப்பிட்டார்.

துப்பாக்கிச்சூடு நடத்துவதாலும் குண்டு வைப்பதாலும் பிரசாரக் கூட்டங்களை குழப்பியடிப்பதனாலும் நாம் ஒரு போதும் எமது நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. எதிர்க்கட்சியினரின் இயலாமையின் வெளிப்பாடே இந்த வன்முறைகள். இத்தகைய தேர்தல் வன்முறைகளை கையாள்வதன் மூலம் நாட்டின் அரசியலை அதளபாதாளத்துக்கு தள்ள முயற்சிக்கின்றனர் எதிரணியினர் என்றும் அமைச்சர் கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இராணுவ ஆட்சி நடத்துவதே சரத் பொன்சேகாவின் ஒரே கனவு. அது வெறும் கனவு மாத்திரமே. ஒரு போதும் நனவாக வாய்ப்பில்லை.

பொன்சேகா முதலில் அரசியலில், நாட்டு மக்களிடம் பேசப் பழகிக் கொள்ள வேண்டும். இராணுவத்தில் அவருக்கு கீழே சேவையாற்றிய அதிகாரிகளிடம் பேசுவது போல மக்களிடம் பேசி அரசி யல் நடத்த முடியாது. அரசியல் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால் பொன்சேகா விசேட வகுப்புகளுக்கு செல்லலாம்.

எதிரணியினரான ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஜே.வி.பி.யினரும் வாய்க்கு வந்த மாதிரி பொய்ப்பிரசாரங்களை முன்னெடுத்தனால் தோல்வி நிச்சயமென்பது அவர்களுக்கே உறுதியாகிவிட்டது. அதனாலேயே வன்முறைகளை ஆரம்பித்துள்ளனர். நாம் இதற்காக ஒரு போதும் அஞ்சப் போவதில்லை. மக்களின் உரிமையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக நீதியான தேர்தலை நடத்துவதற்காக நாம் எதற்கும் முகம் கொடுக்கத் தயார்.

தங்கல்லையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பெண்ணின் கணவர் சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், நாங்கள் பரம்பரை பரம்பரையாக சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள்.

எதிர்க்கட்சியினரின் பிரசாரக் கூட்டத்தில் பொருட்கள் கொடுப்பதாக கூறியே எனது மனைவியை அதற்கு அழைத்துள்ளனர். பொருட்கள் கொடுக்கிறார்களென்றால் எனது மனைவி எந்த கூட்டத்துக்கும் செல்வாரென்றும் அவரது கணவர் கூறியுள்ளார்.
MONDAY, JANUARY 18, 2010லக்ஷ்மி பரசுராமன்

Saturday, January 16, 2010

சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசியல் யாப்பு; தேர்தல் முறையில் மாற்றம்:ஜனாதிபதியின் தீர்மானத்தை நிறைவேற்ற ஒன்றுபடுமாறு எதிர்க்கட்சியினர


ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும் சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அவர்களை பாராளுமன்றத்துக்கு உள்Zர்க்கும் வகையில் அரசியல் யாப்பிலும் தேர்தல் முறையிலும் மாற்றங்களை கொண்டுவர ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதியின் இத்தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற எதிர்க்கட்சியி னருக்கு அழைப்பு விடுப்பதாக தகவல் தொடர்பாடல் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா நேற்று தெரிவித்தார்.

தகவல் தொடர்பாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றுக்காலை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதி வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததும் நடைமுறையில் இருந்து வரும் அரசியல் யாப்பில் நாட்டுக்கு பொருந்தக்கூடிய வகையில் மேலும் பல திருத்தங்கள் முன்னெடுக்கப்படும். இதனடிப்படையில் பாராளுமன்ற முறையிலும் தேர்தல் முறையிலும் மாற்றங்கள் கொண்டுவரப்படும். சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அவர்கள் விகிதாசார முறையடிப் படையில் பாராளுமன்றத்தில் உள்Zர்க்கப் படுவார்கள்.

இதேவேளை மக்கள் சபை, கிராம சபை ஆகியன ஸ்தா பிக்கப்படுவதன் மூலம் கிராமங்கள் தோறும் அபிவிருத்தி செய்யப்ப டும். மேலும் தேர்த லில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாத தொழிற்சங்கப் பிரதி நிதிகள் மற்றும் கல்வி மான்களை உள்ளடக்கிய செனற் சபை யொன்றை ஸ்தாபிப்பது குறித்தும் ஜனாதி பதி தனது விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய அரசியல் முறையினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஊழல், வன்முறைகளற்ற நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமென்பது ஜனாதிபதியின் நம்பிக்கை.


அரசியல் யாப்பில் மேற்குறிப்பிட்ட மாற்றங்களை கொண்டு வருவது தொடர் பில் எதிர்க்கட்சியினருடன் கலந்தாலோசித்து சில தீர்மானங்களை பெற்றுக் கொள்ள எமது கட்சி தயாராகவுள்ளது. எனவே எதிரணியினர் இதில் பங்குபற்றுமாறு நாம் அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

எதிரணியினர் இதற்கு இணங்காவிடின், அரசியல் யாப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனை அமுலுக்குக் கொண்டு வருவோமெனவும் அமைச்சர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

நிறை வேற்று ஜனாதிபதி முறையினை இல்லாமல் செய்யப்போவதாக கூறிக் கொண்டே சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக தேர்தல் களத்தில் இறங்கி னார். அன்று ஒரு மேடையில், தான் பதவிக்கு வந்தால் நாட்டின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல அதிகாரங்களை தான் பெற்றுக்கொள்ளவிரு ப்பதாக கூறியுள்ளார். தானே தனது கருத்துக்களுடன் முரண்படுகின்றார். அவர் சொல்வதை வைத்துப் பார்த்தால் அமைச்சர்களே தேவைப்படாது போல் தெரிகிறது.

ஜனாதிபதி பதவிக்கு பொன் சேகா தெரிவாகிவிடுவாரோ என்று சிறிதும் அச்சப்படத் தேவையில்லை. அவரால் ஒருபோதும் ஜனாதிபதியாகிவிட முடியாதென்பது நிச்சயம். நாட்டில் சிறுபான்மையினர் எந்த வகையிலும் பாதிப்புக்குள்ளாகாத வகையில் விகிதாசார முறையடிப்படையில் அவர்கள் பாராளுமன்றத் துக்கு தெரிவு செய்யப்பட வேண்டுமென்பதே ஜனாதிபதியின் பிரதான குறிக்கோளாகுமே தவிர சுய ஆட்சி முறையில் ஸதாபிப்பது அல்ல.
பயங்கரவாதிகளை அழிப்பதற்காக 26 ஆயிரம் படையினர் உயிரிழந்ததுடன் 37 ஆயிரம் பேர் வரையில் தமது கை, கால்களை இழந்துள்ளனர். தேர்தல் என்றதும் இவர்களை மறந்துவிட்டு யாருக்கும் சுயாட்சி பெற்றுக் கொடுப்பது ஜனாதிபதியின் நோக்கமல்ல.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த தேர்தலை சாதகமாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினருடன் சுய ஆட்சியை பெற்றுக்கொள்வதற்கான இரகசிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருப்பதனை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் வேளை கூடவிருந்த கூட்டமைப்பிக் எம். பி. ஒருவரே வானொலி ஊடகவியலாளருடன் உரையாடுகையில் ஊர்ஜிதம் செய்துள்ளார்.

அது தொடர்பான தகவல்கள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. தேர்தலைத் தொடர்ந்து, உரிய ஒலிப்பதிவு ஆவணங்களைக் கொண்டு நாம் எதிர்க்கட்சியினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம்.
ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் சிறுபான்மையினருக்கான அனைத்து உரிமைகளும் சுதந்திரங்களும் பெற்றுக்கொடுக்கப்படுவது உறுதி. இருப்பினும் அவரது ஆட்சியின் கீழ் சுயஆட்சி முறைக்கு மாத்திரம் ஒருபோதும் இடமளிக்கப்படாது.

நாட்டு மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவி ருந்த பயங்கரவாதம் ஜனாதிபதியின் ஆட் சியின் கீழ் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு விட்டது. இனி நாட்டுக்கும் மக்களுக்கும் தேவைப்படுவது அபிவிருத்தியே. மஹிந்த சிந்தனையின் இரண்டாம் பாகத்தினூடாக ஐந்து பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் மூன்றாம் உலக நாடாகிய இலங்கையை முதலாம் உலக நாடாக மாற்றுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இனி வரும் காலங்களில் புதியதொரு அபிவிருத்தி யுகத்தை இலங்கையில் காண முடியுமெனவும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா மேலும் குறிப்பிட்டார்.
SATURDAY, JANUARY 16, 2010லக்ஷ்மி பரசுராமன்

ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி துரத்தியோர் ஊடக சுதந்திரம் பற்றி பேசுவது கேலிக்குரியதுஅமைச்சர் லக்ஷ்மன் யாப்பா


லங்காதீப பத்திரிகையின் ஊடகவியலாளர் தயாசீலி லியனகேயை இராஜினாமாச் செய்வதற்கு அழுத்தம் கொடுத்த ரணிலும் எதிர்க் கட்சியினரும் அரசாங்கத்தின் ஊடக சுதந்திரம் பற்றிப் பேசுவது கேலிக்குரியதென தகவல் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இருபது வருடங்களுக்கு மேற்பட்ட சிறந்த அனுபவம் பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரை எதிரணியினர் அச்சுறுத்தியுள்ளனர். அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

வெளியான செய்தியில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதனை திருத்திக் கொள்வதற்கு பல மாற்று வழிகள் உள்ளன. அவற்றை கையாள்வதனை விடுத்து அச்சுறுத்தும் முறையை பின்பற்றுவது ஊடகத்துறைக்கே செய்யும் அவமரியாதையெனவும் அமைச்சர் தெரிவித்தார். ஊடகவியலாளர் தயாசீலி தற்போது எங்கு இருக்கிறாரென்றே யாருக்கும் தெரியாது.

அவருக்கு விடுத்த அச்சுறுத்தல் காரணமாக தனது இராஜினாமாக் கடிதத்தை அவர் வரவேற்பறையிலேயே கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். இதுவரையில் யாரும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. நிலைமை இப்படியிருக்க இதற்குக் காரணமான சம்பந்தன் எம்.பியோ ரணில் விக்கிரமசிங் கவோ இது குறித்து வாயே திறக்காமல் உள்ளனர்.

சிறையில் வைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் திஸ்ஸநாயக்கத்தைக் கூட இந்த அரசாங்கம் பிணையில் விடு வித்துள்ளது. ஊடகவியலாளர்களை வழி நடத்த தெரியாத இவர்கள் ஊடக சுதந்திரம் பற்றிப் பேசுவது எந்த வகையில் நியாயமா குமெனவும் அமைச்சர் கேள்வியெழுப்பினார்.
SATURDAY, JANUARY 16, 2010லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, January 12, 2010

காலிமுக வீதி பயணிகள் போக்குவரத்துக்கு திறப்பு




கொள்ளுப்பிட்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு பயணிகள் பஸ் போக்குவரத்துக் காக ஒரு வழிப் பாதையாக நேற்று முதல் திறக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் கொள்ளுப்பிட்டியிலிருந்து காலிமுகத்திடலினூடாக கொழும்பு கோட்டைக்கான பஸ் சேவையை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்
TUESDAY, JANUARY 12, 2010லக்ஷ்மி பரசுராமன்

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, மாத்தறை:இரண்டு செயற்திட்டங்களுக்கு ஜப்பான் ரூ. 103 மில். நன்கொடை



நாட்டின் ஐந்து மாவட்டங்களில் இரு வேறு செயற்திட்டங்களை முன்னெடுப்ப தற்காக ஜப்பானிய அரசாங்கம் 103 மில்லியன் ரூபாவினை நன்கொடையாக வழங்கியுள்ளது.

மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் செயற்திட்டத்துக்கும் யாழ்., மட்டக்களப்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வாழ்க்கைத் தொழில் அபிவிருத்தி செயற்திட்டங்களை அமுல்படுத்தவுமே ஜப்பானிய அரசாங்கம் இந்நிதியுதவியினை வழங்கியுள்ளது.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் குன்யோ டக்காஷி செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ள பல்வேறு அமைப்பு க்களின் சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளுடன் நேற்று தூதரகத்தில் வைத்து அதற்கான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார்.

இதன்படி வவுனியா, மன்னார் மாவட்டங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியை பொறுப்பேற்கவிருக்கும் சுவிஸ் மன்றம் எனப்படும் எப்.எஸ்.டி. அமைப்புக்கு ஜப்பானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நன்கொடையின் 77 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களை விரைவில் மீளக்குடியமர்த்துவதற்காகவே ஜப்பானிய அரசாங்கம் இதற்கான பணிகளை துரிதப்படுத்தி வருகின்றது.

யாழ்ப்பாணம், புளியன்கோடல் கிராமத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள வர்களின் சமூக பொருளாதார நலனைக் கருத்திற்கொண்டு முழு கிராமத்தையும் மீள்நிர்மாணம் செய்வதற்காக ஜப்பானிய அரசாங்கம் 11.3 மில்லியன் ரூபாவினை சேவாலங்கா மன்றத்துக்கு ஒதுக்கியுள்ளது.
இந்நிதியுதவியின் கீழ் சேவாலங்கா மன்றம் வீதி, கிணறுகள், பாலர் பாடசாலைகள் ஆகியவற்றை புனர்நிர்மாணம் செய்யவுள்ளது. இதன் மூலம் 500 குடும்பங்கள் நன்மையடையுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீளக்குடியம ர்த்தப்பட்ட பகுதிகளில் விவசாய உட்கட்ட மைப்புகளை அபிவிருத்தி செய்வதற்காக சர்வோதய மன்றத்துக்கு 10 மில்லியன் ரூபாவினை ஜப்பானிய தூதரகம் ஒதுக்கீடு செய்துள்ளது. மாத்தறை மாவட்டத்தில் “பெண்களின் பொருளாதாரத்தை வலு வூட்டல், கருவாடு உற்பத்தியை அதிகரித்தல்” செயற்திட்டத்தை அமுல்படுத் துவத ற்காக சோபா காந்தா சூழல் முகாமைத்துவம் மற்றும் சமுதாய அபி விருத்தி மன்றத்துக்கென 4.7 மில்லியன் ரூபா தூதரகத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
TUESDAY, JANUARY 12, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, January 11, 2010

தபால்மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்: 4,01118 பேர் தகுதி; 57036 நிராகரிப்பு



ஜனாதிபதித் தேர்தலின் உத்தியோகபூர்வ தபால்மூல வாக்களிப்பு நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது. 4 இலட்சத்து ஆயிரத்து 118 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யு. பி. சுமணசிறி தெரிவித்தார்.

அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த 15 ஆயிரம் அரச நிறுவனங்களில் இம்முறை தபால்மூல வாக்களிப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.

ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு சமுகமளிக்க முடியாத 4 இலட்சத்து 58 ஆயிரத்து 154 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனர். இவர்களுள் பல்வேறு காரணங்கள் காரணமாக 57 ஆயிரத்து 36 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

தபால்மூல வாக்களிப்பு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட தெரிவத்தாட்சி அலவலகர்களால் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் அலுவலகம் தெரிவித்தது.

12 ஆம் 13 ஆம் திகதிகளில் தவிர்க்க முடியாத காரணமொன்றினால் வாக்களிக்க முடியாத போதும் தபால்மூல வாக்காளரொருவருக்கு 26 ஆம் திகதி பிற்பகல் 4 மணி வரை அந்த வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இருப்பினும், அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் குறிப்பிட்ட மாவட்டத் தின் தெரிவத்தாட்சி அலுவலருக்கும் 26 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு முன்னதாக கிடைக்க வேண்டுமென்பதை கவனத்திற்கொள்ளுமாறும் சிரேஷ்ட அதிகாரி சுட்டிக் காட்டினார்.

அத்தாட்சிப்படுத்தும் அலுவலரொருவரின் அலுவலகத்தில் அஞ்சல் வாக்குகளை அடையாளமிடும் சந்தர்ப்பத்தில் வேட்பாளரொருவர் சார்பாக முகவரொருவரும் ஒரு கண்காணிப்பு நிறுவனம் சார்பாக கண்காணிப்பாளரொருவரும் நியமனஞ் செய்யப்படலாம். இப்பணியை கண்காணிப்பதற்கு பெப்பரல், சி.எம்.இ.வி. ஆகிய நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விசேட பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தபாலகங்களினூடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 08 ஆம் திகதி ஆரம்பமான வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும் 18 ஆம் திகதிக்குள் நிறைவுபெறுமெனவும் 10 ஆம் திகதியாகிய நேற்று விசேட தபால் விநியோகம் முன்னெடுக்கப்பட்டதாகவும் தபால்மா அதிபர் எம். கே. பி. திஸாநாயக்க நேற்றுக் கூறினார்.
MONDAY, JANUARY 11, 2010லக்ஷ்மி பரசுராமன்

Wednesday, January 6, 2010

வெள்ளமுள்ளிவாய்க்காலில் அதிரடித் தேடுதல்: பிரபாகரன் தனிப்பட்ட பாதுகாப்புக்காக பயன்படுத்திய ஆயுதங்கள், கவசம் மீட்பு


புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனிப்பிட்ட பாதுகாப்புக்கு பயன்படுத்திய ஆயுதம், பாதுகாப்பு கவசம் உள்ளிட்ட பெருந்தொகை ஆயுதங்களும் வெடிபொருட்களும் வெள்ளமுள்ளி வாய்க்காலிலிருந்து கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எல். கருணாரட்ன தெரிவித்தார்.

மீட்கப்பட்டிருக்கும் எம் 16 - ஏ 2 ரக விசேட கிரனேற் லோஞ்சரும் அதனுடன் காணப்பட்ட உடற் கவசமும் பிரபாகரன் தனது தனிப்பட்ட பாதுகாப்புக்காக பயன்படுத்தியவையென்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கருணாரட்ன கூறினார்.

வெள்ள முள்ளிவாய்க்காலில் சுமார் 15 அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டி ருந்த நிலையிலேயே நேற்று முன்தினம் இரவு இவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி விசேட குற்றப்புலனாய்வு பொலிஸ் பிரிவினரே இவற்றை கண்டுபிடித் ததாகவும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும் வெடிபொருட்களும் மேலதிக சோதனைகளுக்காக வவுனியா சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

வெள்ள முள்ளிவாய்க்காலிலிருந்து மேலும் 125 தற்கொலை அங்கிகள், 50 மோட்டார் குண்டுகள், 60 விமான எதிர்ப்பு பீரங்கி, 12 போர் ரக சொட் கன், 250 குதிரை வலு சக்தி கொண்ட படகு இயந்திரம், 40 குதிரை வலு சக்தி கொண்ட படகு இயந்திரம், ‘ஹெரட்’ குண்டு, 2 ஆயிரம் கிலோகிராம் நிறை கொண்ட ஆர். டி. எச். வெடிமருந்து, 02 கிளேமோர் குண்டுகள், 50 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பெருந்தொகை ஆயுதங்களும் வெடிபொருட்களும் பொலிஸார் மற்றும் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
WEDNESDAY, JANUARY 06, 2010லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, January 5, 2010

பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் மல்க அமைச்சர் சந்திரசேகரனின் இறுதிக் கிரியை:தலவாக்கலை சோக மயம்; அரசியல் பிரமுகர்கள், திருமாவளவன் பங்கேற்பு


காலஞ்சென்ற அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் நேற்று பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் தலவாக்கலை லிந்துலை நகர சபை மைதானத்தில் இடம்பெற்றது.

அமைச்சரின் வீட்டிலிருந்து நேற்று நண்பகல் ஒரு மணிக்கு முக்கிய பிரமுகர்கள், மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ எடுத்து வரப்பட்ட அமைச்சரின் பூதவுடல் மாலை மூன்றரை மணியள வில் லிந்துலை நகர சபை மைதானத்தை அடைந்தது.

தலவாக்கலையில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் சந்திரசேகரனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், எம்.பியுமான பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான ஆறுமுகன் தொண்டமான், சி. பி. ரத்நாயக்க, சுசில் பிரேமஜயந்த், தி. மு. ஜயரத்ன, திஸ்ஸ வித்தாரன, பிரதி அமைச்சர்களான பெ. ராதாகிருஷ்ணன், வி. புத்திரசிகாமணி, எம். எஸ். செல்லச்சாமி, மத்திய மாகாண கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன், புளொட் இயக்கத் தலைவர் சித்தார்த்தன், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், எதிர்க்கட்சியைச் சேர்ந்தோர் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் நகர சபை மைதானத்தில் நேற்று குழுமியிருந்தனர்.

இந்தியாவின் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனும் நேற்று அமைச்சரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

அமைச்சரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்காக லிந்துலை நகர சபை மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி நின்றனர்.
அலை அலையாக வந்த மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர். நகர சபை மைதானத்து க்குள் நுழைய முடியாத நிலையில் மைதானத்தை சூழவுள்ள தேயிலை மலைகளின் படிக்கட்டுக்களில் பெருந்திரளான மக்கள் நின்ற வண்ணம் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த அமைச்சரின் பூதவுடலுக்கு கண்ணீர் மல்க தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.

அமைச்சரின் இறுதிக் கிரியைகளை முன்னிட்டு ஹட்டன், தலவாக்கலை நகரெங்கும் சோகமயமாக காட்சியளித்தது. கடைகள் பூட்டப்பட்டிருந்ததுடன் வெள்ளைக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன.
இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தலவாக்கலைக்கு விஜயம் செய்து தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

கொழும்பிலிருந்து தலவாக்கலைக்கு கொண்டு வரப்பட்ட அமைச்சர் சந்திரசேகரனின் பூதவுடலுக்கு வீதியின் இரு புறங்களிலும் குழுமியிருந்த ஏராளமான மக்கள் மலர்கள் தூவியும் கண்ணீராலும் தமது இறுதி அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.

இறுதி அஞ்சலியின் போது அரசாங்கம் மற்றும் அமைச்சரவை சார்பில் அமைச்சர் தி. மு. ஜயரத்ன இரங்கல் உரை நிகழ்த்தினார்.

ஜனாதிபதியின் இரங்கல் உரையினை பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் வாசித்ததுடன் தனது உரையையும் ஆற்றினார்.

எதிர்க்கட்சித் தலைவரின் இரங்கல் உரையினை பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர சமரவீர வாசித்தார் மலையக மக்கள் முன்னணி சார்பில் அதன் பொதுச் செயலாளர் எஸ். விஜயகுமாரன் இரங்கல் உரை நிகழ்த்தினார்.

இந்திய அரசாங்கம் மற்றும் தமிழகம் சார்பில் தொல் திருமாவளவன் இரங்கல் உரையாற்றினார்.

இறுதியாக அமைச்சரின் மனைவி திருமதி சாந்தினி சந்திரசேகரன் நன்றியுரை நிகழ்த்தினார்.

அமைச்சரின் பூதவுடலுக்கு பொலிஸ் மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. இந்து மதம் மட்டுமன்றி பெளத்த, இஸ்லாமிய மத அனுஷ்டானங்களும் இடம்பெற்றன. பசில் ராஜபக்ஷ எம்.பி. இறுதி வரை இருந்து அரச தரப்பிலான அனைத்து கடமைகளையும் முன்னெடுத்தார்.

அமைச்சரின் பூதவுடல் நேற்று மாலை 6.10க்கு உறவினர்கள், கட்சித் தொண்டர்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் அக்கினியுடன் சங்கமமானது.

அவரது மருமகன் பிரசாத் பூதவுடலுக்கு தீ வைத்தார்.
TUESDAY, JANUARY 05, 2010 லக்ஷ்மி பரசுராமன்

Monday, January 4, 2010

சரத் பொன்சேகாவின் குடும்ப ஆயுதக் கம்பனியின் ஊழல், மோசடிகள்:48 மணி நேரத்தினுள் விவாதம் நடத்த அரச தரப்பு தயார்


சரத் பொன்சேகாவின் குடும்ப ஆயுதக் கம்பனியினால் புரியப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பாக எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் தனியார் தொலைக்காட்சியொன்றில் விவாதம் நடத்த அரச தரப்பு தயாரெனவும், எதிர்க்கட்சி அதற்கு இணங்காவிடின் குறித்த ஆயுதக் கொள்வனவின்போது இடம்பெற்ற ஊழல் தொடர்பான தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தப்படுமென்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்பி.யுமான விமல் வீரவன்ச நேற்று மீண்டும் சவால் விடுத்தார்.

மணமகனும் மணமகளும் சந்தித்துப் பேச்சு நடத்த இதுவொன்றும் மணமேடையல்ல. விவாத மேடை. இங்கு அரச தரப்பில் ஜனாதிபதி தான் விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்பது அவசியமில்லை. அதற்கு நாம் யாரையும் நியமிப்போம். அதேபோல் எதிர்க்கட்சி சார்பாக பொன்சேகா தான் விவாதத்தில் பங்குபற்ற வேண்டுமென நாம் கோரவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா, இராணுவத் தளபதியாக இருந்தவேளை அவரது மருமகனின் பெயரில் ஆயுதக் கம்பனியொன்றை நடத்தி வந்தமை தொடர்பாக நாம் அறிந்திருந்தோம்.

இருப்பினும் தற்போது சரத் பொன்சேகாவின் ‘கிரீன் கார்ட்’ டிலுள்ள விலாசமும் அமெரிக்காவில் அவரது மருமகனின் பெயரில் இயங்கி வரும் ‘ஹைகோப்’ எனும் ஆயுத கம்பனியின் விலாசமும் ஒன்றாக இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

கிரீன் கார்டில் உள்ளது போன்ற, கார்த்திஹேவா சரத் சந்திரலால் பொன்சேக்கா, 17545 கோல்ட் ட்ரைவ், ஹெட்மண்ட், ஓ.கே, 73012 என்ற விலாசத்திலும் ‘ஏ-055-090192’ என்ற க்ரீன் கார்ட் இலக்கத்திலுமே குறித்த ஆயுதக் கம்பனியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்படியென்றால் இதனை அவரது குடும்ப கம்பனியென்றுதானே கூறவேண்டுமென்றும் விமல் வீரவன்ச எம்.பி. கேள்வி எழுப்பினார்.

இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலகட்டத்தில் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு உட்பட்ட பெறுமதிமிக்க ஆயுதங்களை கொள்வனவு செய்தல் மற்றும் கேள்விப் பத்திரங்களை கோரும் அதிகாரம் ஆகியன பொன்சேகாவிடம் இருந்தன.

அதனை உபயோகித்தே அவர் ஊழல் மோசடிகளை கையாண்டிருப் பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்றுக் காலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விமல் வீரவன்ச எம்.பி, சரத் பொன்சேகா இராணுவத் தளபதி யாக இருந்த காலத்தில் ஆயுதக் கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விவாத மொன்றை நடத்த வேண்டுமென சவால் விடுத்திருந்தார்.

அதற்கு, அந்த விவாதத்தில் அரச தரப்பில் ஜனாதிபதி கலந்துகொள்ள வேண்டு மெனக் கோரி பொன்சேகாவின் ஊடகப் பேச்சாளர்களான அனுர குமார திஸாநாயக்கவும் மங்கள சமரவீரவும் கூட்டாக இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே விமல் வீரவன்ச எம்.பி. நேற்று மீண்டும் இந்த சவாலை விடுத்தார்.

’பொன்சேக்கா ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி. நீங்கள் இப்போது பெரிய பிள்ளை. (லொக்கு லமயெக்) இராணுவத்தில் தளபதியாகவிருந்த காலத்தில் செய்த சிறு பிள்ளைத் தனமான காரியங்களை கைவிட்டுவிட்டு இப்போது பொறுப்பாக நடத்துகொள்ளுங்கள்’ என்றும் வீரவன்ச எம்.பி. கூறினார்.

“நீங்கள் சுத்தமானவராக இருந்தால், பிழையற்றவர் என்றால், மதிப்புக் கொடுப்பவராகவிருந்தால் நீங்களே இந்த விவாதத்தில் நேரடியாகப் பங்குபற்றலாம். ஏனெனில் இது உங்கள் குடும்ப கம்பனி, ஊழல் குற்றங்கள் தொடர்பான சிறந்த அனுபவம் உங்களுக்கேயிருக்கிறது.

இருப்பினும் நீங்கள் விரும்பினால் உங்களுக்குப் பதிலாக வேறு யாரையும் விவாதத்தில் பங்குபற்ற வைக்கலாம். அதில் எமக்கு எந்த ஆட்சேபனையுமில்லை” எனவும் பொன்சேகாவுக்கு விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், மங்கள சமரவீர, சோமவன்ச அமரசிங்க ஆகியோர் வெள்ளையா கறுப்பாவென மக்களுக்கு நன்கு தெரியும்.

ஆனால் பொன்சேகா கறுப்பா வெள்ளையாவென்பது மக்களுக்கு இன்னும் தெரியாது. அவர் அரசியலுக்குள் வந்து 40 நாட்களே ஆகின்றன. இவர் 40 வருட அரசியல் அனுபவம் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது ஊழல் மோசடிகளை சுமத்த முற்படுகிறார். பிறர் மீது ஊழல் மோசடிகளை சுமத்த எத்தனிப்பவர் முதலில் தான் சுத்தமாக இருக்கிறாரா என்பதைப் பார்க்க வேண்டும்.

தனது குடும்ப கம்பனியூடாக அவரால் முன்னெடுக்கப்பட்ட ஊழல்களை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது எமது கடமை. உண்மையில் பொன்சேகா இலங்கையை மாத்திரமன்றி அமெரிக்காவையும் ஏமாற்றியிருக்கிறா ரெனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, தினேஷ் குணவர்தன, ஜி. எல். பீரிஸ், ராஜித்த சேனாரத்ன, டளஸ் அழகப் பெரும, சுசில் பிரேம ஜயந்த் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

MONDAY, JANUARY 04, 2010 லக்ஷ்மி பரசுராமன்