Monday, September 28, 2009

வட மாகாணத்தில் 500 பொலிஸாரை ஆட்சேர்க்க 6500 பேர் விண்ணப்பம்:இன்றும் நாளையும் நேர்முகப் பரீட்சை 400 பெண்களும் விண்ணப்பம்


வடக்கில் 500 பொலிஸாரை ஆட்சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சைகள் இன்றும் நாளையும் நடைபெறுமென யாழ்ப்பாணத்துக்கான பொலிஸ் சுப்ரின் டன்ட் ஜி. எச். மாரப்பன தெரிவித் துள்ளார்.

யாழ். மாவட்டத்தின் யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, காங்கேசன்துறை, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களில் இந்நேர்முகப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

செப்டெம்பர் 19 ஆம் திகதிக்குட்பட்ட காலப்பகுதியில் 6 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் 400 பெண்களினுடையதெனவும் யாழ். பொலிஸ் சுப்ரின்டன்ட் மாரப்பன கூறினார்.
கடந்த 03 தசாப்தங்களுக்குப் பின்னர் இப்போதே முதல் தடவையாக யாழ்ப் பாணத்தில் பொலிஸ் ஆட்சேர்ப்பு நடை பெறுவதாக சுட்டிக்காட்டிய அவர், அடுத்த கட்டமாக சப் இன்ஸ்பெக்டர் தெரிவுக்காக விரைவில் விண்ணப்பங்கள் கோரப்படுமெனவும் தெரிவித்தார்.
MONDAY, SEPTEMBER 28, 2009 லக்ஷ்மி பரசுராமன்

கிணற்றிலிருந்து மோட்டார் குண்டுகள் மீட்டெடுப்பு


கம்பஹா கலகெடிஹென பகுதியிலுள்ள கிணரொன்றுக்குள்ளிருந்து இரண்டு மோட்டார் குண்டுகள் நேற்று கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.

பொது மக்கள் வழங்கிய தகவ லையடுத்தே குண்டுகள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளன.
MONDAY, SEPTEMBER 28, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Wednesday, September 23, 2009

ஐ. ம. சு. மு. வேட்பாளர் நிஷாந்த விளக்கமறியலில்

தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் நிஸாந்த முத்துஹெட்டிகம எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாள ரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமாகிய நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

காலி மாவட்ட வேட்பாளராகப் போட்டியிடும் இவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் மா அதிபருக்கும் பொலிஸாருக்கும் எதிராகக் கருத்து தெரிவித்தமையால் அவர் நேற்று முன்தினம் (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

காலி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவர் செப்டம்பர் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இவரது வழக்கை நேற்று மீள விசா ரணைக்கு எடுத்துக்கொண்ட காலி மஜிஸ் திரேட் நீதவான் மீண்டும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இவரை விளக்கமறி யலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

வேட்பாளர் நிஷாந்த, அதே கட்சியில் போட்டியிடும் பிரபல நடிகை அனார்க்கலி ஆகர்ஷாவுக்கு இடையூறு ஏற்படுத்தினா ரென அவர் மீது நடிகை பொலிஸாரிடம் புகார் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய பொலிஸார் செயற்பட்டு நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பாக செய்தியாளர் மாநாடொன்றை நடத்திய நிஷாந்த, பொலிஸ் தம்மிடம் அடாவடித் தனமாக நடந்து கொண்டதாகக் கூறி தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண் டார். பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலி ஸாருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையி லான கருத்துக்களையடுத்தே இவர் கைதுசெய் யப்பட்டதாக தெரிய வருகிறது.
WEDNESDAY, SEPTEMBER 23, 2009 லக்ஷ்மி பரசுராமன்

A-9 ஊடாக 10 இலட்சம் பாடப்புத்தகங்கள் இன்று யாழ். அனுப்ப ஏற்பாடு


யாழ். குடாநாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களுக்காக கல்வியமைச்சு இன்று 10 இலட்சம் பாடப்புத்தகங்களை தரைவழியாக அனுப்பி வைக்கவுள்ளது.

அடுத்த ஆண்டுக்குத் தேவையான இந்த புத்தகங்கள் ஏ-9 வீதியினூடாக எடுத்துச் செல்லப்படவுள்ளன. 28 வருடங்களுக்குப் பின்னர் இன்றே முதல் தடவையாக யாழ். குடாநாட்டுக்கு பாடப்புத்தகங்கள் கொண்டுசெல்லப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

முந்தைய வருடங்களில் யாழ். குடாநாட்டுக்கு கப்பல் மூலம் புத்தகங்களை எடுத்துச் செல்வதற்கு மூன்று மில்லியன் ரூபா செலவாகியதாகவும் ஏ-9 வீதியினூடாக இவற்றைக் கொண்டுசெல்வதற்கு தற்போது 1.3 மில்லியன் ரூபாவே செலவாகுவதாகவும் அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பாடப் புத்தகங்கள் எடுத்துச் செல்லும் லொறிகள் இன்று காலை 10.30 மணிக்கு கல்வி யமைச்சிலிருந்து யாழ். குடாநாடு நோக்கி புறப்படும்.
WEDNESDAY, SEPTEMBER 23, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, September 22, 2009

வவுனியாவில் மீளக்குடியேறியோருக்கு அடிப்படை வசதிகள் யாவும் இலவசம்


வவுனியா தெற்கில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 320 பேருக்கும் எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு இலவசமாக அத்தியாவசிய உலர் உணவுகள், மின்சார இணைப்பு, நிவாரண உதவிகள் ஆகியன வழங்கப்படவிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சாள்ஸ் தெரிவித்தார்.

மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள ஆயிரம் குடும்பங்களுக்கும் அவர்களது சொந்த காணிகளில் வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பாக கருத்திற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அது குறித்து உயர்மட்ட பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.

பெரும்போக பயிர்ச் செய்கையை முன்னிட்டு வவுனியா வடக்கில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டிருந்த ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த மூவின மக்களும் வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள தமது சொந்த காணிகளில் மீளக்குடியமர்த்தப்பட்டிருப்பதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மீளக்குடியமர்த்தப்பட்டவர்கள் தமது காணிகளை சுத்திகரித்து பெரும்போக பயிர்ச் செய்கையில் ஈடுபட தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். உத்தியோகபூர்வமாக இவர்களை குடியேற்றும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியா கலாசார மண்டபத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பியின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மீளக்குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபா பெறுமதியான மண்வெட்டி, கோடரி ஆகியன உள்ளிட்ட காணி சுத்திகரிப்பு உபகரணங்களும் தற்காலிக கூடாரங்களை அமைத்துக் கொள்வதற்கான 16 தகரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

வீதிகள், குளங்கள், ஆலயங்கள், பாடசாலைகள், கூட்டுறவுச் சங்கங்கள், சனசமூக நிலையங்கள், வைத்தியசாலைகள், தபாலகங்கள் ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டிரு ப்பதுடன் ஒவ்வொருவரது காணிகளுக்கும் நீர் மற்றும் மின் வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மின் இணைப்புக்கள் ஆறு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படவிருப்பதால் கட்டணங்கள் எதுவும் அறவிடப்படமாட்டாதெனவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, இவர்களுடைய சுத்திகரிப்பு பணிகளை ஊக்குவிக்கும் முகமாக ஒரு ஏக்கர் நிலபரப்புக்கு 4 ஆயிரம் ரூபா வீதம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிலரது காணிகள் பற்றைக் காடுகளாக மாறியிருப்பதனால் அவற்றை சுத்திகரிக்க சிறிது காலம் தேவைபடுமென்பதனால் இந்திய அரசாங்கம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவிகள் கோரப்பட்டிருந்தன. அந்த வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வரும் 06 மாதகாலத்துக்கு அக்காணிகளைச் சேர்ந்தோருக்கு நிவாரணமாக குறிப்பிட்ட உதவித் தொகையை வழங்க முன்வந்துள்ளது.

¡ணிகளில் தூர்ந்துபோன கிணறுகளை மீள வெட்டி புதுப்பிப்பதற்காக இந்திய அரசாங்கம் உதவுவதாக வாக்குறுதியளித்திருப்பதாகவும் அரசாங்க அதிபர் கூறினார்.

பெரும்போக பயிர்ச் செய்கையை முன்னிட்டு மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப் பட்டமையினால் இவர்களுக்கான வீடுகளை அமைத்துக்கொடுப்பது தொடர்பில் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் 06 மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களை வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

TUESDAY, SEPTEMBER 22, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Monday, September 21, 2009

கம்புறுப்பிட்டியில் இரு கொள்ளையர்கள் நேற்று சுட்டுக் கொலை


ஹக்மனை கடையொன்றில் கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோட முயன்ற கொள்ளையர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு கொள்ளையர்களும் உயிரிழந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.

இச் சம்பவம் நேற்றுக் காலை 10.45 மணியளவில் கம்புறுப்பிட்டியில் இடம் பெற்றுள்ளது. கறுவா மற்றும் இறப்பர் விற்பனை செய்யும் கடையொன்றுக்கு மோட்டார் சைக் கிளில் வந்த இரு கொள்ளையர்கள் பொருள் வாங்குவது போல் நடித்து கடையிலிருந்த இருவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஒன்றரை இலட்சம் ரூபா பணம் மற்றும் தங்க சங்கிலி ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தை கேள்வியுள்ள ஹக்மனை பொலிஸார், கம்புறுப்பிட்டிய பொலிசுக்கு தகவல் வழங்கியதையடுத்து சப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கொள்ளையர்களை விரட்டிச் சென்றுள்ளனர்.

தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக வீடொன்றுக்குள் புகுந்த இக் கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் சரமாரிமாகத் துப்பாக்கி பிரயோகம் நடந்தது. இதில் கொள்ளையர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றையவர் கம்புறுப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார்.

கம்புறுப்பிட்டிய பொலிஸார் கொள்ளையர்களிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கி யொன்றினையும் அவர்களது மோட்டார் சைக்கிள், கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் தங்கச் சங்கிலி ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான கடையிலிருந்த இருவரும் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் மெத்திவக்க தெரிவித்தார்.

MONDAY, SEPTEMBER 21, 2009 லக்ஷ்மி பரசுராமன்

அமைச்சர் முரளி பயணித்த வாகனம் கொழும்பில் விபத்து


தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பயணித்த ஜீப் வாகனம் நேற்று விபத்துக்குள்ளானது. இதில் அமைச்சர் தெய்வா தீனமாக உயிர் தப்பினாரென பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நிமல் மெத்திவக்க கூறினார்

கொழும்பு, கறுவாத்தோட்டம் ஃப்ளவர் வீதி ஜே. ஓ. சி. சுற்று வட்டத்துக்கு அருகாமையில் வைத்து நேற்று மாலை 4.45 மணியளவில் இவ்விபத்து நடந்துள்ளது. அமைச்சர் சென்ற ஜீப் வாகனத்துடன் ‘154’ இலக்க தனியார் பயணிகள் பஸ் வண்டி மோதியதிலேயே விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தின் காரணமாக அமைச்சரின் மெய்பாதுகாவலாளியும் வாகனச் சாரதியும் சிறு காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருவதாக கூறினார்
MONDAY, SEPTEMBER 21, 2009 லக்ஷ்மி பரசுராமன்

வடக்கில் விவசாய அபிவிருத்திகளை துரிதப்படுத்த இந்திய அரசு முன்வருகை


வடக்கில் விவசாயி அபிவிருத்திகளை துரிதப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது.

வவுனியாவுக்கு விஜயம் செய்த இந்திய விவசாய நிபுணர்கள் குழு, இது தொடர்பாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது.

இதன்போது விவசாய அபிவிருத்திகளை துரிதப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்குமென தெரிவித்த இந் நிபுணர்கள் குழு, மிக விரைவில் பல்வேறு திட்டங்களை அமைத்துக் கொடுப்பதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் கூறினார். வவுனியாவில் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல்லை களஞ்சியப்படுத்தி வைக்கக் கூடிய வகையில் பாரிய களஞ்சியசாலையொன்றை அமைத்துத் தருவதாகவும் இந்திய நிபுணர்கள் குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

இதனைவிட 500 லீற்றர் பால் சேகரிக்கும் நிலையம் மூன்று சூடடிக்கும் இடங்கள், கால்நடை பண்ணை, கோழிப்பண்ணை ஆகியவற்றை தமது முழுச் செலவில் அமைத்துக் கொடுப்பதற்கும் இக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.
வவுனியாவிலிருக்கும் மூன்று விவசாய நிலங்களுக்கும் தேவையான அனைத்து இயந்திரங்களும் பெற்றுக் கொடுக்கப்படும் இதேவேளை விவசாயிகளுக்கு விசேட பயிற்சிகள் மற்றும் தொழில் நுட்ப அறிவைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுமெனவும் இந்தியக் குழு அரசாங்க அதிபரிடம் வாக்குறுதியளித்துள்ளது.

வவுனியா விவசாயக் கல்லூரியை அதி தொழில்நுட்பத்துடன் கூடிய கல்லூரியாக மாற்றியமைக்கும் அதேவேளை குளங்கள், கால்வாய்கள் என்பவற்றை திருத்திக் கொடுப்பதாக கூறியதாவும் அரசாங்கம் அதிபர் தெரிவித்தார்.

அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டதற்கமைய அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கான அனைத்து வேலைத் திட்டங்களையும் முன்னெடுப்பதற்கு இணக்கம் தெரிவித்த இந்திய விவசாய நிபுணத்துவக்குழு இதேவேலைத் திட்டங்களை வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் முன்னெடுக்கவிருப்பதாக தெரிவித்ததாகவும் அரசாங்க அதிபர் நேற்று கூறினார்.
MONDAY, SEPTEMBER 21, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Friday, September 18, 2009

ஐ.நா.விசேட பிரதிநிதி பெஸ்கோ வவுனியா, யாழ்., மன்னார் விஜயம்':மீள்குடியேற்றத்திற்கு ஐ.நா. உதவுமென உறுதி ஜனாதிபதி, அரசியல் கட்சிகளுடன் இன்று சந்திப்பு


இலங்கையில் இடம்பெயர்ந்து ள்ளவர்களை விரைவில் மீள குடியமர்த்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை பூரண உதவிகளை வழங்குமென ஐ. நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியாக இலங்கை வந்திருக்கும் ஐ. நா. அரசியல் விவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவர் லின் பெஸ்கோ நேற்றுத் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரவு, இலங்கை வந்த லின் பெஸ்கோ நேற்றுக் காலை யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடியகற்றும் வேலைத் திட்டங்களையும் கண்டறிந்தார்.

வடக்குக்கான தனது சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய பெஸ்கோ நேற்று மாலை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல் லாகமவை அமைச்சில் சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்தினார்.

நீண்ட நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பையடுத்து செய்தியாளர்கள் மத்தியில் லின் பெஸ்கோ உரையாற்றினார்.இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நிவாரணக்கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்டதன் மூலம் மோதல்களுக்குப் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத் திட்டங்கள் குறித்து தெளிவாக விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கிறதென லின் பெஸ்கோ சுட்யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போரை நேரில் சந்தித்துப் பேசக் கூடிய வாய்ப்பு எனக்கு கிட்டியது. அவர்கள் எங்கிருந்து வந்துள்ளார்கள். தற்போது என்ன செய்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் உதவிகள் அம்மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் அபிலாஷைகளையும் என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. நிவாரணக் கிராமங்களில் பணிபுரியும் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் ஐ.நா. உதவி அதிகாரிகளையும் சந்தித்து பேச்சு நடத்தியதன் மூலம் இலங்கை அரசாங்கம் இடம் பெயர்ந்துள்ளவர்களுக்காக முன்னெடுத்துவரும் உதவிகளையும் வசதிகளையும் நன்கு அறிந்துகொண்டேன் எனவும் லின் பெஸ்கோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


உலகின் பல நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்துள்ளேன். நான் பார்த்தவற்றிலேயே மெனிக் பாம் நிவாரணக் கிராமம் மிகவும் விசாலமானது. நிவாரணக் கிராமத்தில் வாழ்பவர்களுக்கு எத்தனை வசதிகளை செய்துகொடுத்தாலும் தமது சொந்த வீடுகளில் வாழ்வது போன்ற உணர்வு இருக்காது. இவர்கள் கூடுமான விரைவில் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும். அதற்கேற்ற வகையில் கண்ணிவெடியகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்படவேண்டுமெனவும் நிவாரணக் கிராமங்களிலிருந்து இம்மக்களை கூடிய விரைவில் வெளியேற்ற ஐ.நா. பூரண ஒத்துழைப்பை வழங்குமெனவும் பெஸ்கோ கூறினார்.அமைச்சர் போகொல்லாகம கருத்து தெரிவிக்கையில்:-மோதல்களையடுத்து நாட்டில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்நிலையில், ஐ. நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியாக லின் பெஸ்கோ இலங்கை வந்திருப்பது எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.எமது இருதரப்பு சந்திப்பின்போது இடம்பெயர்ந்த மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் உதவிகள், வசதிகள் மற்றும் வடக்கில் அபிவிருத்திப் பணிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும் தெரிவித்தார்.இதேவேளை லின் பெஸ்கோ இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசியல் முக்கியஸ்தர்கள் மற்றும் தமிழ் அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.டிக்காட்டினார்.
FRIDAY, SEPTEMBER 18, 2009 லக்ஷ்மி பரசுராமன்

தொப்பிகலையில் வெடிபொருட்கள் மீட்பு


மட்டக்களப்பு மாவட்டம் தொப்பிகலை பிரதேசத்திலிருந்து இராணுவத்தின் விசேட அதிரடிப்படையினர் நேற்று பெருந்தொகையான அதி சக்தி வாய்ந்த வெடிபொருட்களை கைப்பற்றியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.

தொப்பிகலை தாராவிக்குளம் காட்டுப் பகுதிக்குள்ளிருந்தே இவை நேற்றுக் காலை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

27.5 கிலோ கிராம் நிறைகொண்ட சி4 வெடி பொருட்கள் அடைக்கப்பட்ட ஒரு பிப்பாய், 2500– ரி-56 ரவைகள் அடைக்கப் பட்ட மூன்று பெட்டிகள், நான்காயிரம் இலத்திரனியல் டெட்டனேட்டர்கள் அடை க்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய் ஆகியனவே விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட் டதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

FRIDAY, SEPTEMBER 18, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Wednesday, September 16, 2009

வாஸின் மனைவி, மகனுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்:நால்வர் நேற்று விடுதலை





தகவல் தொழில்நுட்ப கல்லூரி மாணவனின் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த வாஸ் குணவர்தனவின் மனைவி, மகன் ஆகியோருடன் மேலும் எட்டுப் பேரையும் எதிர்வரும் 29ம் திகதிவரை மீண்டும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மேலும் நால்வர் நேற்று சட்டமா அதிபரின் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப் பட்டுள்ளனர். கடுவலை நீதிமன்றத்தினால் நேற்று இந்த வழக்கு விசா ரணைக்கு எடுத்துக்கொண்டபோதே மேற்படி தீர்ப்புகள் வழங்கப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் மெத்திவக்க தெரிவித்தார்.

கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்தனவின் மகன், தகவல் தொழில்நுட்ப கல்லூரியில் தன்னுடன் கல்வி கற்கும் சக மாணவனை தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வாஸ் குணவர்தனவின் மகன் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுள் நால்வரே நேற்று சட்டமா அதிபரின் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் நேற்றைய வழக்கின்போது, ஒரு சமயம் காணாமற் போனதாக கூறப்படும் தகவல் தொழில்நுட்ப கல்லூரி மாணவன் கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கொண்டு வருவதற்கு முன்னர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்தனவின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பது ஆரம்பகட்ட விசாரணை களிலிருந்து தெரிய வந்திருப்பதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது.


WEDNESDAY, SEPTEMBER 16, 2009 லக்ஷ்மி பரசுராமன்

சிறைக்காவலர் 30 கஞ்சா பக்கற்றுகளுடன் கைது


பலபிட்டிய சிறைச்சாலை காவலாளியொருவர் 30 கஞ்சா பக்கட்டுக்களுடன் நேற்றுக் காலை கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பொது மக்கள் தொடர்பாடல் பிரிவின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரோஹண கமகே தெரிவித்தார்.


மேற்படி காவலாளிக்கு கஞ்சா பக்கற்றுக்களை விநியோகித்த பெண்ணும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். சிறைச்சாலைக்குள்ளிருந்து வெளியே வந்த காவலாளி வீதியின் எதிரே நின்று கொண்டிருந்த பெண் ஒருவரிடமிருந்து 30 கஞ்சா பக்கற்றுக்களைப் பெற்றுக்கொள்ளும்வேளை பொலிஸார் இவ்விருவரையும் கையும் மெய்யுமாக கைது செய்துள்ளனர்.


விசாரணைகளுக்குப் பின்னர், கைது செய்யப்பட்டிருக்கும் பெண்ணின் கணவர் ஏற்கனவே கஞ்சா விற்பனையில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் இருப்பவரெனத் தெரியவந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
WEDNESDAY, SEPTEMBER 16, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Thursday, September 10, 2009

நாடு திரும்பும் இந்திய மருத்துவ குழுவுக்கு கொழும்பில் பாராட்டு:ரூ. 25 மில். பெறுமதியான மருந்து பொருட்களும் கையளிப்பு



மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கென இந்தியாவிலிருந்து இலங்கை வருகை தந்திருந்த மருத்துவக் குழு தமது ஆறு மாதகால பணியை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ளது.

புதுமாத்தளனிலும் வவுனியாவிலும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இந்த மருத்துவக் குழுவைச் சேர்ந்த வைத்தியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு நேற்று தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் போஷாக்கு மற்றும் சுகாதார பராமரிப்பு சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இதன்போது நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் 25 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டன.

இந்த மருந்துப் பொருட்களின் ஒரு தொகுதியினை நிகழ்வின் போது இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் அமைச்சர் நிமல் சிறிபாலவிடம் கையளித்தார்.

நாட்டில் மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தவேளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரால் கிரீன் ஓசன் கப்பல் மூலம் புல்மோட்டைக்கு கொண்டு செல்லப்பட்ட நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை உதவிகளை முன்னெடுப்பதற்காக கடந்த மார்ச் 09 ஆம் திகதி இந்தியாவிலிருந்து மருத்துவக் குழுவொன்ற இலங்கை வந்து மருத்துவ முகாமை நடத்தி வந்தது.

புல்மோட்டையில் 02 மாத காலம் அமைக்க ப்பட்டிருந்த இந்த மருத்துவ முகாம் 21 தடவைகள் கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட 7 ஆயிரம் இடம்பெயர்ந்தவர்களுக்கும் புல்மோட்டையை வதிவிடமாகக் கொண்ட 100க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கும் சிகிச்சையளித்து வந்தது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் கருத்து தெரிவிக்கையில் :-

இலங்கையில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது என்பதற்காக நாம் இந்தியாவிலிருந்து வைத்தியர்களை வரவழைக்கவில்லை.
இங்கே போதுமானளவு வைத்தியர்கள் இருக்கின்ற போதும் இலங்கையுடனான மிகவும் நெருங்கிய நட்பு காரணமாகவே இந்த மருத்துவக் குழு இங்கு வந்து சேவையாற்றியது. புல்மோட்டை மணற் பரப்பில் 72 மணித்தியாலங்களுக்குள் 50 கட்டில்களுடன் மருத்துவ முகாமை ஆரம்பித்து சிகிச்சைகளை முன்னெடுத்தோம்.

இது பின்னர் 115 கட்டில்களாக விரிவுபடுத்தப்பட்டது. இந்திய மருத்துவர்கள் தமது சேவையை சரிவர முன்னெடுக்க சுகாதார அமைச்சின் அதிகாரிகள் எமக்கு பூரண ஒத்துழைப்பைத் தந்தனர்.

இந்நிலையில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் வவுனியாவில் தங்க வைக்கப்பட்டதையடுத்து அங்கு அம்மக்களுக்கு சிகிச்சையளிக்கும் நோக்கில் இந்திய மருத்துவ முகாம் வவுனியாவின் மெனிக்பாம் மற்றும் செட்டிக்குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டது.
அங்கே நான்கு மாத காலம் சேவையாற்றிய மருத்துவக் குழு 40 ஆயிரம் நோயாளர்களுக்கு சிகிச்சையளித்த அதேவேளை 1000 சத்திர சிகிச்சைகளையும் முன்னெடுத்துள்ளது.

இந்திய அரசாங்கம் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக 125 மில்லியன் (இலங்கை) ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை வழங்குவதாக ஏற்கனவே வாக்குறுதியளித்திருந்தது.

இதன்படி 100 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மிகுதி 25 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டன.
THURSDAY, SEPTEMBER 10, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Wednesday, September 9, 2009

9. 9. 9 கற்பிட்டியில் 6 நட்சத்திர ஹோட்டல்:இன்று காலை அடிக்கல் நடும் நிகழ்வு


இலங்கையில் முதல் தடவையாக ஆறு நட்சத்திர ஹோட்டலொன்று அமைக்கப்படவுள்ளது. கற்பிட்டி பகுதியில் அமைக்கப்படவிருக்கும் இந்த ஹோட்டலுக்கான அடிக்கல் இன்று காலை நடப்படும்.

உலகிலேயே முன்னணியில் திகழும் ஹோட்டல் நிர்வாக நிறுவனமான ‘சிக்ஸ் சென்ஸஸ்’ இந்த ஆறு நட்சத்திர ஹோட்டலை முகாமைத்துவம் செய்யவிருப்பது இலங்கையின் சமாதானத்துக்கும் புகழுக்கும் கிடைத்திருக்கும் பெரும் கீர்த்தி என சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

இலங்கை சுற்றுலாச் சபையில் நேற்று மாலை, கற்பிட்டியில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் ‘டச் பே ரிசோட்’ எனும் ஆறு நட்சத்திர ஹோட்டல் குறித்து விளக்கும் செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது.

இதில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் சுமார் 30 வருடகாலமாக நீடித்துவந்த பயங்கரவாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் முடிவுக்கு வந்ததையடுத்து சர்வதேச தரம் கொண்ட நிறுவனங்கள் நாட்டில் முதலீடு செய்யவும் முகாமைத்துவம் செய்யவும் முன்வந்துள்ளன. இதன் மூலம் சுற்றுலாத்துறை என்றுமில்லாதவாறு உயர்ந்த ஸ்தானத்தை அடையவுள்ளதெனவும் அவர் தெரித்தார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் சுற்றுலா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க, ‘டச்பே ரிசோட்ஸ்’ தலைவர் நீல் த சில்வா, இலங்கை சுற்றுலாத்துறை ஊக்கவிப்பு பணியகத்தின் தலைவர் பேர்னார்ட் குணதிலக்க, டச்பே ரிசோட்ஸ் பிரதம அபிவிருத்தி அதிகாரி பெட்ரிக் கூட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் நவீன் திஸாநாயக்க கருத்து தெரிவிக்கையில்:- உலகின் முன்னணியில் திகழும் ‘சிக்ஸ் சென்ஸஸ்’ நிறுவனம் இலங்கை கரையோரத்துக்கு வருவது எமது நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விடயமாகும். இது நீண்ட கால திட்டமாகும். 2011 இல் இது நிறைவு பெறுமென எதிர்ப்பாக்கின்றோம். ஆறு நட்சத்திர ஹோட்டலை அமைப்பதன் மூலம் 2010 ஆம் ஆண்டு இறுதியில் சுமார் ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கற்பிட்டி டச்பே தீவில் 09-09-2009 ஆம் திகதியாகிய இன்று காலை 9 மணி 9 நிமிடமும் 9 செக்கனில் ஆறு நட்சத்திர ஹோட்டலுக்கான அடிக்கல் நடப்படவுள்ளது. இந்நிகழ்வுக்காக நான்கு மதங்களைச் சேர்ந்த மத குருமாரும் வரவழைக்கப்பட்டிருப்பதாக ‘டச்பே ரிசோஸ்ட்’ ஹோட்டலின் தலைவர் நீல் த சில்வா கூறினார்.

‘டச்பே ரிசோட்ஸ்’ ஆறு நட்சத்திர ஹோட்டலானது 175 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்படவுள்ளது. 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பப்பில் இயற்கையான சதுப்பு நிலத்திற்கு மத்தியில் இது அமைக்கப்படும். முதற்கட்டமாக 5 ஆயிரம் அறைகள் அமைக்கப்படவுள்ளன.
பின்னர் அவை விரிவு படுத்தப்படும். ஒரு அறைக்கு ஒரு இரவுக்கு முதற்கட்டமாக ஆகக் குறைந்தது 850 டொலர் வீதம் அறவிடத் தீர்மானித்திருப்பதாகவும் நீல் த சில்வா தெரிவித்தார்.

இரண்டு கட்டடங்களை மாத்திரமே கொண்டு உருவாக் கப்படவிருக்கும் இந்த ஆறு நட்சத்திர ஹோட்டலின் முகப்பு வழமைபோல் கடலை நோக்கி அமையாது வித்தியாசமாக ஏரிப்புறமாக அமையவிருப்பது இதன் சிறப்பம்சம் எனவும் அவர் கூறினார்.

நாட்டில் சமாதானம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இலங் கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து ள்ளது. இயற்கை எழில் கொண்ட கற்பிட்டி பகுதிக்கான மவுசு அதிகரித்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் 4 ஆயிரம் அறைகள் மாத்திரமே அப்பகுதியிலுள்ள விடுதிகளில் இருக்கிறது.

இது எமக்கு கவலையளிக்கிறது. அதனை நிவர்த்தி செய்யும் விதமாக ‘டச்பே ரிசோட்ஸ்’ எனும் ஆறு நட்சத்திர ஹோட்டல் ‘சிக்ஸ் சென்ஸஸ்’ முகாமைத்து வத்தின் கீழ் அங்கு அமைக்கப்படவிருப்பது சுற்றுலாத்து றைக்கு மட்டுமன்றி இலங்கைக்கே பெருமை சேர்க்கும் விடயமென செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய இல ங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் பேர்னார்ட் குணதிலக்க தெரிவித்தார்.
WEDNESDAY, SEPTEMBER 09, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, September 8, 2009

தோட்டத்தொழிலாளர் சம்பள அதிகரிப்பு பேச்சு இணைக்கப்பாடின்றி முடிவு:ஒத்துழையாமை போராட்டம் தொடரும் - தொழிற்சங்கம்



தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிந்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் கூறினார். இராஜகிரியிலுள்ள முதலாளிமார் சம்மேளனத்தில் நேற்று சுமார் இரண்டு மணித்தியாலங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித இணக்கப்பாடும் காணப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை ஆகக்கூடியது 500 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பாக தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையில் நேற்றுடன் ஆறு தடவைகள் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளன.

நாட் சம்பளத்தை ஆகக்கூடியது 500 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பாக இதற்கு முன்னர் 05 தடவைகள் இருதரப்புக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததையடுத்து தோட்டத் தொழிற்சங்கங்களினால் ஒத்துழையாமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆறு நாட்களாக தொழிற்சங்கப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று ஆறாவது தடவையாக முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி முடிந்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை ஆகக்கூடியது 360 ரூபாவாக அதிகரிப்பதாக முதலாளிமார் சம்மேளனம் இப்பேச்சுவார்த்தையின் போது தீர்மானத்துக்கு வந்துள்ளது. இருப்பினும் தோட்டத் தொழிற்சங்கங்கள் இதனை நிராகரித்துள்ளன. அதனையடுத்து பேச்சுவார்த்தை எவ்வித இணக்கப்பாடுமின்றி முடிவுக்கு வந்ததாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பேச்சாளர் கூறினார்.

தாம் முன்வைத்திருக்கும் கோரிக்கைக்கு சாதகமான முடிவு கிட்டும் வரை ஒத்துழையாமை தொழிற்சங்கப் போராட்டம் தொடருமெனவும் தேவையேற்படின் வேறு விதமான தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க தயாரெனவும் தோட்டத் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
பேச்சுவார்த்தையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், பிரதியமைச்சர்களான முத்து சிவலிங்கம், எஸ். ஜெகதீஸ்வரன், முன்னாள் எம். பி. யோகராஜன் மற்றும் ஹரிஸ் சந்திரசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சார்பாக கே. வேலாயுதம், மொஹிதீன் மற்றும் பெருந்தோட்டக் கூட்டு கமிட்டி சார்பாகவ எஸ். இராமநாதன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

TUESDAY, SEPTEMBER 08, 2009 லக்ஷ்மி பரசுராமன்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஹெரோயின் கடத்த முற்பட்ட பாகிஸ்தான் பிரஜை கைது


இலங்கைக்குள் ஹெரோயினைக் கடத்த முற்பட்ட பாகிஸ்தானியப் பிரஜையொருவர் நேற்று கையும் மெய்யுமாக கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 14 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று மாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே மேற்படி பாகிஸ்தானிய பிரஜை பொலிஸ் போதை தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பேச்சாளர் மெத்திவக்க கூறினார்.
TUESDAY, SEPTEMBER 08, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Monday, September 7, 2009

மக்கா செல்ல 100 இலவச விசாக்கள்; சவூதி வழங்கியுள்ளது



ரமழான் மாத காலத்தில் உம்றா கடமையை நிறைவேற்றுவதற்கு மக்கா செல்வோருக்காக சவூதி அரேபிய அரசாங்கம் 100 விசாக்களை இலவசமாக வழங்கியுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவின் வேண்டுகோளுக்கு அமையவே கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகம், உம்றா கடமைமை நிறைவேற்றச் செய்யும் 100 ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விசாக்களை வெளிவிவகார அமைச்சிடம் வழங்கியுள்ளது.

இந்த இலவச விஸாக்கள் இன்று லக்ஷ்மன் கதிர்காமர் கற்கை நிலையத்தில் வைத்து அமைச்சர் போகொல்லாகமவினால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் யாத்திரிகர்களுக்கு வழங்கப்படும். முஸ்லிம்களுக்கு ரமழான் மாதத்தில் இலவச விசாக்களை வழங்கியமைக்காக அமைச்சர் போகொல்லாகம சவூதி அரேபிய அரசாங்கத்துக்கும் சவூதி அரேபியத் தூதுவர் ஜமாசுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை, இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் சவூதி அரேபிய அரசாங்கம் வைத்துள்ள நம்பிக்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டு எனவும் கூறியுள்ளார்.

ரமழான் மாதத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உம்றா கடமையை நிறைவேற்றுவதற்காக மக்கா செல்வது வழக்கம். பல்வேறு காரணங்களுக்காக சவூதி அரசாங்கம் இம்முறை உலக நாடுகளிலிருந்து உம்றா கடமைக்காக வரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கையினை குறைத்திருந்தது. இதனடிப்படையில் இலங்கையிலிருந்து செல்லும் யாத்திரிகர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டிருந்தது. இதனைக் கேள்வியுற்ற அமைச்சர் போகொல்லாகம இது குறித்து விசேட கவனம் செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து சவூதி அரேபிய தூதுவர், அமைச்சர் கேட்டுக் கொண்டதற்கிணங்க முதற் தடவையாக இலவச விசாக்களை வழங்கவிருப்பதாக கூறினார்.

அமைச்சரினால் தெரிவு செய்யப்பட்டு பெயர் வழங்கப்பட்ட, முதல் தடவையாக உம்றா கடமையில் ஈடுபடுவதற்காக செல்லும் 100 பேருக்கே இந்த இலவச விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
MONDAY, SEPTEMBER 07, 2009 லக்ஷ்மி பரசுராமன்

தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு: இன்று கொழும்பில் இறுதிக் கட்டப் பேச்சு



தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 500 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை இன்று கொழும்பில் நடத்தப்படுமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.

முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தோட்டத் தொழிற்சங்கங்களின் கூட்டுக் கமிட்டிக்குமிடையிலான இச்சந்திப்பு இன்று மாலை 5 மணிக்கு சம்மேளன அலுவலகத்தில் நடைபெறும்.

தோட்டத் தொழிற்சங்கங்களின் கூட்டு கமிட்டி சார்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம், மற்றும் தோட்ட தொழிற்சங்க கூட்டு கமிட்டி ஆகியன 22 தனியார் கம்பனிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய முதலாளிமார் சம்மேளனத்துடன் நாள் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பாக இன்று பேச்சு நடத்தும்.

இதேவேளை, தோட்டத் தொழிற்சங்கங்களின் கூட்டு கமிட்டிக்கும் முதலாளிமார் சம்மேளத்துக்குமிடையே பல தடவைகள் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடையவே, தோட்டத் தொழிலாளர்களில் ஒத்துழையாமை தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டம் வெற்றிகரமாக தொடரப்பட்டு வரும் நிலையில் இன்றைய பேச்சுவார்த்தையும் தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாவிடின் கடுமையான முறையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் கூறினார்.
MONDAY, SEPTEMBER 07, 2009 MONDAY, லக்ஷ்மி பரசுராமன்

மதுராவெல எதிர்க்கட்சி தலைவர் ஆயுதங்களுடன் கைது




மதுராவெல பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் லால் தம்பவிட்ட நேற்று ஆயுதம் மற்றும் வெடிமருந்துகளுடன் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.

ஹொரணை, ஹங்குறுவத்தொட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட தேடுதலின் போதே பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கி, 26 ரவைகள் மற்றும் ஒருதோட்டா ஆகியன மீட்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார். கைது செய்யப்பட்டவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்
MONDAY, SEPTEMBER 07, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Sunday, September 6, 2009

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாளை ஜனாதிபதியுடன் சந்திப்பு


தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசவுள்ளது.

அலரிமாளிகையில் நாளை பி. ப. 4 மணிக்கு இந்தச் சந்திப்பு இடம் பெறுமென தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவ ரான இரா. சம்பந்தன் தலைமையிலான ஐவர் கொண்ட குழு இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளுமெனவும் அவர் கூறினார்.

ஜனாதிபதியுடனான இந்தச் சந்திப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இன்று கொழும்பில் கூடி ஆராயவுள்ளனர். ஏற்கனவே ஜனாதிபதியைச் சந்திக்க நாம் முடிவு செய்திருந்தோம். என்றாலும், வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் அது சாத்தியமாகவில்லை. ஆனாலும், நாளை நாம் சந்திக்கத் தீர்மானித்துள்ளோம்” என்றார்.

“ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது அரசியல் விடயங்கள் தொடர்பாக ஆராய்வதைத் தவிர்த்து மீள் குடியேற்றம் பற்றியே பேசவுள்ளோம்” என்று கூறிய அவர், வடக்கில் இடம் பெயர்ந்திருப்போர் நிலைமை, அவர்களது மீள் குடியேற்றத்தைத் துரிதப்படுத்துதல் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வருவோம் என்றார்.

இதேபோல, வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட சகல முஸ்லிம்களையும் மீளக் குடியேற்றுவது பற்றியும் ஜனாதிபதியுடன் தாங்கள் பேசப்போவதாகவும் அவர் சொன்னார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், “தற்போதைய நிலையில் புதிய தொரு அரசியல் நிலைப்பாடு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராய்ந்து வருகிறது” என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
யுத்தம் முழுமையாக முடிவடைந்த பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசுவது இதுவே முதற் தடவையாகும்.SUNDAY SEPTEMBER 06, 2009 லக்ஷ்மி பரசுராமன்

வடக்கு வசந்தம்:அடையாளம் காணப்பட்ட 35 கிராமங்களில் அடுத்த மாதம் முதல் மீள் குடியேற்றங்கள்


வவுனியா மாவட்டத்தில் 35 கிராமங்கள் மீள்குடியேற்றத்துக்காக அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். இம்மீள் குடியேற்றங்கள் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

‘வடக்கின் வசந்தம்’ வேலைத் திட்டத்தின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷவின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் 35 கிராமங்களிலும் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ரிசாட் கூறினார்.

இதேவேளை, வவுனியா மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கிராமமான சாலம்பைக்குளத்திலும் 400 முஸ்லிம் குடும்பங்கள் இத் திட்டத்தின் கீழ் மீள்குடியமர்த்தப்படவிருப்பதாக அமைச்சர் கூறினார்.

புலிகளால் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் இக் கிராமங்களிலுள்ளவர்கள் விரட்டியடிக்கப்பட்டதுடன் இவர்கள் பல்வேறு பகுதிகளிலும் இடம் பெயர்ந்தவர்களாக இன்னமும் வாழ்ந்து வருகின்றனர்.

சாலம்பைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 400 முஸ்லிம் குடும்பங்கள் இடம் பெயர்ந்து அனுராதபுர மாவட்டம் ரம்பாவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இடம்பெயர்ந்தோரின் விருப்பின் பேரில் அடுத்த மாதமளவில் இவர்கள் மீண்டும் சாலம்பைக்குளத்தில் மீளக்குடியமர்த்தப்படுவர்.

மீளக்குடியமர்த்தலை துரிதப்படுத்தும் வகையில் மத்திய அரசாங்கமும் மாகாண சபையும் இணைந்து வவுனியா மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் 35 கிராமங்களிலும் கிராமிய கட்டமைப்புக்கான அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றன. தற்போது இக் கிராமங்களில் கூட்டுறவுச் சங்கங்கள், பாடசாலைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் கிராமங்களுக்கு மின்சாரம் பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் கூறினார்.

மீளக் குடியமர்த்தப்படவுள்ள கிராம வாசிகளின் பிரதான ஜிவனோபாய தொழில் விவசாயமாக இருப்பதனால் “பெரும்போக” செய்கை ஆரம்பிப்பதற்கு முன்னமாகவே இவர்களை தமது இடங்களில் குடியமர்த்தி தொழில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.SUNDAY SEPTEMBER 06, 2009 லக்ஷ்மி பரசுராமன்

ஒத்துழையாமை தொடர்ந்தும் முன்னெடுப்பு:சம்பள அதிகரிப்பு வழங்க மறுத்தால் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு


தோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழையாமை தொழிற்சங்கப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தோட்டத் தொழிலாளர் சங்கங்கள் தெரிவித்தன.

இதேவேளை, நாளை திங்கட்கிழமை கொழும்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் தோட்டத் தொழிற்சங்கங்களின் கூட்டுக் கமிட்டி பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 500 ரூபாவாக அதிகரிக்கும் வகையில் கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டுமென்ற நிபந்தனையை முன்வைத்து தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டி முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சு நடத்திய போதும், சம்மேளனம் அதற்கு இணங்காமையினால் பேச்சுவார்த்தை தொடர்ந்தும் இழுபறியிலேயே இருந்து வருகிறது.

இந்நிலையில், தமது கோரிக்கைக்கு முடிவு காணப்பட வேண்டுமெனக் கோரி, கூட்டு கமிட்டியின் ஆதரவுடன் பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் அடையாள தொழிற்சங்கப் போராட்டமாக ஒத்துழையாமை போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

நாளைய பேச்சுவார்த்தையும் சாதகமாக முடியாத பட்சத்தில் ஒத்துழையாமை போராட்டம் தொடர்ந்தும் கடுமையாக முன்னெடுக்கப்படுமெனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மு. சிவலிங்கம் கூறினார்.

தோட்டத் தொழிலாளிகளின் அடிப்படைச் சம்பளத்தில் அதிகரிப்பை ஏற்படுத்தக் கோரி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தோட்ட தொழிற்சங்க கூட்டு கமிட்டி ஆகியனவே முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சு நடத்தி வருகின்றன.SUNDAY SEPTEMBER 06, 2009லக்ஷ்மி பரசுராமன்

Thursday, September 3, 2009

சிறைகளை கண்காணிக்க புலனாய்வு பாதுகாப்புப் பிரிவு:செப், 1 முதல் நடவடிக்கை ஆரம்பம்



சிறைச்சாலைகளுக்குள் இடம் பெறுவதாக கூற ப்படும் சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப் படுத்தி, அதனை கண்காணிக்கும் பொருட்டு விசேட புலனாய்வு பாதுகாப்பு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இதன் பரீட்சார்த்த நடவடிக் கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சிறை ச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளரு மான கெனத் பெர்னாண்டோ, இந்த பிரிவுக்கு முழு அதிகாரங்கள் வழங்கப் பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
45 சிறைச்சாலை அதிகாரிகள், ஊழி யர்களைக் கொண்டு இந்தப் புலனா ய்வு பாதுகாப்பு பிரிவு தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்த அவர், இந்தப் பிரிவின் நடவடிக்கைகளை வெகு விரைவில் நாடளாவிய ரீதியில் அமுல் படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி. ஆர். சில்வாவின் வழிகாட்டலில் ஆணையாளர்களான ஹப்பு ஆராய்ச்சி மற்றும் லக்ஷ்மன் சில்வா ஆகியோரின் தலைமையில் இந்த பரீட்சார்த்த நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளி லும் பரீட்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளன. இந்தப் புலனாய்வு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எந்தவொரு சிறைச்சாலைக்கும் திடீரென விஜயம் செய்யவும் சிறைக்கைதிகள் மற்றும் அதிகாரிகளை சோதனையிடவும் அதிகா ரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விசேட புலனாய்வுப் பாதுகாப்பு பிரிவை நாடளாவிய ரீதியில் நிறுவுவதற்கென ஆயிரம் சிறைச்சாலை ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவ தாகவும் அவர் தெரிவித்தார்.
சிறைச்சாலைக்குள் பாதாள உலக கோஷ்டியி னரின் செயற்பாடுகள் காணப்படுவதாகவும், சட்ட விரோத செயற்பாடுகள், கையடக்கத் தொலை பேசி மற்றும் போதைவஸ்துக்கள் கைமாறப்படு வதாகவும் குற்றஞ் சாட்டப்படுவதையடுத்தே இத னைக்கட்டுப்படுத்தும் நோக்குடனேயே இந்த பிரிவு நாடளாவிய ரீதியில் உருவாக்கப்படவுள் ளதுடன் தற்பொழுது இதன் பரீட்சார்த்த நட வடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறி ப்பிட்டார்.
இந்தப் பிரிவின் பரீட்சார்த்த செயற்பாடுகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் நாடளாவிய ரீதியில் இந்தப்புலனாய்வுப் பாதுகாப்பு பிரிவு அமைக் கப்பட்டு அதன் செயற்பாடுகளை விஸ்தரித்த பின்னர் கண்டி, காலி, அநுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் சேவையை முன்னெடுக்க முடியும் என்றும் கெனத் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டார்.
இந்தப் பிரிவின் செயற்பாடுகளின் மூலம் சிறைச்சாலைக்குள் இடம் பெறும் சட்ட விரோத செயற்பாடுகளை இலகுவாகக்கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவிக்கையில், சிறைச்சாலையில்ஒழுங்கை கடைப்பிடிப்பதற்காக எதிர்காலத்தில் பல கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.
அண்மையில் கூட சிறைச்சாலைகளிலிருந்து 18 கையடக்கத் தொலைபேசிகளை கைப்பற்றியிருந்தோம். நியமிக்கப்பட்டுள்ள புலனாய்வு பாதுகாப்பு அதிகாரிகள் தமது கடமைகளை சரிவர முன்னெடுப்பார்களென்ற நம்பிக்கை உண்டு எனவும் தெரிவித்தார்.

செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர். சில்வா நாட்டில் தற்போது 30 ஆயிரம் சிறைக்கைதிகள் இருப்பதாகவும் அவர்களுள் 50 சதவீதமானவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்ஏனையோரில் 251 பேர் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களெனவும் தெரிவித்தார்.

நாட்டில் 03 பிரதான சிறைச்சாலைகளும் 19 விளக்கமறியல்களும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.THURSDAY, SEPTEMBER 03, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, September 1, 2009

வாஸின் மகன் உட்பட ஐவர் அடையாளம் காணப்பட்டனர்


மாலபே தகவல் தொழில் நுட்பக் கல்லூரி மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் வாஸ் குணவர்தனவின் மகன் உட்பட ஐவர் அடையாளம் காணப்பட்டி ருப்பதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க கூறினார்.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வாஸ் குணவர்தனவின் மகன் மேற்குறிப்பிட்ட கல்லூரி மாணவனான நிபுண என்பவரை சில பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் கடத்திச் சென்று தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வாஸ் குணவர்தனவின் மனைவி, மகன் மற்றும் 14 பொலிஸ் அதிகாரிகள், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு அதன் பின் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்TUESDAY, SEPTEMBER 01, 2009 லக்ஷ்மி பரசுராமன்

தோட்ட தொழிலாளர் சம்பள அதிகரிப்பு விவகாரம்:முதலாளிமாருடனான பேச்சு தோல்வி; தொழிற்சங்க போராட்டத்திற்கு முஸ்தீபு


தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கக் கோரி முதலாளிமார் சம்மேளனத்துடன் நேற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை யடுத்து தொழிற்சங்க நடவடிக் கைகளை முன்னெடுக்க தயாராகி வருவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

தோட்ட முகாமைத்துவ முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தோட்டத் தொழிலாளர் சார்பான கூட்டு கமிட்டிகளுக்கு மிடையிலான சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது குறித்த பேச்சுவார் த்தை நேற்று கொட்டகலை காங்கிரஸ் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது.
இதன் போது தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 500 ரூபா வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இப்பேச்சுவார்த்தையில் தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தோட்ட தொழிற்சங்க கூட்டு கமிட்டி ஆகியன கலந்து கொண்டன.
இருபத்திரண்டு தனியார் கம்பனிகளை உள்ளடக்கிய முதலாளிமார் சம்மேளனம், தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தில் 12 சதவீத அதிகரிப்பை மாத்திரமே முன்னெடுக்க முடியும் என்று தமது கொள்கையில் உறுதியாக இருந்துள்ளது. இரு தரப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை காணப்படவே நேற்றைய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஒருவார கால அவகாசத்தினை தருமாறு முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த வேண்டுகோளை கூட்டு கமிட்டி நிராகரித்துள்ளதுடன் அடுத்த கட்ட நடவடிக்கையாக தொழிற் சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க விருப்பதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பிரதி அமைச்சருமான மு. சிவலிங்கம் கூறினார்.தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக கொட்டகலை தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று காலை 11 மணிக்கு விசேட ஆலோசனைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

இதில் மாவட்டத் தலைவர்கள், தலைவிகள், உத்தியோகத்தர்கள், பெண் இணைப்பாளர்கள், மாவட்ட சம்மேளன உத்தியோகத்தர்கள் மற்றும் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்வார்களெனவும் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.TUESDAY, SEPTEMBER 01, 2009லக்ஷ்மி பரசுராமன்

ஷெல் - 103 ரூபா; லாஃப் - 69 ரூபா:சமையல் எரிவாயு விலைகள் அதிகரிப்பு


சமையல் எரிவாயுக்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டிருப்பதாக நுகர்வோர் பாதுகாப்பு விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். ஷெல்’ மற்றும் ‘லாப்’ சமையல் எரிவாயுக்களின் விலைகள் முறையே 103 ரூபா மற்றும் 69 ரூபாவினால் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் 1447 ரூபாவாகவிருந்த 12.5 கிலோகிராம் நிறைகொண்ட ‘ஷெல்’ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் தற்போதைய விலை 1550 ரூபாவாகவும், 266 ரூபாவாகவிருந்த 2.3 கிலோகிராம் நிறைகொண்ட ‘ஷெல்’ சிலிண்டரின் தற்போதைய விலை 285 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக ‘ஷெல்’ கேஸ் லங்கா நிறுவனம் தெரிவித்தது.
இதேவேளை 1407 ரூபாவாகவிருந்த ‘லாப்’ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் தற்போதைய புதிய விலை 1476 ரூபாவாகும்.

உலக சமையல் எரிவாயு சந்தையில் ஏற்பட்டிருக்கும் விலையதிகரிப்பு மற்றும் கடந்த ஜூன், ஜுலை ஆகிய மாதங்களில் சமையல் எரிவாயு இறக்குமதியில் ஏற்பட்ட செலவீனங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து சமையல் எரிவாயு விலைச் சுட்டெண் மீளாய்வு செய்யப்பட்டதனாலேயே சமையல் எரிவாயுக்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு விவகார அமைச்சு தெரிவித்துள்ளதுTUESDAY, SEPTEMBER 01, 2009 லக்ஷ்மி பரசுராமன்