Saturday, August 29, 2009

அங்குலானையிலிருந்து இரு கிளேமோர் குண்டுகள் மீட்பு




மொரட்டுவை அங்குலான பகுதியிலிருந்து நேற்று மாலை அதிசக்திவாய்ந்த இரண்டு கிளேமோர் குண்டுகள் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிமல் மெதிவக்க கூறினார்.

அங்குலான பிரதேசத்திலுள்ள ஒரு வெட்ட வெளியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேற்படி அதிசக்தி வாய்ந்த இரண்டு கிளேமோர்களையும் புலனாய்வுப் பிரிவினரே நேற்று மாலையளவில் கண்டு பிடித்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இராணுவத்தின் குண்டை செயலிழக்கச் செய்யும் பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து குண்டுகளை செய லிழக்கச் செய்துள்ளனர். இது குறித்த விசாரணைகள் தொட ர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். SATURDAY, AUGUST 29, 2009லக்ஷ்மி பரசுராமன்

Friday, August 28, 2009

புலிகளின் சொத்துக்களை பெறுவது குறித்து சர்வதேச மட்டத்தில் இலங்கை பேச்சு




வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை முடக்கி அவற்றின் உரிமைகளை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்வது குறித்து சர்வதேச மட்டத்தில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

சர்வதேச மட்டத்தில் வியாபித்திருக்கும் புலிகளின் வலைப்பின்னல்களை தடைசெய்வது குறித்து தூதுவர்களுடன் பேச்சு நடத்தி வரும் அதேநேரம் வெளிநாடுகளிலிருக்கும் புலிகளின் சொத்துக்களை இனங்கண்டு அவற்றின் உரிமைகளை இலங்கை அரசாங்கத்தின் கரங்களுக்கு கிட்டும்படி செய்ய அந்நாடுகளின் அரசாங்கங்கள் உதவ முன்வர வேண்டுமெனக் கோரி உலக நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களிடம் பிரத்தியேகமாக எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் அமைச்சர் போகொல் லாகம கூறினார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் :-

பயங்கரவாதமென்பது தனியே ஒரு நாட்டிற்குள் மாத்திரம் கட்டுப்பட்டதல்ல.
சர்வதேசம் முழுவதும் பரவி காணப்படுவதொன்றாகும். புலிகள் சர்வதேச வலையமைப்பை கொண்டிருப்பது மாத்திரமன்றி எமது அண்டைய நாடான இந்தியாவின் முன்னாள் பிரதமரையே கொலை செய்துள்ளனர்.
புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னமும் செயற்பட்டு வருகின்றது. அதனை தடை செய்து வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை முடக்குவது குறித்து நாம் தொடர்ந்தும் சர்வதேச மட்டத்தில் பேச்சுகளை நடத்தி வருகின்றோம். உலக நாடுகளும் எமது கோரிக்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள்.

அதனை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகளினூடாக காணக்கூடியதாக இருக்கின்றதெனவும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.
ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர்களினால் ‘செனல் – 04’ அலைவரிசையில் அண்மையில் ஒளிபரப்பப்பட்ட இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான வீடியோக் காட்சிகள், குறித்து எழுப்பப்பட்ட வினாவுக்கு அமைச்சர் பதிலளிக்கையில் :-

அதில் எவ்வித உண்மையும் இல்லை. புலி ஆதரவாளர்கள் இல்லாத ஒன்றை இருப்பதாக உருவகித்து காட்டியுள்ளார்கள் எனக் கூறினார்.
இலங்கை அரசாங்கம் சார்பாக வெளிவிவகார அமைச்சு இதனை வன்மையாக கண்டித்துள்ளதுடன் பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தினூடாக ‘செனல் – 04’ தனியார் அலைவரிசைக்கு இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கி கூறியிருக்கிறோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வெளிவிவகார அமைச்சரென்ற வகையில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருடன் தொடர்புகொண்டு நான் இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளேன்.
மோதலின் போது இடம்பெற்ற சூழ்நிலைகளை நாம் நன்கு அறிவோம். எம்மால் இந்தக் காட்சிகளில் உண்மை யிருப்பதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இணைய தளத்தினூடாக தற்காலத்தில் வேண்டிய மாயாஜலங்களை மேற்கொள்ளலாமென்பது சகலருக்கும் தெரிந்த விடயமேயெனவும் அமைச்சர் போகொல்லாகம கூறினார். FRIDAY, AUGUST 28, 2009லக் ஷ்மி பரசுராமன்

Tuesday, August 25, 2009

பாதுகாப்பு செயலாளரை படுகொலை செய்ய தயார் நிலையில் இருந்த தற்கொலை அங்கி மீட்பு:மோதரை மாடிவீட்டிலிருந்து பாதுகாப்புத் தரப்பினரால் கண்டுபிடிப்பு


பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மீது தற்கொலை தாக்குதல் நடத்த தயார் நிலையில் வைக்கப் பட்டிருந்த தற்கொலை அங்கி உள்ளிட்ட பெருமளவு வெடி பொருட்கள் நேற்று கொழு ம்பிலுள்ள வீடொன்றிலிரு ந்து மீட்கப்பட்டுள்ளன.
மோதரை, மட்டக்குளிய வீடமைப்புத் தொகுதியிலு ள்ள இரண்டு மாடி வீடொ ன்றின் மேல் மாடியிலிரு ந்து தேசிய புலனாய்வுப் பிரி வினரால் இவை கைப்ப ற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

தற்கொலை குண்டுதாரி மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதல் நடத்தும் விதத்தி லேயே புலிகளினால் திட் டம் தீட்டப்பட்டிருந்தது அம் பலத்துக்கு வந்துள்ளதுடன் அதற்கேற்ற வகையில் அதி சக்திவாய்ந்த வெடி பொருட் கள் மற்நும் தற்கொலை அங்கிகளை கொழும்புக்கு கடத்தியிருப்பதாகவும் தேசிய புலனாய்வுப் பிரிவினர் மேற் கொண்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாக பொலிஸ் பேச் சாளர் மெதிவக்க சுட்டிக் காட்டினார்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வாகன அணிவகுப்பை இல க்கு வைத்தே இத்தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட ப்பட்டுள்ளது.
தாக்குதலின் போது பாதுகாப்புச் செயலா ளர் காயங்களுக்கு உள்ளாகும் பட்சத்தில் அவரை எடுத்துச் செல்வதற்காக தயார் நிலை யிலிருக்கும் அம்பியுலன்ஸ் வண்டி மீதும் குண்டுத் தாக் குதலை நடத்தவும் புலிகள் ஏற்பாடுகளை முன்னெடுத் திருந்தமையும் அம்பலமாகி யிருப்பதாக பொலிஸ் பேச் சாளர் மேலும் குறிப்பிட்டார். தற்கொலையங்கி உள்ளிட்ட அதி சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்ட தையடுத்து அவ்வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளரை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதலை நடத்துவதற்கி ருந்த பிரதான சந்தேக நபரான தற்கொலை குண்டுதாரியையும் மோட்டார் சைக்கிளை யும் தேடி பொலிஸ் வலை விரித்திருப்பதா கவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

தேசிய புலனாய்வுப் பிரிவினர் கடந்த ஒரு மாத காலமாக கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மேற்கொண்டுவரும் தேடுதல்களை அடிப்படையாக வைத்தே பொலிஸாரினால் நேற்று இந்த வீடு முற்றுகையிடப்பட்டு மேற்படி வெடிபொரு ட்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐந்து கிலோ நிறைகொண்ட தற்கொலை யங்கி, இயந்திரத் துப்பாக்கி, அதற்குப் பயன் படுத்தப்படும் 125 ரவைகள், இரண்டு தோட்டா கேசுகள், 05 கிரனேற் கைக்குண் டுகள், 13 சயனைற் குப்பிகள், தற்கொலை யங்கியில் பொருத்தும் 05 பற்றரிகள், ஒரு ரிமோட் கருவி, பல இடங்களுக்கும் கொண்டு செல்லக்கூடிய 02 ரிமோட் கருவிகள், 50 அடி நீளமான வயர் மற்றும் ஒரு டெட் டனேட்டர் ஆகியனவே நேற்று மட்டக் குளியிலுள்ள மேற்படி வீட்டின் அலுமாரி க்குள்ளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக விசேட பொலிஸ் குழு புலனாய்வு விசாரணை களை முன்னெடுத்து வருகின்றது.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மீது 2006 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி கொழும்பு கொள்ளுப்பி ட்டியில் வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆண் தற்கொலை குண்டுதாரியினால் நடத்தப்பட்ட மேற்படி தாக்குதலில் பாதுகாப்புச் செயலாளர் தெய் வாதீனமாக உயிர் தப்பினார். இதன்போது இருவர் கொல்லப்பட்டதுடன் 12 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.TUESDAY, AUGUST 25, 2009லக்ஷ்மி பரசுராமன்

Monday, August 24, 2009

யாழப்பாணம், மன்னார் குடும்பங்கள் இரு வாரத்தினுள் மீள்குடியேற்றம்



வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மன்னார் மற்றும் யாழ். மாவட்டங்களைச் சேர்ந்த அனைவரும் எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதிக்குள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவரென மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீன் நேற்று தெரிவித்தார்.

இதேவேளை மன்னாரில் மாந்தை மேற்கு, மடுவின் சில பகுதிகளில் தற்போதும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய இரு பிரதேச செயலாளர் பிரிவுகளையும் சேர்ந்தவர்களை மடுவில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பிரதேசமொன்றினுள் சிறிது காலத்திற்கு தற்காலிகமாக மீளக்குடியமர்த்த தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.


மெனிக்பாம் நிவாரண கிராமத்தில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் யாழ்ப்பாணத்தில் மிதிவெடியகற்றப்பட்ட இடங்களைச் சேர்ந்தவர்கள் எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதிக்குள் தமது சொத்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.


நிவாரணக் கிராமங்களிலிருக்கும் யாழ்ப்பாணத்தின் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாத பகுதிகளை தமது சொந்த இருப்பிடங்களாக கொண்டவர்கள் அப்பணிகள் நிறைவடையும் வரை யாழ்ப்பாண நிவாரணக் கிராமங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்படுவரேனவும் அமைச்சர் றிசாட் சுட்டிக்காட்டினார்.
மேலும் மெனிக்பாம் நிவாரணக் கிராமத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களும் இருப்பதால் அவர்களையும் அதே காலப்பகுதியினுள் தமது சொந்த இடங்களுக்கு திருப்பியனுப்புவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை தத்தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித் துள்ளது.


இதற்கமைய நிவாரணக் கிராமங்களில் உள்ளோரது சொந்த இருப்பிடங்கள் பற்றிய தகவல்கள் பதியப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி, முல்லைத்தீவைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தமது சொந்த இருப்பிடம் பற்றிய சரியான தகவலை வழங்கினால், அதனை அந்தந்த மாவட்டத்தின் அரசாங்க அதிபர்கள் உடன் உறுதிப்படுத்திய பின்னர், அவர்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு திருப்பியனுப்பப்படுவரென வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் டீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

நாட்டில் மோதல் இடம்பெற்ற வேளை ஏனைய மாவட்டங்களிலிருந்து தற்செயலாக வன்னிப் பகுதிக்குச் சென்றிருந்தவர்கள் மற்றும் பயங்கரவாதிகளிடமிருந்து தஞ்சம் கோரியிருந்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் படையினரினால் வவுனியா நிவாரணக் கிராமத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.

வடக்கே மோதல் இடம்பெற்ற பகுதிகளில் நிலக்கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மெனிக்பாம் உள்ளிட்ட ஏனைய நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை எதிர்வரும் இருவார காலப்பகுதிக்குள் மீளக் குடியமர்த்த அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் றிசாட் பதியுதீன் மேலும் கூறினார்.MONDAY, AUGUST 24, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, August 18, 2009

தொ.நு. கல்லூரி மாணவன் நிப்புன தாக்குதல் சம்பவம்:கைது செய்யப்பட்டுள்ள 11 பேருக்கும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியல்:3 சப் இன்ஸ்பெக்டர்கள், பொலிஸ் சார்ஜன்



மாலபே தொழில்நுட்ப கல்லூரி மாணவனான நிப்புன ராமநாயக்கவின் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல மேலதிக நீதவான் மஹதில் பிரசாந்த டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.

மாணவனின் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 03 சப் இன்ஸ்பெக்டர்கள், பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் ஏழு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உட்பட பதினொரு பேர் கைது செய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 11 பேரும் நேற்று கடுவெல நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் எஸ். எஸ். டி. வாஸ் குணவர்தனவின் மகன் ரவிந்து குணவர்தன சுகயீனம் காரணமாக பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகியிருந்த குற்றத்தடுப்புப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படுவர்.

சம்பவம் தொடர்பான முறைப்பாடு பொலிஸ் தலைமையகத்துக்கு கிடைக்கப்பெற்றதையடுத்து பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ணவின் பணிப்புரையின் பேரில் உடனடி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பிரதி பொலிஸ் மா அதிபர் சேனாநாயக்க கூறினார்.

வழக்கின்போது கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிரதான சந்தேக நபரான ரவிந்து குணவர்தனவின் உடல்நிலை தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேலதிக மாவட்ட நீதவான் நுகேகொடை மஜிஸ்ட்ரேட்டுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை மாவட்ட நீதவான், நீதிமன்ற வளாகத்தினுள் வான் ஒன்றின் மூலம் அழைத்துவரப்பட்டிருந்த பதினொரு சந்தேக நபர்களையும் பார்வையிட்டார்.

மாணவனான நிப்புன ராமநாயக்க கண்கள் கட்டப்பட்ட நிலையில் பொலிஸ் ஜீப் ஒன்றிலேயே கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கடத்திச் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர்களுள் ஒருவர் மாணவனை தனது துப்பாக்கியால் தாக்கியுள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் வாஸ் குணவர்தனவின் மகன் தனது வீட்டுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு “அம்மா கதவை திறந்து வையுங்கள். நான் உங்களுக்காக பரிசு ஒன்றை எடுத்து வருகின்றேன்” என்று தனது அம்மாவிடம் கூறியுள்ளார்.

வீட்டில் வைத்து பிரதான சந்தேக நபரின் தாயும் மேற்படி மாணவனை தாக்கியிருப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். பின்னர் சிலர் இந்த மாணவனுக்கு சித்தாலேப பூசிவிட்டுள்ளதுடன், காயப்பட்ட பகுதிகளுக்கு ஐசும் வைத்து விட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவன் மீண்டும் ஜீப்பில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பொரளை காசல் வீதி சமிக்ஞை விளக்குகளை கடந்து செல்லும்போது வண்டியின் முன்னிருக்கையில் எஸ். எஸ். பி. வாஸ் குணவர்தன அமர்த்திருப்பதை மாணவன் கண்டுள்ளான்.

காயங்களுக்குள்ளாக்கப்பட்ட மாணவன் நேரடியாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு வைத்து வாக்குமூலமொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் மாணவன் அதில் கையொப்பமிட மறுத்துள்ளார். ஏனெனில், அது அம்மாணவனினது வாக்குமூலம் கிடையாது. மாணவன் சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று நண்பகல் 12.45 மணிக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் நண்பகல் 1.30 மணியளவிலேயே அவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இந்த கடத்தல் மற்றும் தாக்குதலுடன் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்ந்த எந்தவொரு அதிகாரியும் சம்பந்தப்படவில்லையெனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் கூறினார்.

இச்சம்பவத்தையடுத்து எஸ். எஸ். பி. வாஸ் குணவர்தன உடனடியாக பொலிஸ் தலைமையகத்துக்கு பொலிஸ் மா அதிபரினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் கூறினார்.

மேலும் சேவையிலுள்ள 80 ஆயிரம் பொலிஸாரில் ஒருவர் செய்த பிழைக்காக முழு பொலிஸ் படையையும் யாரும் குறை கூறிவிட முடியாது எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.
தாக்கப்பட்ட மாணவனின் பெற்றோரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். TUESDAY, AUGUST 18, 2009 லக்ஷ்மி பரசுராமன்,

இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்திய அரசாங்கம் 3 மில். அ.டொலர் பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்காக இந்திய அரசாங்கம் மூன்று மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.

இவை ஐ.நா அமைப்புக்களினூடாக நிவாரணக் கிராமங்களில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. இவற்றின் ஒரு தொகுதியை இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் நேற்று ஐ.நா வதிவிட பிரதிநிதி நீல் பூனேயிடம் கையளித்தார்.

மேற்படி அறுநூறு தொன் நிவாரணப் பொருட்கள் கடந்த எட்டாம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

இந்நிவாரணப் பொருட்களுள் ஆறு இலட்சம் பக்கற்றுக்களுக்கு அதிகமான உணவுப் பொருட்கள், பிளாஸ்டிக் பாய்கள், உடுதுணிகள், வீட்டு உபகரணங்கள், சிறுவர்களுக்கான ஆடைகள், பாதணிகள் உள்ளிட்ட பல வகையான பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நிவாரணக் கிராமங்களிலிருக்கும் சுமார் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான பொருட்களே நேற்று யு. என். வதிவிடப் பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டன.TUESDAY, AUGUST 18, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Monday, August 17, 2009

புதுக்குடியிருப்பு, சுகந்திபுரம், குப்பிலான்குளம்:12 படகு இயந்திரங்கள் மற்றும் பெருமளவு வெடிபொருளும் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, சுகந்திபுரம் மற்றும் குப்பிலான்குளம் ஆகிய பகுதிகளிலிருந்து படையினர் 12 படகு இயந்திரங்களுடன் பெருந்தொகையான வெடிபொருட்களை கைப்பற்றியிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து இராணுவத்தின் 8ஆம் படையணியினர் கடந்த சனிக்கிழமை ஒரு தொகை வெடி பொருட்களை மீட்டிருந்தனர். இம்மீட்பு நடவடிக்கைகளின் போது புலிகளினால் வைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணி வெடித்ததில் படைவீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் ஊடக மத்திய நிலையம் கூறியது.

அப்பகுதியிலிருந்து 15 – 60 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள், 01 - எம். பி. எம். ஜி. பெரல்கள், 03 – ரி-56 தோட்டாக்கள், 18 ஆர். பி. ஜி. ரவைகள், 650 புலி கொடிகள், 40 புலிகளின் காற்சட்டைகள், 50 புலிகளின் மேற்சட்டைகள், 150 புலிகளின் தொப்பிகள், 12 படகு இயந்திரங்கள், 01 ஐ. கொம் செட் ஆகியன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை அன்றைய தினமே சுகந்திபுரம் பகுதியிலி ருந்து 01 ஆர். பி. ஜி. ரவை, 25 ரி-56 ரவைகள், 01 கிரனேற் கைக்குண்டு, 03 நிலக்கண்ணிவெடிகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

குப்பிலான்குளம் பகுதியிலிருந்து 145 டெட்டனேட் டர்கள், ஏழு கிலோகிராம் நிறைகொண்ட சி4 வெடிபொருட்கள், 150 – 60 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள், 246 – 81 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள், 800 – ரி 56 ரவைகள் உள்ளிட்ட பெரும் தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் ஊடக மத்திய நிலையம் கூறியது. MONDAY, AUGUST 17, 2009 லக்ஷ்மி பரசுராமன்

வடக்கின் 3 மாவட்டங்களில் 280 மீன் விற்பனை நிலையம்:திட்டத்தை செயல்படுத்த ரூ. 30 மில். ஒதுக்கீடு

வடக்கின் மூன்று மாவட்டங்களில் புதிதாக 280 மீன் விற்பனை நிலையங்களை அமைக்க மீன்பிடித் துறை மற்றும் நீரியல்வள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திட்டத்தை செயல்முறைப்படுத்துவதற்காக அமைச்சு 30 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியிருப்பதாக அமைச்சின் செயலாளர் ஜி. பியசேன தெரிவித்தார்.

யாப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலேயே இம்மீன் விற்பனை நிலையங்களை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

வடக்கு மீன்பிடி ‘சீசன்’ ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், வட மாகாண மீனவர்களை ஊக்குவிக்கும் வகையில் இம் மீன் விற்பனை நிலையங்களை அமைக்குமாறு மீன்பிடித் துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா வழங்கிய பணிப்புரைக்கமையவே இச்செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் வட மாகாணத்தில் உள்ள மீன்பிடி கூட்டுறவுச் சங்கங்களுடன் இணைந்து அந்தந்த மாவட்டத்துக்கான மீன்பிடி உதவிப் பணிப்பாளர்களின் வழிகாட்டலுடன் இம்மீன் விற்பனை நிலையங்களை அமைத்து வருகின்றன. MONDAY, AUGUST 17, 2009 லக்ஷ்மி பரசுராமன்

நிவாரணக் கிராமங்களில் வெள்ளம் வடிகிறது; நிலைமை வழமைக்கு திரும்பியது: கழிவு நீர்க்கான் வேலைகளை துரிதப்படுத்த பணிப்பு

வவுனியா நிவாரணக் கிராமங்களில் வெள்ளம் வடிந்தோடி வருவதால் நிலைமை வழமைக்குத் திரும்பி வருவதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

கூடாரங்களுக்குள் வெள்ளம் வந்தமையால் வேறு இடத்தில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டிருந்த 400 பேரும், நிலைமை வழமைக்கு திரும்பியதையடுத்து அவர்களுடைய கூடாரங்களுக்கு அழைத்துவரப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் வவுனியாவில் ஓரளவு மழை பெய்ததை தொடர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 400 பேர் உடனடியாக வேறொரு பாதுகாப்பான இடத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டது டன், அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
வவுனியாவில் நேற்று முதல் நிலைமை ஓரளவு வழமைக்கு திரும்பியுள்ளது.

இதேவேளை, யு.என்.எச்.சி.ஆர். மற்றும் யுனெப்ஸ் ஆகிய தன்னார்வு தொண்டு அமைப்புகள் ஏற்கனவே தாம் பொறுப்பு எடுத்துக்கொண்ட வகையில் கவழி நீர்கான் தொடர்பான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதமும் மழைநீர் தேங்குவதற்கு காரணமாகவிருந்தமையினால் அதனை நிறைவேற்றுவதற்கான வேலைகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் ரிசாட் பதியுதீன் குறித்த நிறுவனங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை எதிர்காலத்தில் பாரிய மழை பெய்யுமாயின் நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர்க்கு மாற்று வசதிகளை செய்வது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தலைமையில் விசேட கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.
இதன்போது மழையின் காரணமாக கூடாரங்கள், மலசலகூடங்கள் மற்றும் சமையல் நடவடிக்கைகளில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்காக மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்க அதிபர், வலயங்களுக்குப் பொறுப்பான தளபதிகள், முகாமையாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். MONDAY, AUGUST 17, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Friday, August 14, 2009

ஐந்து வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்து

ஐந்து வெவ்வேறு ரக வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டதில் ஐவர் காயமடைந்த சம்பவம் நேற்று கொஹுவலையில் இடம்பெற்றுள்ளது.
கொஹுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துட்டகைமுனு வீதியில் வைத்தே நேற்று மாலை 5.35 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு கார்களும் இரண்டு லொறிகளும் வான் ஒன்றும் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டுள்ளன. இதில் 05 வாகனங்களும் சேதமாகியுள்ளதாக கொஹுவலை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த ஐவரும் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.FRIDAY, AUGUST 14, 2009(லக்ஷ்மி பரசுராமன்)

வேலைவாய்ப்பு பணியகம் முன்னால் போலி வெளிநாட்டு முகவர் நிலையம்:பெண் உட்பட பலர் கைது பஜரோ வாகனமும் கைப்பற்றப்பட்டது

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு முன்னால் சிறிய கடையொன் றுக்குள் நடத்தப்பட்டு வந்த போலி வெளிநாட்டு முகவர் நிலையம் நேற்று பொலி ஸாரினால் சுற்றிவளைக்கபபட்டது.

இப் போலி வெளிநாட்டு முகவர் நிலையத்தை நடத்திவந்த பெண் ஒருவரும் பலரும் பொலிஸாரால் கைதுசெய்யப் பட்டனர். புதிய ரக பஜரோ வாகனமொன்றையும் பொலிஸார் கைப்பற்றியிருப்பதாகவும் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க கூறினார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு முன்பாகவிருக்கும் சிறிய கடையொன்றுக்குள் வைத்து கும்பலொன்று நீண்ட காலமாக போலி முகவர் நிலையமொன்றை நடத்தி வந்துள்ளது. பணியகத்தின் கீழ் தாங்கள் செயற்பட்டு வருவதாகக் கூறி, மக்களை ஏமாற்றி இந்தக் குழு பணம் பறித்து வந்துள்ளது.
நேற்றைய தினம் சுமார் 50 பேர் வரையில் இந்த சிறிய கடைக்கு முன்பாக சூழ இருந்துள்ளனர். கூட்டத்துக்கான காரணத்தை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் தேடிப் பார்த்தபோதே சந்தேக நபர்கள் கையும் மெய்யுமாக பிடிபட்டனர்.

பிறேசிலில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெற்றிருந்த 50 பேரினதும் பெயர்கள் பணியகத்தில் பதிவுசெய்யப்பட வேண்டுமெனக் கூறியே நேற்று அவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்படும்வேளை அவர்களிடம் 50 இலட்சம் ரூபா பணம் இருந்ததாகவும் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க கூறினார்.

போலி முகவர் நிலையத்தினால் ஏமாற்றப்பட்ட 50 பேரும் பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்கள் ஒவ்வொருவரும் பிறேசிலில் வேலை பெற்றுக்கொள்வதற்காக குறித்த முகவர் நிலையத்துக்கு ஒரு இலட்சத்து 65 ஆயிரம் ரூபா வீதம் வழங்கியிருப்பதாக கூறியுள்ளனர். பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்
FRIDAY, AUGUST 14, 2009 (லக்ஷ்மி பரசுராமன்)

Tuesday, August 11, 2009

இடம்பெயர்ந்த மக்களுக்கு அமெரிக்கா 15 மில்லியன் டொலர் பெறுமதியான உணவுப் பொருட்கள்

வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கென 1.724 பில்லியன் ரூபா (15 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்கு ஐக்கிய அமெரிக்கா முன்வந்துள்ளது. இதற்கேற்ப யு. எஸ். எயிட் நிறுவனம், உலக உணவுத் திட்டத்தின் ஊடாக இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைக்கவிருக்கின்றது.

மூன்று இலட்சம் மக்களுக்கு சுமார் நான்கு மாத காலத்துக்குத் தேவையான கோதுமை, அவரை வகைகள் மற்றும் மரக்கறி எண்ணெய் ஆகியன உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை கப்பல் மூலம் இலங்கைக்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகள் உலக உணவுத் திட்ட அமைப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (TUESDAY, AUGUST 11, 2009 லக்ஷ்மி பரசுராமன்)

இலங்கை - வியட்நாம் இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கைக்கும் வியட்நாமுக்குமிடையிலான பரஸ்பர இருதரப்பு ஒப்பந்தம் நேற்று வெளிவிவகார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.

வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவும் வியட்நாம் வெளிவிவகார அமைச்சர் டாவு வியட் ட்ரூங் ஆகிய இருவருமே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இருநாடுக ளுக்குமிடையிலான பரஸ்பர இருதரப்பு ஒப்பந்தம் முதன் முறையாக 2003 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது.

பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க 2006 ஆம் ஆண்டில் வியட்நாமுக்கு விஜயம் மேற்கொண்டதைய டுத்தும் இவ் வருடம் வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம அந்நாட்டுக்கு சென்று வந்ததை தொடர்ந்தும் ஒப்பந்தம் இரண்டாவது தடவையாக புதுபித்தல் சாத்தியமாகியிருப்பதாக அமைச்சர் போகொல்லாகம செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றும்போது கூறினார்.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வியட்நாம் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஒக்டோபர் மாதம் அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவிருப்பது இரு நாடுகளுக்குமிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமையுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சில் வைத்து நேற்று கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம், அரசியல், கலாசாரம், சமயம், மக்களுக்கிடையிலான தொடர்புகள் உள்ளிட்ட பரந்துபட்ட அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை வியட்நாமுடன் மேற்கொள்ளும் வர்த்தக நடவடிக்கைகளில் வருடத்துக்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலாபமீட்டுகின்றது. இதனை 100 மில்லியன் அமெரிக்க டொலர்களாக்குவதை குறிக்கோளாக வைத்து வியட்நாம் வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு நடத்தியதாகவும் அமைச்சர் போகொல்லாகம குறிப்பிட்டார்.

பிராந்திய ரீதியாக இருநாடுகளுக்குமிடையிலான உறவு மேலும் பலப்படுத்தப்படுவதுடன் 70 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் மூடப்பட்ட வியட்நாம் தூதரகத்தை விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அதற்கான பூரண ஒத்துழைப்பை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்குமென தான் உறுதி மொழிந்ததாகவும் அமைச்சர் சொன்னார்.

அங்கு செய்தியாளர் மத்தியில் கருத்து தெரிவித்த வியட்நாம் வெளிவிவகார அமைச்சர்; இரு நாடுகளுக்குமிடையிலான உறவு குறித்து விளக்கியதுடன் தமது தூதரகத்தை விரைவில் கொழும்பில் மீளத் திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் கூறினார்.

இலங்கை ஜனாதிபதி எதிர்வரும் ஒப்டோபரில் எமது நாட்டுக்கு வருகை தரவிருப்பது இலங்கையுடனான எமது உறவில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகுமெனவும் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூன்றாம் கட்டம் 2011 ஆம் ஆண்டு வியட்நாமில் வைத்து கைச்சாத்திடப் படுமெனவும் அவர் குறிப்பிட்டார். (TUESDAY, AUGUST 11, 2009 லக்ஷ்மி பரசுராமன்)

Saturday, August 8, 2009

ஊவா, யாழ்., வவுனியாவில் இன்று தேர்தல்

ஊவா மாகாண சபை, யாழ்ப்பாணம் மாநகர சபை, வவுனியா நகர சபை ஆகியவற்றுக்கான தேர்தல்கள் இன்று (08) நடைபெறுகின்றன.
வாக்கெடுப்பு இன்று காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை நடைபெறும். முதலாவது முடிவு நள்ளிரவுக்குப் பின்னர் வெளிவரும் எனத் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் இம்முறை வாக்களிப்பதற்கு எட்டு இலட்சத்து 75 ஆயிரத்து 456 பேர் தகுதிபெற்றுள்ளனர். 23 கட்சிகளிலும், ஏழு சுயாதீனக் குழுக்களிலுமாக 600 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இவர்களுள் 30 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இங்கு 814 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தில் 5 இலட்சத்து 74 ஆயிரத்து 814 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளார்கள். 14 கட்சிகளிலும் நான்கு சுயேச்சைக் குழுக்களிலுமாகப் போட்டியிடும் 432 வேட்பாளர்களுள் 21 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். மொனறாகலை மாவட்டத்தில் 3 இலட்சத்து 642 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். நான்கு கட்சிகளிலும், இரண்டு சுயேச்சைக் குழுக்களிலுமாகப் போட்டியிடும் 168 வேட்பாளர்களில் 11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தல் கடந்த 12 வருடங்களுக்குப் பின்னர் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் வாக்களிக்க ஒரு இலட்சத்து 412 பேர் தகுதிபெற்றுள்ளனர். நான்கு கட்சிகளிலும் இரண்டு சுயேச்சைக் குழுக்களிலுமாக 174 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுள் 23 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவர்.

யாழ். மாநகர சபைத் தேர்தல் இறுதியாகக் கடந்த 1997 ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் திகதி நடைபெற்றது. இதில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட சரோஜினி யோகேஸ்வரன் மாநகர முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் 1997 மே மாதம் 17ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார். அதற்குப் பின்னர் இப்போதுதான் முதன் முறையாகத் தேர்தல் நடைபெறுகிறது.

யாழ். மாநகர சபைத் தேர்தலில் இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கென 16 வாக்குச் சாவடிகள் அடங்கலாக மொத்தம் 86 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்துக்கு வெளியில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், புத்தளம், அநுராதபுரம் ஆகிய இடங்களில் 15 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

யாழ். நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 75 பேர் வாக்களிக்க அரியாலை பார்வதி வித்தியாலயத்திலும் வாக்குச்சாவடியொன்று அமைக்கப்பட்டுள்ளது. மாநகர சபைக்கு வெளியில் இடம்பெயர்ந்த ஆறாயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் பீ. குகநாதன் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தவர்களுள் கொழும்பில் 285 பேரும், கம்பஹாவில் 871 பேரும், களுத்துறையில் 249 பேரும், புத்தளம் 4418 பேரும், அநுராதபுரத்தில் 132 பேரும் யாழ்ப்பாணத்தில் 75 பேருமாக 6030 வாக்காளர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 4978 பேர் மட்டுமே வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.
வவுனியா நகர சபைக்கான தேர்தல் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறுகிறது. இந்தத் தடவை இங்கு வாக்களிக்கவென 24 ஆயிரத்து 624 பேர் தகுதிபெற்றுள்ளதாக வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி தெரிவித்தார். 6 அரசியல் கட்சிகளிலும், 3 சுயேச்சைக் குழுக்களிலுமாக 135 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில் 11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். தேர்தல் பணிகளுக்கென 638 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைதியான தேர்தலை நடத்துவதற்காக தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஊவா, யாழ்ப்பாணம், வவுனியாவில் எவ்வித பதற்றமும் இன்றி மிகவும் சுமுகமான நிலைமை காணப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மூன்று இடங்களிலும் சுமுகமான நிலை இருப்பதால் நீதி, நேர்மையான தேர்தல் நடைபெறுமென தான் நம்புவதாக அவர் கூறினார்.
கடந்த கால தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இம்முறை வன்முறைகள் மிகவும் குறைவாக இருக்கிறதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்கென 638 அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.SATURDAY, AUGUST 08, 2009(விசு கருணாநிதி, லக்ஷ்மி பரசுராமன்)

Friday, August 7, 2009

ஊவா, யாழ், வவுனியாவில் மிகவும் சுமுக நிலைமை:தேர்தல்கள் ஆணையாளர் திருப்தி; நீதி, நேர்மையான தேர்தல் நடைபெறுமென நம்பிக்கை

ஊவா மாகாண சபைத் தேர்தல் மற்றும் யாழ்ப்பாணம், வவுனியா உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடவடிக்கைகளின்போது சுமுகமான நிலைமையே காணப்படுவதால் நீதியாகவும் அமைதியானதுமான முறையில் நாளை தேர்தல்கள் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

கடந்த கால தேர்தல்களுடன் ஒப்பிடும்போது இம்முறை வன்முறைகள் குறித்து கிடைக்கப் பெற்றிருக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை பெரிதும் குறைவடைந்திருப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.
ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று தேர்தல்கள் ஆணையாளர் தலைமையில் செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது.
இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேர்தல் வன்முறைகள் இம்முறை குறைவடைந்திருப்பது சாதகமான முடிவாக இருப்பதுடன் பாரிய முன்னேற்றமாக தென்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்காக இம்முறை கொழும்பிலிருந்து 638 அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். யார் எதிர்ப்புத் தெரிவித்தாலும் யாழ்ப்பாணத்துக்கு 81 அதிகாரிகளையும் வவுனியாவுக்கு 21 அதிகாரிகளையும் தான் அனுப்பி வைக்கவிருப்பதாக ஆணையாளர் கூறினார்.

குறிப்பாக வடக்கில் தேர்தல்கள் உரிய முறையில் நடத்தப்படுகின்றதா என்பதனை அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே தனது பிரதிநிதிகளாக அவர்களை அங்கு அனுப்பி வைப்பதாகவும் இவர்களனைவரும் தேர்தல் திணைக்களத்தைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாளை நடைபெறவிருக்கும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெப்ரல், சி. எம்.ஈ. ஆகிய அமைப்புக்கள் கண்காணிப்பு நட வடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளன.

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் 8 ஆம் திகதி அதிகாலை முதல் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட ஆணையாளர், பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்வதற்காக வாக்குச் சாவடிகளுக்குச் செல்லும் வாக்காளர்கள், வேட்பாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட யாரும் எந்தவொரு ஆயுதத்தையோ கையடக்கத் தொலைபேசி களையோ எடுத்துச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள தெனக் குறிப்பிட்டார். உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இடம்பெயர்ந்துள்ளவர்களுக்காக இம்முறை ஆறு மாவட்டங்களில் வாக்கெடுப்புக்கள் நடத்தப்படுகின்றன.
இடம்பெயர்ந்துள்ளவர்களிட மிருந்து கிடைக்கப்பெற்ற ஆறாயிரத்து 30 விண்ணப்பங்களை முதலில் ஏற்றுக்கொண்டபோதும் பின்னர், இரு இடங்களில் தம்மை வாக்காளராக பதிவு செய்துள்ளமை மற்றும் தவறான தகவல்களை சமர்ப்பித்துள்ளமை போன்ற காரணங்களுக்காக ஊர்ஜிதம் செய்யப்பட்டதையடுத்து அதில் ஆயிரத்து இருபத்தேழு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 5003 பேர் மாத்திரமே தமக்கு வழங்கப்பட்டிருக்கும் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க முடியுமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.

இதன்படி, இடம்பெயர்ந்திருப்போருள் கொழும்பில் 138 பேரும் கம்பஹாவில் 619 பேரும் களுத்துறையில் 136 பேரும் யாழ்ப்பாணத்தில் 75 பேரும் புத்தளத்தில் 3, 927 பேரும் அநுராதபுரத்தில் 108 பேருமே இம்முறை வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

நாளை நடைபெறவிருக்கும் தேர்தலுக்காக பதுளையில் 507 வாக்குச் சாவடிகளும் மொனராகலையில் 307 வாக்குக்சாவடிகளும் யாழ்ப்பாணத்தில் 70 வாக்குச்சாவடிகளும் வவுனியாவில் 18 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் நிலையங்களாக பதுளையில் 56 நிலையங்களும் மொனராகலையில் 29 நிலையங்களும் யாழ்ப்பாணத்தில் 13 நிலையங்களும் வவுனியாவில் 03 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அடையாள அட்டை

அடையாள அட்டை இல்லாதவர்களின் எண்ணிக்கை நாளடைவில் குறைந்துவிடும். அதற்கு ஊவா மாகாணம் சிறந்த எடுத்துக்காட்டென ஆணையாளர் கூறினார். கல்வியாளர் சமூகத்தினரைக் கொண்ட மாத்தறையுடன் ஒப்பிடும்போது மொனராகலை, பதுளை ஆகிய மாவட்டங்களில் தேசிய அடையாள அட்டை வைத்திருப்போரின் எண்ணிக்கை 82 சதவீதமாகும். இது எமது பணி முழுமையாக நிறைவேற்றப்பட்டிருப்பதனை சுட்டிக்காட்டுகிறது. மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களையொட்டி தேசிய அடையாள அட்டை இல்லாதோர்க்கு அவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்காக நான்கு மாவட்டங்களில் 59 தடவைகள் நடமாடும் சேவைகள் நடத்தப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டார்.

சுவரொட்டிகள்

தேர்தல் முடிவடைந்ததையடுத்து வீதிகளிலிருந்து சுவரொட்டிகளை அகற்றுவதற்காக ஒவ்வொரு தடவையும் ஒரு கோடியே இரண்டு இலட்சம் ரூபா வரையில் செலவிடப்படுகிறது. ஆனால் கடந்த முறை தேர்தலின்போது ஒட்டப்பட்ட சுவரொட்டியை நான் இன்னும் எனது வீடு செல்லும் வழியில் காண்கிறேன்.

ஆகவே இம்முறை சுவரொட்டிகளை அகற்றும் பணிக்கு எவ்வித நிதி ஒதுக்கீடும் செய்ய நான் அனுமதிக்கப்போவதில்லையெனவும் ஆணையாளர் கூறினார். (FRIDAY, AUGUST 07, 2009 லக்ஷ்மி பரசுராமன்)

Monday, August 3, 2009

சுற்றுலாத் துறையை மேம்படுத்த சங்காய் பிரதிநிதிகள் இலங்கை வருகை

இலங்கை, சீனா ஆகில நாடுகளுக்கிடையே சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சங்காய் மாநகர சுற்றுலாப் பணியகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

சங்காய் மாநகர சுற்றுலாப் பணியகத்திலிருந்து நேற்று இலங்கை வந்திருக்கும் 10 பிரதிநிதிகளைக் கொண்ட குழு எதிர்வரும் 08 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்குமென வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இக்குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், சங்காய் மாநகர சுற்றுலாப் பணியகம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புச் சபை ஆகியவற்றுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், சீனாவில் இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையிலும் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவிருப்பதாகவும் அமைச்சின் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சங்காயிருந்து இலங்கை வந்திருக்கும் பிரதிநிதிகள் குழு சுற்றுலாத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறையுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்திப்பதுடன், கண்டி பெரஹெராவில் கலந்து கொள்வரெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சங்காய் மாநகர சுற்றுலாப் பணியகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வருகை தந்திருப்பது இதுவே முதல் தடவையாகு மெனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. (03-08-2009-லக்ஷ்மி பரசுராமன்)

சவூதி அரேபியாவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அலுவலகம்:இலங்கையர் நலன் பேண நடவடிக்கை

சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் செயற்படக் கூடியவகையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அதன் உப அலுவலகங்களை சவூதி அரேபியாவின் வெவ்வேறு பிரதேசங்களில் அமைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

சவூதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கையரின் நலன் கருதி இந்த உப அலுவலகங்களைத் திறப்பதற்கு முடிவு செய்திருப்பதாக பணியகத்தின் பேச்சாளர் நேற்றுத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சுமார் ஆறு இலட்சம் இலங்கையர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரிகின்றனர். இவர்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ரியாத்திலுள்ள தூதரகத்துக்கோ அல்லது கிளையான தமாமுக்கோ செல்ல வேண்டிய நிலைமையுள்ளது.
இதனால் சவூதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கையர்கள் பல அசெளகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் சவூதி அரேபியாவில் இலங்கையர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தூதரகத்தின் கீழ் செயற்படக் கூடியவகையில் உப அலுவலகங்களை மேலும் திறக்கவும்இ அங்கு பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் முன்னெடுப்பதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தலைமையிலான குழு சவூதி சென்றுள்ளது.

இதேவேளைஇ பல்வேறு குற்றச் செயல்களை புரிந்துள்ளதாக காரணம் காட்டி தமாம் மற்றும் ரியாத் ஆகிய இடங்களிலுள்ள தற்காலிக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 250 இலங்கையர்களை விடுவிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் பணியகத்தின் தலைவர் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். (03-08-2009-லக்ஷ்மி பரசுராமன்)