Monday, August 30, 2010

நிரூபமாராவ் இன்று வருகை:வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு நேரடி விஜயம்: இந்திய அபி. பணிகளையும் பார்வையிடுவார்


இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமாராவ் இன்று இலங்கை வருகிறார். இரு தரப்புச் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காக நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் இவர், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்திட்டங்களை நேரில் சென்று பார்வையிடுவாரென வும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமாராவ் உள்ளிட்ட குழுவினர் வடக்கில் வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (31) வவுனியா சென்றடையும் நிரூபமா தலைமையிலான குழுவினர் அங்கே நிறுவப்பட்டிருக்கும் மெனிக்பாம் மற்றும் கதிர்காமர் நிவாரணக் கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், வவுனியா அரச அதிபர் அலுவலகத்தில் கலந்துரையாடலொன்றில் பங்குபற்றுவர்.
அதனைத் தொடர்ந்து அவர் நிலக்கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் இந்தியக் குழுவினர் செயலாற்றும் இடங்களை நேரில் சென்று பார்வையிடுவாரெனவும் வவுனியா அரசாங்க அதிபர் திருமதி. சார்ள்ஸ் கூறினார்.

இதனையடுத்து, நிரூபமாராவ் வடக்கில் ஏனைய மாவட்டங்களுக்கும் விஜயம் செய்து இந்திய அரசாங்கத்தின் நிதியுதவி யின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்து ஆராய்வார். குறிப்பாக வடக்கில் இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படவிருக்கும் வீடுகள் குறித்து இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படுமெனவும் வெளி விவகார அமைச்சு தெரிவித்தது. இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் மேலும் 12 அரசாங்கப் பிரதிநிதிகள் இலங்கை வருவரென எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதி நிதிகள், இலங்கைத் தொழிலாளர் காங் கிரஸின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய கட்சித் தலைவர்களை இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சந்தித்து உரையாடுவார்.

எதிர்வரும் 02 ஆம் திகதி அவர் நாடு திரும்புவதற்கு முன்னதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் ஜி. எல். பீரிஸ் ஆகியோருடன் இருதரப்புச் சந்திப்புக்களை மேற்கொள் வார்ரெனவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
MONDAY, AUGUST 30, 2010லக்ஷ்மி பரசுராமன்

புனர்வாழ்வு பெற்ற 500 பேர் 4ம் திகதி குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு


புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் 500 பேர் எதிர்வரும் 04ஆம் திகதி சனிக்கிழமை அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட விருப்பதாக புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

வவுனியா பம்பைமடு மத்திய நிலையத்தில் அன்றையதினம் நடைபெற ஏற்பாடாகியிருக்கும் கலாசார நிகழ்வினைத் தொடர்ந்து புனர்வாழ்வு நிலையத்தில் இருக்கும் 500 பேர் தமது குடும்பத்தார் மற்றும் உறவினரிடம் உத்தியோகப்பூர்வமாக ஒப்படைக்கப்படுவரெனவும் அதன் ஆணையாளர் கூறினார்.

ஏற்கனவே கடந்த 27ஆம் திகதி புனர்வாழ்வு பெற்ற ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களின் தாய்மார் 30 பேர் விடுவிக்கப் படுவரென தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும் தவிர்க்க முடியாத காரணத்தினால் அது ஒத்திவைக் கப்பட்டது. இவர்களும் உள்ளடங்களாக 500 பேர் எதிர்வரும் 04ஆம் திகதி தமது குடும்பத்தாருடன் சேர்த்துவைக்கப்படுவர்.

சுகயீனமுற்றோர், க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியோர், பல்வேறு பயிற்சிப் பட்டறைகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டோரே புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து விடுவிக்கப்படவுள் ளனர்.

புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து இதுவரை 3 ஆயிரத்து 80 பேர் தமது குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் ஆணையாளர் கூறினார்.
MONDAY, AUGUST 30, 2010லக்ஷ்மி பரசுராமன்

பரந்தனில் பாழடைந்த கிணற்றுக்குள் ஆயுதங்கள் மீட்பு


பரந்தன் உமையாள் புரத்திலுள்ள பாழடைந்த கிணற்றுக்குள்ளிருந்து பெருந்தொகையான ஆயுதங்களும் வெடிபொருட்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பிராதேசம் மீள்குடியேற்ற கிராமமாகும். அங்கிருக்கும் வைரவர் கோவிலுக்கு அருகில் அமைந்திருந்த பாழடைந்த கிணற்றுக்குள்ளிருந்தே சனிக் கிழமை மாலை இவை மீட்கப்பட்டுள்ளன. கிணறு நான்கு அடுக்குகளாகப் பிரிக்கப்பட்ட நிலையில் ஆயுதங்களும் வெடிபொருட்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
MONDAY, AUGUST 30, 2010லக்ஷ்மி பரசுராமன்,

Monday, August 23, 2010

தமிழ் கைதிகள் விவகாரம்:சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்


தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்திருக்கும் முயற்சிகள் வரவேற்கத்தக்கவையென பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்பு தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் 765 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க ஜனாதிபதி உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனக் கோரி அரியநேந்திரன் எம்.பி. ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்தார்.

அதில் அனைவரையும் விடுவிக்க முடியாத பட்சத்திலும் சிறைகளிலுள்ள 50 பெண்களையும் 05 குழந்தைகளையுமாவது விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டுமென தான் கேட்டிருந்ததாகவும் அரியநேந்திரன் எம்.பி. தினகரனுக்குத் தெரிவித்தார்.

மகஜர் கிடைத்ததும் அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பேன் என ஜனாதிபதி அறிவித்திருந்ததுடன், நீதியமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கூறி சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்திருந்தமை தொடர்பாக தனக்கு கடிதங்கள் கிடைத்துள்ளதாகவும் அரியநேந்திரன் எம்.பி. கூறினார்.
MONDAY, AUGUST 23, 2010லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, August 17, 2010

படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஐவர் கைது:முக்கிய புள்ளிகளை தேடி சிலாபத்தில் தேடுதல்


சட்டவிரோதமான முறையில் மீன்பிடி படகினூடாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஐவர் சிலாபம் மாரவில பகுதியில் வைத்து கையும் மெய்யுமாக மடக்கிப் பிடிக்கப்பட்டிருப்பதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அத்துல செனரத் தெரிவித்தார்.

இந்த ஆள்கடத்தலை ஏற்பாடு செய்திருந்த பிரதான ஏற்பாட்டாளர் உள்ளிட்ட ஐவரே கடற்படையின் புலனாய்வு பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கம்பஹா, கனேமுல்ல, மாஹோ மற்றும் சிலாபம் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்கள் அனைவரும் பெரும்பான்மை இனத்தவர்கள் எனவும் கடற்படைப் பேச்சாளர் கூறினார்.

கடல் மார்க்கமாக மீன்பிடி படகினூடாக அவுஸ்திரேலியா அழைத்துச் செல்வதாகக் கூறி அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் ஏற்பாட்டாளர், ஏனைய நால் வரிடமிருந்தும் தலா 6 இலட்சம் ரூபா வீதம் இதற்காக அறவிடப்பட்டிருந்தமை விசாரணைகளிலிருந்து தெரியவந்தி ருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


மாரவில பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய் யப்பட்டுள்ளனர். இதன் பிரதான ஏற்பாட்டாளரை விசாரணைக்குட்படுத்தி வரும் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் அவரிடமிருந்து கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஆட்கடத்தலுடன் சம்பந்தப்பட்ட ஏனைய முக்கிய புள்ளிகளையும் தேடி சிலாபம் முழுவதும் பாரிய தேடுதல்களை நடத்தி
வருகின்றனர்
TUESDAY, AUGUST 17, 2010லக்ஷ்மி பரசுராமன்

கிரிந்த துறைமுகத்தில் படகு கவிழ்ந்து இருவர் பலி; மூவர் மாயம்


அம்பாந்தோட்டை கிரிந்த துறைமுகத் திற்குட்பட்ட கடற்பரப்பில் நேற்று மாலை படகொன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்திருப்பதுடன் மூவர் காணாமற் போயிருப்பதாகவும் மூவர் காயமடைந்திருப்பதாகவும் கடற்படை பேச்சாளர் கெப்டன் அத்துல செனரத் தெரிவித்தார்.

கடற்படை அதிகாரியொருவர் மற்றும் அவரது குடும்பத்தார் கடற்படைக்குச் சொந்தமான டிங்கி படகில் சவாரி செய்கையிலேயே கடல் சீற்றம் காரணமாக படகு அலையில் சிக்கி இவ்விபத்து நேர்ந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

சம்பவத்தின்போது படகில் எண்மர் பணித்துள்ளனர்.

இவர்களுள் கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சிறு பிள்ளையொன்றும் உயிரிழந்துள்ளது. மேலும் இரண்டு பிள்ளைகள் உட்பட மூவர் காணாமற் போயுள்ளனர்.

காயமடைந்த மூவருள் ஒருவர் திஸ்ஸ மஹாராம வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். காணாமற்போன வர்களை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
TUESDAY, AUGUST 17, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, August 16, 2010

சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ரூ. 50 மில்.பெறுமதியான சட்டவிரோத சிகரட்டுகள் மீட்பு


சீனாவிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 50 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரட்டுகள் கைப் பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக் களத்தின் பேச்சாளர் எஸ். டி. பிரபாத் ஜயவிக்கிரம தெரிவித்தார்.

மினுவாங்கொடை பகுதியிலுள்ள பிர பல வர்த்தகரொருவரின் வீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சட்ட விரோத சிகரட்டுகள் மீட்கப் பட்டுள்ளன.

கலால் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் திணைக்களத்தின் அதிகாரிகளும் பொலிஸ் போதைவஸ்து குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளும் இணைந்து நீண்டகாலமாக நடத்தி வந்த தேடுதலின் விளைவாகவே நேற்று குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிகரெட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் திணக்களத்தின் பேச்சாளர் கூறினார். இதன்போது 22 இலட்சத்து 50 ஆயிரம் சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. முற்றுகையின் போது குறித்த வீட்டிலிருந்த உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சீனாவிலிருந்தே மேற்படி சிகரட்டுகள் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. கைது செய்யப் பட்ட இருவரும் கலால் திணைக் களத்தின் ஆணையாளர் நாயகம் வசந்த அப்புஹாரச்சி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதும் அவர்களுக்கு டொபெக்கோ சட்டமூலத்தின் கீழ் இதற்கான தண்டனை பெற்றுக் கொடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

இதேவேளை இதுபோன்ற தகவல்களை கலால் திணைக்களத்திற்கு பெற்றுக் கொடுப்போருக்கு பெறுமதி மிக்க பரிசில் களை வழங்க திணைக்களம் தீர்மானித் திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்
MONDAY, AUGUST 16, 2010லக்ஷ்மி பரசுராமன்

யாழ். குடா கைத்தொழில் பேட்டை; அலரிமாளிகையில் 2ம் கட்ட பேச்சு


யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் பேட்டையினை நிறுவுவது தொடர்பான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நாளை செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

இதன்போது, கைத்தொழில் பேட்டையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பது தொடர்பாக ஆராயப்படுமென வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ்ப்பாண அரச அதிபர் அலுவலகத்தில் சில வாரங்களுக்கு முன்னர் கைத்தொழில் பேட்டையினை நிறுவுவது தொடர்பான முதலாவது கூட்டம் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

வளங்களைப் பயன்படுத்தி சிறந்த தரம்மிக்க பொருட்களை யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்வதே இக்கைத்தொழில் பேட்டையை நிறுவுவதன் பிரதான நோக்கமெனவும் ஆளுநர் கூறினார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்திலுள்ள தீவுப் பகுதிகளில் ஹோட்டல்களை அமைப்பதில் முதலீட்டாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதனால், சுற்றுலாத்துறையைச் சேர்ந்தோருக்கு நிலங்களை பகிர்ந்தளிப்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக ஆளுநர் தெரிவித்தார்.

அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அவர் மிக விரைவில் தீவுப் பகுதிகள் சுற்றுலா மையங்களாக மாற்றியமைக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.
MONDAY, AUGUST 16, 2010லக்ஷ்மி பரசுராமன்)

Friday, August 13, 2010

பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டு:விஜித ஹேரத் உட்பட மூவர் காலியில் கைது



ஜே. வி. பி. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அஜித் குமார மற்றும் மாகாண சபை உறுப்பினர் நZன் ஹேவகே ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

காலியில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கடமைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்தினார்கள், பொலிஸாரைத் தாக்கினார்கள் ஆகிய குற்றச் சாட்டுகளின் பேரிலேயே இம்மூவரும் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி ஜனநாயக தேசிய முன்னணி நேற்று காலியில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. பொலிஸார் அதனை கலைக்க முற்பட்டதையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. சம்பவத் தின் போது ஆர்ப்பாட்டக்காரர் களின் தாக்குதலுக்குள்ளான 5 பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
FRIDAY, AUGUST 13, 2010லக்ஷ்மி பரசுராமன்

Thursday, August 12, 2010

மகஸின் சிறையில் இரு கைதிகள் மோதல்:விலக்கச் சென்றவர் அடித்துக் கொலை


வெலிக்கடை, மகஸின் சிறைச்சாலை யில் நேற்றுக் காலை இரண்டு கைதிகளுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பில் அதனை தடுக்க வந்த இன்னுமொரு கைதி உயிரிழந்துள்ளதுடன் , மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்

சம்பவத்தில் போதைவஸ்து பாவனை குற்றத்திற்காக விளக்கமறியலில் கடந்த 10ஆம் திகதி சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்த மலிந்த பெரேரா எனும் கைதியே உயிரிழந்திருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி. ஆர். டி. சில்வா தெரிவித்தார்.

விளக்கமறியல் கைதியொருவர் மற்றொரு கைதியை இரும்பு கொக்கி யொன்றினால் குத்த முற்பட்டபோதே மோதல் மூண்டுள்ளது. மோதலை தடுக்க முற்பட்ட போதே மலிந்த பெரேரா எனும் கைதியின் தலையிலும் முதுகிலும் இரும்பு கொக்கியினால் பலத்த அடி வீழ்ந்துள்ளது. இதனையடுத்து படுகாயமடைந்த மேற்படி கைதி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த இன்னுமொரு கைதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீண்டகாலமாக நிலவி வந்த பகையே இம்மோதல் மூண்டதற்கு காரணம் என தெரிவித்த சிறைச்சாலைகள் ஆணையாளர் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்
THURSDAY, AUGUST 12, 2010 லக்ஷ்மி பரசுராமன்

Wednesday, August 11, 2010

ஜீப் ஆற்றுக்குள் விழுந்து விபத்து; 3 பொலிஸார் பலி


கலவானை கொஸ்வத்த பகுதியில் நேற்று மாலை 6.30மணியளவில் பொலிஸ் ஜீப்பொன்று குக்குலேகங்க ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் கலவானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சரத் கம்ஹேவா, சார்ஜன்ட் குணபால, பொலிஸ் கான்ஸ்டபிள் பிரிமானே ஆகியோரே உயிரிழந்துள்ளனர். கலவானை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. பொலிஸ் ஜீப் வண்டியில் இவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த போது வண்டி கலவானை கொஸ்வத்தையிலுள்ள பள்ளத்திலிருந்து குடைசாய்ந்து ஆறு ஒன்றினுள் விழுந்ததிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது
WEDNESDAY, AUGUST 11, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, August 9, 2010

சவூதியில் நிர்க்கதியான பணிப்பெண்களை உடன் அழைத்துவர விசேட விமான ஏற்பாடு:இன்று 44பேர் வருகைநாளை மறுதினம் 100 பெண்கள்:


சவூதி அரேபியாவில் நிர்க்கதிக்குள்ளா கியிருக்கும் பணிப்பெண்களை இலங்கைக்கு அழைத்துவர விசேட விமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பொது முகாமையாளர் எல். கே. ருகுணுகே தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக இன்று 44 பணிப்பெண்களும் நாளை மறுதினம் (11) 100 பணிப்பெண்களும் சவூதி அரேபியாவிலிருந்து இலங்கை அழைத்து வர ஏற்பாடாகியுள்ளது.

பல்வேறு பிரச்சினைகள் காரணமாக சவூதி அரேபியாவில் நிர்க்கதிக்குள்ளாகி யிருக்கும் இலங்கைப் பணிப்பெண்களை அழைத்து வருவதற்காக விசேடமாக மிஹின் லங்கா விமானம் தயார் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கையைச் சேர்ந்த 250 பணிப் பெண்கள் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தமது வேலையைக் கைவிட்டுவிட்டு சவூதி அரசாங்கத்தின் கீழ் நடத்தப்பட்டு வரும் நலன்புரி நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்கள் சவூதியில் சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும் சொந்த நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் எவ்வித ஏற்பாடுகளையும் முன்னெடுக்க வில்லையெனவும் பல ஊடகங்கள் குற்றம் சுமத்தியிருந்தன. உண்மையில், அவர்கள் அங்கு சிறைவைக்கப்படவில்லை. சகல வசதிகளுடனுமே தங்கவைக்கப் பட்டுள்ளனர்.

விமான இருக்கை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட கால தாமதமே அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதில் தாமதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக வேலைவாய்ப்பு பணியகத்தின் முயற்சியாலும் அரசாங்கத்தின் ஏற்பாட்டி னாலும் மிஹின் லங்கா விமானம் மூலம் ஒரே தடவையில் நாளை மறுதினம் 100 பேர் அழைத்து வரப்படவிருப்பதாகவும் எல். கே. ருகுணுகே கூறினார். இன்று காலை 2.30 மணிக்கு 44 பணிப்பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய ஏற்பாடாகியிருப்பதாகவும் அவர் நேற்றுத் தெரிவித்தார்.
MONDAY, AUGUST 09, 2010லக்ஷ்மி பரசுராமன்

Monday, August 2, 2010

வட மாகாண டெங்கு நோய் ஒழிப்புத் திட்டம் இன்று ஆரம்பம்:யாழ். நகரசபையில் நிகழ்வு: மன்னாருக்கு விசேட வைத்தியக்குழு


வட மாகாணத்தில் டெங்கு நோய் ஒழிப்பிற்கான தேசிய வேலைத் திட்டம் இன்று முதல் ஆரம்பமாகின்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாணத்துக்கான ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தலைமையில் இதற்கான தேசிய நிகழ்வு இன்று காலை யாழ். மாநகர சபையில் ஆரம்பித்து வைக்கப்படும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கமைய நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இம்மாதம் குறித்த நான்கு நாட்கள் தேசிய டெங்கு ஒழிப்பு தினங்களாக பிரகடனப்படுத்தப் படவுள்ளன. அந்த வகையில் இன்று 02 ஆம் திகதி முதல் வட மாகாணத்தின் தேசிய டெங்கு ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படவிருப்பதாக வட மாகாண ஆளுநர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

கடந்த 27 ஆம் திகதி வவுனியா அதிபர் அலுவலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இது தொடர்பான கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கமைய மாகாணத்தின் சகல பகுதிகளிலும் அந்தந்த மாவட்டத்திற்குரிய அரச அதிபர் தலைமையில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளிலேயே இன்று டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். தற்போது ஒப்பீட்டளவில் வடமாகாணத்தில் மிக மிக குறைந்த எண்ணிக்கையானோரே டெங்கு நோய்க்கு ஆளாகியுள்ளனர். மன்னாரில் சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து வவுனியாவிலிருந்து விசேட வைத்தியர் குழுவொன்று மன்னார் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்
கூறினார்
MONDAY, AUGUST 02, 2010லக்ஷ்மி பரசுராமன்

சவூதியில் 40 பணிப்பெண்கள் நிர்க்கதி; 6 பேருக்கு சுகயீனம்:இலங்கைக்கு அழைத்து வருவதற்கு வேலைவாய்ப்பு பணியகம் ஏற்பாடு




சவூதி அரேபியாவின் ரியாத்தில் நிர்க்கதியான நிலையிலிருக்கும் 40 இலங் கைப் பணிப்பெண்களுள் சுகயீனமுற்றிரு க்கும் ஐவரை உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேற்கொண்டிருப்பதாக அதன் பொது முகாமையாளர் ருகுனுகே தெரிவித்தார்.

அந்நாட்டின் குறித்த வைத்தியசாலை யொன்றில் வேலை பெற்றுக் கொடுப்பதாகக் கூறி இலங்கையி லிருந்து 41 பணிப்பெண்கள் அண்மையில் ரியாத் அழைத்துச் செல்லப்பட்டனர். ஒப்பந்தத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இவர்களுக்கு குறித்த வேலை வழங்கப்படவில்லை.

இருப்பினும் குறிப்பிட்ட மாதாந்த சம்பளத்தின் ஒரு பகுதி மாத்திரம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அங்கு சென்ற ஆறு பெண்கள் சுகயீனமுற்றுள்ளனர். இவர்களுள் ஒருவர் நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
MONDAY, AUGUST 02, 2010லக்ஷ்மி பரசுராமன்

வடக்கில் ஒரு இலட்சம் ஏக்கரில் நெற்செய்கை:இந்தியா, ஐ.சி.ஆர்.சி. 900 ட்ரக்டர் வழங்க முடிவு:உரமானியம்; இலவச விதை நெல்லுக்கும் ஏற்பாடு


வடக்கில் பெரும்போக நெற்செய்கையினை பாரியளவில் முன்னெடுப்பதற்கான வேலைத் திட்டங்களை வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி திட்டமிட்டு வருவதாக அதன் செயலாளர். எஸ். பி. திவாரட்ன தினகரனுக்குத் தெரிவித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியாவின் குறித்த பகுதிகளில் காணப்படும் விளைச்சல் நிலங்களை இலக்காகக் கொண்டே இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவெனக் கூறிய செயலாளர் எஸ். பி. திவாரட்ண, எதிர்வரும் ஒக்டோபர் முதல் ஆரம்பமாகவிருக்கும் பெரும்போகத்தில் 75 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் வரையிலான ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து நெல் விளைச்சலை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்த வேலைத் திட்டத்திற்கு இந்தியா மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன உதவ முன்வந்துள்ளன.
இதனடிப்படையில், இந்திய அரசாங்கம் பெரும்போகத்திற்கு முன்னர் விளைநிலங்களை உழுவதற்காக 500 ட்ரக்டர் வண்டிகள் மற்றும் நீர் பம்பிகளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

அதற்கு மேலதிகமாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 400 ட்ரக்டர் வண்டிகளையும் நீர்ப் பம்பிகளையும் இலங்கைக்கு வழங்கியுள்ளது. ட்ரக்டர் வண்டிகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் பழமையான முறையான ஏர் பூட்டும் முறையை கையாளவும் விவசாயிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக செயலாளர் எஸ். பி. திவாரட்ன கூறினார்.

மேலும் விவசாய அமைச்சும் உலக விவசாய ஸ்தாபனமும் வட மாகாணத்தின் பெரும்போகத்துக்கென மூன்று இலட்சம் புசல் விதை நெற்களை ஏற்பாடு செய்து வைத்துள்ளன. அத்துடன் விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்குவதற்கென போதியளவு உரம் கையிருப்பிலுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் நெல் விளைச்சல் மற்றும் வீடமைப்பு ஆகியவற்றிலேயே வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் செயலணி கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக கூறிய அதன் செயலாளர், இம்மாத இறுதிக்குள், இந்திய அரசாங்கம் வடக்கின் 05 மாவட்டங்களிலும் ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணியை ஆரம்பிக்குமெனவும் சுட்டிக்காட்டினார்.
MONDAY, AUGUST 02, 2010லக்ஷ்மி பரசுராமன்