Thursday, December 31, 2009

சிவில் பாதுகாப்பு சேனா விதாயக்க நிதியம்:‘150 கோடி ரூபா தேர்தலுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறும் குற்றச்சாட்டு வெறும் பொய்’


சிவில் பாதுகாப்பு படையினரின் சேனா விதாயக்க நிதியத்திலிருந்து 150 கோடி ரூபா ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்கென உபயோகப்படுத்தப் பட்டிருப்பதாக மங்கள சமரவீர எம்.பி. ஊடகங்களுக்கு வழங்கியிருக்கும் செய்தி யினை அதன் பணிப்பாளர் அட்மிரல் சரத் வீரசேகர நேற்று முழுமை யாக மறுத்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று மாலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரி வித்தார்.

சேனாவிதாயக்க நிதியத்தில் தற்போது ஒரு இலட்சம் ரூபா கூட சேமிப்பில் இல்லை. இந்நிலையில் எவ்வாறு 150 கோடி ரூபாவினை செலவு செய்ய முடியும். தேர்தல் காலத்தில் ஜனாதிபதிக்கு அவதூறு செய்வதற்கென்றே திட்டமிட்ட சிலர் இவ்வாறான பொய்த் தகவல்களை வழங்கியுள்ளனர்.

THURSDAY, DECEMBER 31, 2009லக்ஷ்மி பரசுராமன்

யாழ்.குடா, தீவகப் பகுதிகளில் ஊரடங்கு முற்றாக நீக்கம்அல்லைப்பிட்டி, பொன்னாலை சோதனை நடவடிக்கைகள் நிறுத்தம்



தீவகப் பகுதி உட்பட யாழ். குடாநாட்டில் அமுல்படுத்தப்பட்டு வந்த இரவு நேர ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுகின்றது. அல்லைப்பிட்டி, பொன்னாலை, காரைநகர், மண்டைத் தீவு தடை முகாம்கள் மற்றும் சோதனைச் சாவடிகளும் நீக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் பணிப்புரையை அடுத்து இன்று முதல் இவை அனைத்தும் நீக்கப்படுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

தீவகம், அல்லைப்பிட்டி, காரைநகர், மண்டைத்தீவு போன்ற உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளுக்கு இன்று முதல் பொதுமக்கள் சுதந்திரமாக சென்றுவரக் கூடியதாக இருக்கும். அத்துடன் தீவகப் பகுதிகளிலும் யாழ். குடாநாட்டிலும் மீனவர்களுக்காக அமுல்செய்யப்பட்டிருந்த பாஸ் நடைமுறையும் இன்று முதல் ரத்துச் செய்யப்படுகிறது.

தீவகப் பகுதி உட்பட உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக குறிப்பிடப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் செய்திருந்தார். இப்பகுதி மக்கள் சுதந்திரமாக சென்றுவருவதற்காக மேற்படி சோதனைச் சாவடிகள், தடை முகாம்கள், வீதித் தடைகள் அகற்றுவது குறித்து ஆராய்ந்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் மேற்படி விடயம் தொடர்பாக கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

தேவேளை தீவகப் பகுதிகளுக்கு உட்புகும் அல்லைப்பிட்டி தடைமுகாமும், நேற்று மதியம் முதல் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். குடாநாட்டிலுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் தெரிவிக்கிறது.

நயினாதீவு, நெடுந்தீவு போன்ற தீவகப் பகுதிகளுக்குச் செல்வோர் கட்டாயமாக அல்லைப்பிட்டியூடாகவே செல்லவேண்டும். வாகனத்தில் செல்வோர் வாகனத்தைவிட்டு இறங்கி அடையாள அட்டை பதிவு செய்தே செல்லவேண்டும்.

எனினும் நேற்று மதியம் முதல் இந்த நடவடிக்கை முற்றாக நீக்கப்பட்டுள்ளது. சாதாரண காவலரண் மட்டுமே இயங்கு கிறது.
யாழ். குடாநாட்டடில் தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலும் சிலவேளைகளில் நள்ளிரவு 12.00 மணி முதல் 4.00 மணி வரையிலும் உத்தியோகப்பற்றற்ற ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வந்தது.

ஆலய உற்சவங்கள், சிவராத்திரி, கிறிஸ்மஸ் போன்ற தினங்களில் ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டு நேர மாற்றங்கள் செய்யப்பட்டும் வந்தன.
எனினும் நேற்று முதல் குடாநாட்டுக்கான ஊரடங்கு முற்றாக நீக்கப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்பட்ட பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய பகுதி மற்றும் மண்டைத்தீவு தடைமுகாம், மண்டைத்தீவு பகுதி மற்றும் காரைநகர் பகுதிக்கு இன்று முதல் மக்கள் சுதந்திரமாக சென்று வரமுடியும்.
ஈழத்துச் சிதம்பரம் என்றழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் உற்சவம் தற்போது நடைபெற்று வருவதால் ஆலயப் பகுதியில் தடைமுகாம்கள், சோதனைச் சாவடிகள் மற்றும் ஊரடங்கு நீக்கப்படுவது குறித்து ஒலிபெருக்கி மூலம் ஈ. பி. டி. பி. நேற்று மக்களுக்கு அறிவித்தது.
THURSDAY, DECEMBER 31, 2009லக்ஷ்மி பரசுராமன்

Monday, December 28, 2009

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பலரிடம் பண மோசடி: தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் தலைவர் அமில தேரர் நேற்று கைது


தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் தலைவர் வண. தம்மபர அமில தேரர் நேற்றுக் காலை சி.ஐ.டி. யினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

தலங்கமவில் வைத்து நேற்றுக் காலை 10 மணியளவில் இவரைக் கைது செய்த சி.ஐ.டி.யினர் விசாரணைகளுக்காக அழைத்துச் சென்றிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அமில தேரருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சி.ஐ.டி.யினருக்கு கிடைக்கப்பெற்றதையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்மை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி தேரர் பண மோசடி செய்ததாக ஹொரணை, குளியாப்பிட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சி.ஐ.டி. யினருக்கு வழங்கிய முறைப் பாடுகளை அடிப்படையாக வைத்தே நேற்று அமில தேரரை கைதுசெய்திருப்பதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஐ. எம். கருணாரட்ன கூறினார்.

பண மோசடி தவிர்ந்த பல்வேறு குற்றச்சாட்டுக்களும் அமில தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருப்பதனால், சி.ஐ.டி.யினர் இது குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வருவதாக குறிப்பிட்ட பொலிஸ் பேச்சாளர் ஆரம்ப விசாரணைகள் இடம்பெறுகின்றன.
MONDAY, DECEMBER 28, 2009லக்ஷ்மி பரசுராமன்

பண்டிகைக் காலம்; மக்கள் நலன் கருதி நாடு பூராவும் விசேட பொலிஸ் பாதுகாப்பு திட்டம் கொழும்பு நகரில் மட்டும் 500 பொலிஸார் சேவையில்



பண்டிகை காலங்களில் பொதுமக்களின் நலனைக் கருத்திற் கொண்டு நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாகங்களிலுமுள்ள பிரதான நகரங்களில் இவ்விசேட பாதுகாப்பு செயற்திட்டம் அமுல்படுத்தப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

சன நடமாட்டம் நிறைந்த பிரதான நகரங்களில் ஏமாற்றுப் பேர் வழிகள் மற்றும் முடிச்சு மாறிகளிடமி ருந்து மக்களை பாதுகாப்பதற்காகவே இவ்விசேட திட்டத்தினை பொலிஸ் திணைக்களம் ஏற்பாடு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெளியிடங்களிலிருந்து பொருள் கொள்வனவுக்காக கொழும்பு மற்றும் பிரதான நகரங்களுக்கு வரும் மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு 24 மணித்தியாலமும் பொலிஸ் பாதுகாப்புச் சேவை நடத்தப்படவுள்ளது. இதன் போது பொலிஸார் சீருடையில் மாத்திரமன்றி சிவில் உடையுடனும் களத்திலிறங்கி சேவையிலீடுபடவிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

கொழும்பின் பிரதான நகரில் மாத்திரம் மேலதிகமாக ஐநூறு பொலிஸாரை சேவையிலீடுபடுத்த தீர்மானித்திருப்பதாகவும் ஏனைய நகரங்களில் சன நடமாட்டத்தின் அளவுக்கேற்ப பொலிஸார் சேவையிலீடுபடுத்தப்படுவரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த மாதம் இறுதி வரையில் இப்பாதுகாப்புச் சேவையை நடைமுறையில் வைக்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிவில் சேவையிலீடுபடுத்தப்படும் பொலிஸார் வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனைகளை நடத்துவதன் மூலம் ஏமாற்றும் நோக்குடன் செயற்படும் போலி வர்த்தகர்களிடமிருந்து நுகர்வோர் பாதுகாக்கப்படுவர்.

இதனால் பொருள் கொள்வனவுக்காக வெளியிடங்களிலிருந்து கொழும்பு வருவோர் எவ்வித தடையுமின்றி தாராளமாக தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியுமென சுட்டிக்காட்டிய பொலிஸ் பேச்சாளர் இருப்பினும், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுவது சிறந்தது எனவும் தெரிவித்தார்.
MONDAY, DECEMBER 28, 2009லக்ஷ்மி பரசுராமன்

‘சதி முயற்சியில் ஈடுபடுவோரின் தகவல் கோரல்’


ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சதி நடவடிக்கையில் ஈடுபட எவரேனும் முனைவார்களாயின் உடனடியாக அவர்கள் குறித்த தகவல்களை பெற்றுத் தருமாறு தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன கேட்டுக் கொண்டுள்ளார்.

பொது மக்கள் போதுமானளவு ஒத்துழைப்பை இதுவரை பெற்றுத் தந்திருப்பதால் தேர்தல் நடவடிக்கைகள் சுமுகமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் குளறுபடிகளை தவிர்ப்பதற்காக நாடளாவிய ரீதியில் விசேட வீதிச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
MONDAY, DECEMBER 28, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Friday, December 25, 2009

40,000 மெ.தொ. அரிசியை உடன் இறக்குமதி செய்ய அரசு முடிவு


பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகரித்து வரும் கேள்வியை ஈடுசெய்யும் வகையில் அரசாங்கம் மேலதிகமாக 40 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர தெரிவித்தார்.

தனியார் வர்த்தகர்கள் பண்டிகைக் காலத்திற்கென விசேடமாக 44 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ள நிலையிலேயே அரச வாணிப கூட்டுத்தாபனம் மேலதிகமாக 40 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதில் 15 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி எதிர்வரும் 28 ஆம் திகதியும் மிகுதி 25 ஆயிரம் மெற்றிக் தொன், அரிசி அடுத்த வாரமளவிலும் இலங்கையை வந்தடையவிருப்பதாக செயலாளர் பி.பி. ஜயசுந்தர மேலும் கூறினார்.
FRIDAY, DECEMBER 25, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Monday, December 21, 2009

ஜனாதிபதித் தேர்தல் நாட்டுக்கு கிடைத்திருக்கும் பெறுமதியான சந்தர்ப்பம்:அமைச்சர் சம்பிக்க ரணவக்க



ஜனாதிபதித் தேர்தல் நாட்டுக்கு கிடைத்திருக்கும் பெறுமதியான சந்தர்ப்பம். இதனை சரியாக பயன்படுத்தி எமது எதிர்கால பிரஜைகளுக்கு வளமான நாட்டைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது எமது கடமையாகுமென சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்றுத் தெரிவித்தார்.

“ஜனாதிபதித் தேர்தலும் வழக்கறிஞர்களின் பொறுப்பும்” எனும் தொனிப்பொருளில் மஹாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பொருளாதார வளம் மிக்க சிங்கப்பூரிலும் எமது இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். அனைத்து வளங்களும் இயற்கையாகவே அமையப் பெற்ற போதிலும் கடந்த 30 வருடகாலமாக நாட்டில் நிலவிய பயங்கரவாத செயற்பாடுகளினால் ஏனைய நாடுகள் இலங்கையுடன் வர்த்தக ரீதியான உறவை முன்னெடுக்க தயக்கம் காட்டின.

சிங்கப்பூருக்கு வருடத்துக்கு ஒரு இலட்சத்து 28 ஆயிரம் வெளிநாட்டு கப்பல்கள் வருகின்றன. ஆனால் கொழும்பு துறைமுகத்துக்கு 4 ஆயிரம் கப்பல்கள்தான் இதுவரைகாலமும் வந்து செல்கின்றன. இதன் மூலம் 25 பில்லியன் ரூபாவே வருமானமாகக் கிடைக்கின்றது.

எமது நாட்டில் வாழும் 20 மில்லியன் மக்களிள் 13 மில்லியன் பேரிடம் இன்று கையடக்கத் தொலைபேசி பாவனையிலு ள்ளது. 60 இலட்சத்துக்கும் அதிகமானோர் கணனியை உபயோகித்து வருகின்றனர். நிச்சயமாக எமது நாடும் சிறப்பான ஆட்சியிலிருக்குமாயின் ஒருநாள் பொருளதார வளம் மிக்க நாடாக திகழும்.

இன்று நாட்டில் தீவிரவாதம் இல்லை. பிரபாகரனின் வரலாற்றுக்கு இந்த அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இனி பொருளாதாரத்துறையை கட்டி யெழுப்புவதில் தடையேதும் கிடையாது.

இக்கருத்தரங்கில் ஏற்றுமதி அபிவிருத்தி சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளுக்கான அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் உரையாற்றுகையில்:

பொன்சேகா தமது சுயநலத்துக்காக எதிர்காலத்தை நினைத்துப் பார்க்காத வகையில் கூறிய வார்த்தைகளால் இன்று நாடும் இராணுவமும் பல்வேறு சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள் ளது.

தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் அபிவிருத்தியை கருத்திற்கொண்டு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம். அதனைத் தொடர்ந்து முன்னெடு க்க தாம் இந்த அரசாங்கத்துக்கு ஒத்துழை ப்பை பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
TUESDAY, DECEMBER 22, 2009 லக்ஷ்மி பரசுராமன்

தேர்தல் காலத்தில் விசேட வீதிச் சோதனைகள்


தேர்தல் காலத்தில் விசேட வீதிச் சோதனைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்திருப்பதாக தேர்தல் நடவடிகைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி நவரட்ண நேற்றுத் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் இதற்கென அமைக்கப்பட விருக்கும் விசேட சோதனைச் சாவடிகளினூடாக போக்குவரத்திலீடுபடும் வாகனங்கள் சோதனைக்குட் படுத்தப்படுமெனவும் அவர் கூறினார்.

தேர்தல் வேட்பாளர்களுக்கோ கட்சிகளுக்கோ அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான சட்டத்துக்கு முரணான போஸ்டர்கள், கட்அவுட்கள் கொண்டு செல்லல், பிரசாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையிலான குண்டர்களின் செயற்பாடுகள், ஆயுதங்கள் கடத்தல் போன்றவற்றை தடுக்கும் முகமாகவே வீதிச் சோதனைகள் முன்னெடுக்கப்பட விருப்பதாகவும் கூறினார்
MONDAY, DECEMBER 21, 2009 லக்ஷ்மி பரசுராமன்

இலங்கை மீனவர்கள் குறித்து இதுவரை தகவல் இல்லை’


இந்திய கடல் எல்லைக்குள் காணாமற்போன இரண்டு இலங்கை மீனவர்கள் குறித்தும் இதுவரை எவ்விதத் தகவல்களும் கிடைக்கவில்லையென கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் அத்துல செனரத் நேற்றுத் தெரிவித்தார்.

கடந்த இரு தினங்களாக கடலில் ஏற்பட்ட வழமைக்கு மாறான கொந் தளிப்பின் காரணமாக இந்திய கடல் எல்லைக்குள் நின்றிருந்த இலங்கை மீனவர்கள் படகுடன் காணாமற் போயுள்ளனர். இவர்களைத் தேடும் பணி அந்நாட்டின் கடற் படையினரின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்
MONDAY, DECEMBER 21, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, December 15, 2009

தேசிய பாதுகாப்பு இரகசியத் தகவல்கள்:ஓய்வுபெற்ற அல்லது சேவையிலுள்ள இராணுவ வீரரொருவர் வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றம்


தேசத்தின் பாதுகாப்பு மற்றும் அதன் அக்கறையுடன் கூடிய செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான இரகசிய தகவல்களை ஓய்வுபெற்ற அல்லது சேவையிலிரு க்கும் இராணுவ வீரர் ஒருவர் வெளியிடுவது சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகுமென சிரேஷ்ட வழக்கறிஞர் காலிங்க இந்ததிஸ்ஸ கூறினார்.

தகவல் ஊடகத்துறையமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று சிரேஷ்ட வழக்கறிஞர்கள் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அந்தவகையில் சரத் பொன்சேக்கா நாட்டு மக்களுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் களங்கம் ஏற்படும் வகையில் வார இறுதி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியிருக்கும் செவ்வி சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகுமெனவும் சிரேஷ்ட வழக்கறிஞர் காலிங்க இந்ததிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.

உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின்படி சரத்து 6, 1 (இ) மற்றும் சரத்து 7 ஆகியவற்றின் படி சரத்பொன்சேக்கா ஊடகத்துக்கு வழங்கியிருக்கும் தகவல் சட்டப்படி குற்றமாகுமென கணிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த வழக்கறிஞர் காலிங்க, குற்றச் செயல் சட்டத்தின்படி நிரூபிக்கப்படும் பட்சத்தில் சரத்து 6, 1 (இ) யின்படி 14 வருட சிறைத் தண்டனையும் சரத்து 7 இன்படி இரண்டு வருட சிறைத் தண்டனையும் வழங்கப்பட முடியுமெனவும் தெரிவித்தார்.

இருப்பினும் சரத் பொன்சேக்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசாங்கம் மற்றும் சட்டமா அதிபர் கைக ளிலேயே தங்கியுள்ளதெனவும் அவர் கூறி னார். பத்திரிகையில் பிரசுரமாகியிரு க்கும் அவரது செவ்வி நாட்டுக்கும் அதன் பாதுகாப்புக்கும் அச்சுறுத் தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அவ்வாறாயின் பொன்சேக்கா அதே பத்திரிகையில் தனது மறுப்பு அறிக்கையை வெளியிட முடியும் அல்லது செய்தியாளர் மாநாடொ ன்றின் மூலம் தனது செவ்வி எந்த இடத்தில் திரிவடைந்திருக்கிறது என் பதனையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

அதற்கேற்பவே சட்ட நடவடிக் கைகள் எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

வழக்கறிஞர் அலி சப்றி இதுபற்றி கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த சில காலமாகவே குறித்த ஆங்கிலப் பத்திரிகையில் அரசாங்க த்துக்கு எதிரான கருத்துக்களே வெளிவருகின்றன.

அந்த வகையில் பத்திரிகை பிரசாரத்தில் ஏதாவது தவறு நடந்தி ருக்கும் என்ற கருத்தை இலகுவில் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.

சிரேஷ்ட வழக்கறிஞர் கோமின் தயாசிறி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் நாட்டு க்கும் முப்படையின ருக்கும் அப கீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிடாது நாட் டின் வெற்றியை மாத்திரமே கருத் திற் கொண்டு செயற்பட வேண்டும்.
TUESDAY, DECEMBER 15, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Monday, December 14, 2009

முல்லை, கிளிநொச்சி மாவட்டங்களில் இதுவரை 22,000 பேர் மீள்குடியமர்வு உறவினர்களுடன் வசிப்போர் 17, 18இல் மீள்குடியேற்றம்



முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் இதுவரையில் 22 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோரை மீளக்குடியமர்த்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தங்கியிருப்போரை மீளக்குடியமர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வசித்து வருபவர்கள் எதிர்வரும் 17 ஆம், 18 ஆம் திகதிகளில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் பூநகரி செயலாளர் பிரிவுகளில் மீளக் குடியமர்த்தப்படவிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் நேற்று தினகரனுக்குக்குத் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களை விடுத்து வவுனியாவின் வெளியிடங்களில் தங்கியிருப்பவர்கள் தமது மீள்குடியேற்றத்தை உறுதி செய்து கொள்வதற்காக வவுனியா - குருமண்காட்டில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மீள்குடியமர்வு க்கான விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அரச அதிபர் கேட்டுக் கொண்டார்.

ஏற்கனவே, பதிவுகளை மேற்கொண்டோரே 17ம், 18ம் திகதிகளில் விசேட பஸ்கள் மூலம் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். தமக்கு அறிவிக்கப்பட்டுள்ள திகதியன்று நகர சபை மைதானத்திற்கு காலை 8 மணிக்கு வருகை தருமாறும் இதன் போது பாரிய பொதிகளை தம்முடன் எடுத்து வரவேண்டாமென்றும் அரச அதிபர் மேலும் கேட்டுக் கொண்டார்.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உருத்திரபுரம் கிழக்கு, ஜெயந்திநகர், பெரிய பரத்தன், உதய நகர் மேற்கு ஆகிய இடங்களிலும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் முழங்காவில், இரணைதீவு, நாச்சிக்குடா, ஜெயபுரம் வடக்கு, ஜெயபுரம் தெற்கு, கிராஞ்சி, பல்லவராயன்கட்டு, பொன்னாவெளி, நல்லூர், கரியாலை நாகபடுவான் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களே 17ம், 18ம் திகதிகளில் மீளக்குடியமர்த்தப்படவு ள்ளனர்.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுக ளில் தங்கிருக்கும் முல்லைதீவு துணுக்காய், மாந்தை கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர் களும் மீளக்குடியமர்த்தப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
MONDAY, DECEMBER 14, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Wednesday, December 9, 2009

கட்சிக்குள் குவியும் பணங்களை ரணில் கொள்ளையடிக்கிறார் ஐ.தே.க. சார்பில் வேட்பாளர் இன்றேல் கடும் நடவடிக்கை



ஐக்கிய தேசியக் கட்சிக்கு கடந்த முறை தேர்தலின் போது 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்தன. 09 மில்லியன் டொலர்களே தேர்தலுக்கு செலவானது. மிகுதி பணத்துக்கு என்ன நடந்தது? என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோர்ன்ஸ்டன் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.

எமது கட்சிக்கு மூடை மூடையாக பில்லியன்களில் பணம் வந்து குவிகின்றது. கட்சித் தலைவர் அப் பணத்தை நன்கு கொள்¨ ளயடிக்கிறார். ‘ஐக்கிய தேசியக்கட்சி’ எனும் பெயரில் அங்கு ரணில் விக்கிரமசிங்க கொம்பனிதான் நடக்கிறதெனவும் ஜோன்ஸ்டன் எம். பி. நேற்றுக் கூறினார். நிப்பொன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மக்களைக் கூட சந்தித்து பேச நேரமில் லாத ஐ.தே.க. தலைவர் அறைக் குள்ளி ருந்து எவ்வாறு பணத்தை சுருட்டலாம் என்பது பற்றியே சதா சிந்தித்துக் கொண்டி ருப்பார். அவருக்கு கட்சி பற்றியோ ஆதரவாளர்கள் பற்றியோ சிறிதும் கவ லையில்லை.

பல்வேறு வழிகளிலும் கட்சிக்கு கிடைக்கும் பணத்தை கொள் ளையடிப்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தனது தலைவர் பதவியை இழக்க விருப் பமில்லாமல் கட்சிக்கு வெளியிலிருந்து ஒருவரை தேர்தல் வேட்பாளராக நிறுத்தி யுள்ளாரென்றும் ஜோன்ஸ்டன் எம்.பி. தெரிவித்தார்.
அரசியல் அனுபவமில்லாத ஜெனரல் சரத் பொன்சேகா எப்படி பொது மக்க ளுக்காக சேவையாற்ற முடியும். எவ்வாறு அவரை நம்பி முழு நாட்டையும் ஒப்ப டைக்க முடியும். எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்னதாக ஐ.தே.க. கட்சிக்குள்ளிருந்து ஒரு பொது வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும் இல்லையேல் நாம் கட்சித் தலைமைத் துவத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை யெடுக்க நேரிடுமெனவும் அவர் கூறினார். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எம். பி. மேலும் கூறுகையில்,

ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக பொது வேட்பாளராக ஜெனரலை நியமிக்க ஐ.தே.க. சார்பில் நடத்தப்பட்ட செயற்குழுக் கூட்டத்தில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த வர்களில் நானும் ஒருவன். நான் ஊட கங்களில் அது குறித்து விளக்கமளித்த தையடுத்து அதனை நிறுத்துமாறும் கூறி எனது அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் கையடக்கத் தொலைபேசிக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்தன. தான் அதற்கு அஞ்சவில்லை.

கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் எனக் குண்டு. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கி ரமசிங்க ஒரு தலைவருக்குரிய இலட் சணங்களுடன் நடந்து கொள்கின்றார் இல்லை. எஸ். பி. திஸாநாயக்க போன்ற திறமையானவர்கள் கட்சியை விட்டு செல்லக் காரணம் இவரது நடத்தையே. திறமையானவர்கள் கட் சியை விட்டுப் போவது குறித்து தலைவர் ரணிலுக்கு சிறிதும் கவலையில்லை.
செயற்குழுக் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தை யடுத்தே இவர் கட்சியை விட்டு விலகியிருப்பதாக ஒரு ஊடகத்தில் அவர் சிரித்துக் கொண்டு பொய் கூறுகிறார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட் சியை எதிர்த்துப் போட்டியிட தைரிய மில்லாவிடில் முதுகெலும்புடைய எஸ். பி., சஜித் பிரேமதாச போன்றவர்களை வேட்பாளர்களாக நியமித்திருக்க வேண்டும்.

எமது கட்சி ஆதரவற்றிருந்த சமயத்தில் எதிர்க்கட்சியிலிருந்து ஏழெட்டு பாராளு மன்ற உறுப்பினர்களுடன் ஐ.தே.கவுக்கு வந்து அதனை கட்டியெழுப்ப உதவியவர் எஸ்.பி. அந்த நன்றியை ரணில் மறந்து விட்டார். திறமை மிக்கவர்கள் போன பின்னர் தொடர்ந்தும் கட்சியில் தானே தலைவராகவிருக்க வேண்டுமென்பதே அவரது விருப்பம்.

இவ்வாறான குறுகிய உள்நோக்கம் கொண்டவர்கள் இருக்கும் கட்சி எவ்வாறு முன்னேற முடியும். சந்திரிகா ஐ.தே.க.வுக்கு எதிராக செய்த மோசடிகளை மறந்து விட்டு இன்று சந்திரிகாவுடனும் மங்களவுடனும் இணைந்து இணையத்தளத்தில் எமக்கு சேறு பூசுகிறார். இந்தப் பயணம் நீடிக்காது.
ஐ.தே.க. வின் கொள்கைகளில் முரண் பட்டிருக்கும் எனக்கு இன்னமும் கட்சி யிலிருந்து விலகுமாறு கோரி கடிதம் தரா மலிருப்பது அதிசயமாகவுள்ளது. நானும் கட்சியை விட்டு விலகினால் அதை விட பெரிய சந்தோஷம் எமது தலைவருக்கு வெறெதுவுமாக இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
WEDNESDAY, DECEMBER 09, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Monday, December 7, 2009

ஜனாதிபதி மஹிந்தவுடன் நேருக்குநேர் போட்டியிடும் தகுதி ரணிலிடம் கிடையாது வடக்கு, கிழக்கு மக்களின் வாக்குகளும் ஜனாதிபதிக்கே -நந்தமித்ர



மக்களின் ஆதரவை தன்னால் வென்றெடுக்க முடியாது என்பது தெட்டத் தெளிவாக விளங்கியுள்ள நிலையிலும், தனது தலைவர் பதவி மாத்திரம் எக்காரணம் கொண்டும் பறிபோய்விடக் கூடாது என்பதில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தளை மாவட்ட அமைப்பாளர் நந்தமித்ர ஏக்கநாயக்க எம்.பி. நேற்று குற்றம் சாட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதியாகக்கூடிய தகுதியும் ஆளுமையும் உள்ள பலர் இருக்கின்ற நிலையிலும் அவர்களை தேர்தலில் போட்டியிடவிடாது வெளியிலிருந்து ஒருவரை கொண்டுவந்திருப்பது தனது தலைவர் பதவியை தக்க வைத்துக்கொள்ளவேயெனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான வதந்திகளை பரப்பி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் ஐ.தே.கவினால் பணம் வழங்கி நியமிக்கப்பட்டவர்களாகும்.

அப்பலோ நிறுவனத்தை பாதுகாப்பு செயலாளர் வாங்கியதாகவும் ஜனாதிபதியின் சகோதரர்கள் கொழும்பில் பெறுமதியான சொத்துக்களை வாங்கி வருவதாகவும் வதந்தி பரப்பப்பட்டுள்ளது. இவற்றில் எதுவித உண்மையும் கிடையாது.

40 வருட காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தவர்கள் இவ்வாறு பணம் திரட்டியது கிடையாது. இவ்வாறு பணம் திரட்டும் தேவையும் கிடையாது.

நாட்டுக்கு சேவையாற்றவே கோட்டாபே ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து இல ங்கைக்கு வந்தார். யுத்தத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க பங்களித்த அவர் அதில் வெற்றியும் கண்டார். புனரமைப்பு பணிகளை பசில் ராஜபக்ஷ சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்.

இவர்களின் பணிகள் தொடர்பில் குறைகூற எதுவுமில்லாத தாலேயே இவ்வாறு வதந்தி பரப்பப்படுகிறது. ஜனாதிபதியின் சகோதரர்கள் கொழும்பில் சொத்து வாங்குவது உண்மையானால் அதனை ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும். மக்கள் மனங்களை குழப்பவே இவ்வாறு வதந்தி பரப்பப்படுகிறது.

ஐ.தே.க. ஆட்சியில் அன்றிருந்த அமைச்சர்கள் தமது குடும்பத்தவர்களுக்கு அரச சொத்துக்களை குத்தகைக்குக் கொடுத்தனர் என்றார்.
MONDAY, DECEMBER 07, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Wednesday, December 2, 2009

நிவாரணக் கிராம மக்கள் சுதந்திரமாக நடமாட்டம்; அரசுக்கும் ஜனாதிபதிக்கும் நன்றி தெரிவிப்பு


யுத்தத்தினால் இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள சகலரும் நேற்று முதல் சுதந்திரமாக நடமாட அனுமதி வழங்கப்பட்டு ள்ளதையடுத்து நேற்று முதலாம் திகதி ஆயிரக்கணக்கானோர் நிவார ணக் கிராமங்களிலிருந்து வெளியே செல்வதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

தம்மை சுதந்திரமாக நடமாட அனுமதித்தமைக்காக ஜனாதிபதிக் கும் அரசாங்கத்துக்கும் நன்றி தெரி வித்துள்ளனர். அத்துடன் மோதல் களின்போது தம்மைக் காப்பாற்றி சுதந்திரத்தைப் பெற்றுத் தந்திருக்கும் ஜனாதிபதிக்கு என்றும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர்கள் அரசாங்க அதிபரிடம் கூறியதாக அவர் தினகரனுக்குத் தெரி வித்தார்.

நேற்று முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையிலேயே நிவாரணக் கிராமங்களில் தங்கியிரு ந்தவர்களுக்கு சுதந்திரமாக நடமாட அரசாங்கம் அனுமதி வழங்கியிரு ந்தது. அதற்கமைய நேற்றுக் காலை 6 மணி முதல் மக்கள் நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியே செல் வதாக அரசாங்க அதிபர் கூறினார்.

நிவாரணக் கிராமத்திலிருந்து நேற்று வெளியேறியோருள் பலர் வவுனியா மாவட்டத்தினுள்ளும் ஏனையோர் ஏனைய மாவட் டங்களுக்கும் சென்றுள்ளனர்.

ஒவ்வொரு நிவாரணக் கிராமத்தி லிருந்தும் சுமார் 700 தொடக்கம் 800 வரையானோர் நேற்று வெளி யேறியுள்ளனர். இவர்களுள் பலர் நண்பகல் 12 மணிக்குள் திரும்பி வந்துவிட்டதாகவும் ஏனையோர் நான்கு, ஐந்து தினங்களுக்குப் பின் னரே வருவதாகக் கூறிச் சென்றி ருப்பதாகவும் அரச அதிபர் தெரிவி த்தார்.

நிவாரணக் கிராமங்களை விட்டு வெளியில் நடமாட விரும்பியவர்களது பெயர் விவரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னரே அவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நிவாரணக் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு ள்ளதுடன் வெளியில் நடமாட விரும்பியோர்க்கென விசேட நுழைவு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
நிவாரணக் கிராமத்தை விட்டு வெளியேறுவோர் மீண்டும் அங்கே வரும்போது நுழைவு அனுமதியை தம்முடனேயே எடுத்து வரவேண்டியது கட்டாயமெனவும் அரச அதிபர் சார்ள்ஸ்

கூறினார் WEDNESDAY, DECEMBER 02, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, December 1, 2009

பாரிய அபிவிருத்தியும் பொருளாதார வலுவூட்டலுமே ஜனாதிபதியின் குறிக்கோள்:அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எந்த நோக்கத்தோடு பதவியேற்றாரோ அந்த நோக்கம் நிறைவேறி விட்டது. தற்போது அவர் அபிவிருத்திப் பாதையில் நாட்டை இட்டுச் செல்கின்றார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதன் மூலம் அபிவிருத்தி திட்டங்களின் பாரிய இலக்குகளை நிறைவேற்றுவதே ஜனாதிபதியின் தற்போதைய ஒரே குறிக்கோளாகுமென தகவல் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமது ஜனாதிபதி முப்படைகளினதும் தலைவராக விருந்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இனி அவரது இலக்கு நாட்டில் பாரிய மட்டத்திலான அபிவிருத்திகளை முன்னெடுப்பதும் பொருளாதாரத்தை வலுவூட்டுவதாகும்.

35 வருட அரசியல் அனுபவமுடைய ஜனாதிபதிக்கு பொருளாதாரம் மற்றும் அரசியல் பற்றி புதிதாக கற்க வேண்டிய அவசியமில்லை. உலக நாடுகள் பல பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்த வேளையிலும் எமது நாட்டில் ஒரு கோடியே 80 இலட்சம் ரூபா செலவில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள தென்றால் அது ஜனாதிபதியின் சிறப்பான ஆட்சிமுறையினை வெளிப்படுத்துவதாகவே உள்ளதெனவும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா கூறினார்.

நாட்டின் அபிவிருத்திப் பணிகள் ஒரு இடத்துக்கு மாத்திரம் உரித்தானவையல்ல. அது சகல மூலை முடுக்கிற்கும் கொண்டு செல்லப்பட வேண்டுமென்பதனையே ஜனாதிபதி மீண்டும் மீண்டும் கூறிவருகிறார்.
அரசியலுக்குள் பிரவேசிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு.

அந்த வகையில் முன்னாள் இராணுவ அதிகாரி மாத்திரம் இதற்கு விதி விலக்காக மாட்டார். அதற்காக தேர்தல் பிரசாரம் என்ற பெயரில் அரசாங்கம், தான் கோரிய பாதுகாப்பினை தனக்கு தர மறுத்து விட்டதாகக் கூறி பொதுமக்களிடையே தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தி அவர்களது சிந்தனையை திசை திருப்ப முயல்கின்றார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவினால் கோரப்பட்டிருந்த 05 பெண் இராணுவ வீராங்கனைகளை தவிர்ந்த ஏனைய அனைத்தும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் 70 பாதுகாப்பு அதிகாரிகளையே கோரியிருந்தார். ஆனால் மொத்தமாக 72 பேர் அவருக்காக வழங்கப்பட்டுள்ளனர். இது அரசாங்கத்தின் கடமை. இது பற்றி பலரும் பிழையான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தெரிவித்தார்.

சுமார் 40 வருட கால வரலாற்றைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே ஒரு பெது வேட்பாளரை தெரிவுசெய்ய முடியாமல் போய்விட்டது.

சிறுபிள்ளைத்த னமாக யாரோ ஒருவரை நிறுத்த வேண்டுமென்பதற்காகவே பொது வேட்பாளரை நிறுத்தியுள்ளனர். இது இலட்சியம் கொண்ட பொது வேட்பாளருக்கும் குறிக்கோள் எதுவுமற்ற கேட்பாட்டாளர்களுக்குமிடையிலான போட்டியென்பதனை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
TUESDAY, DECEMBER 01, 2009 லக்ஷ்மி பரசுராமன்