Tuesday, June 29, 2010

கூட்டுச் செயற்பாடு பற்றி சம்பந்தனுடன் சிவாஜிலிங்கமும் சித்தார்த்தனும் பேச்சு

இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் ஒருமித்த நிலைப்பாடு மற்றும் மக்கள் விரும்பும் பொது நிலைப்பாடு ஆகியவை தொடர்பாக ஆராய்வதற்காக ஏழு தமிழ் கட்சிகள் கூட்டிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இக்கட்சிகளின் சார்பாக முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் மற்றும் புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் நேற்று மாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பியை சந்தித்து இந்த அழைப்பினை விடுத் துள்ளனர்.

இச்சந்திப்பு சம்பந்தன் எம்.பியின் வீட்டில் நேற்று மாலை 6 மணியளவில் இடம் பெற்றுள்ளது. சுமார் அரை மணித்தியாலம் இச்சந்திப்பு நீடித்ததாக முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் தினகரனுக்குத் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டினை எடுக்க முடியுமா என்பது தொடர்பாகவும் மக்கள் விரும்பும் வகையில் பொது நிலைப் பாட்டினை பெற்றுக் கொடுக்க முடியுமா என்பது குறித்தும் தற்போது ஏழு தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஆராய்ந்து வருகின்றன.

இக்கட்சிகளின் முதலாவது சந்திப்பு கடந்த வியாழக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது ஏனைய தமிழ் கட்சிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முன்னாள் எம்.பி. கஜேந்திர குமார் பொன்னம்பலத்தின் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி, முதலமைச்சர் சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியவற்றுக்கும் அழைப்பு விடுப்பதென தீர்மானம் எடுக்கப்பட்டது.

அந்த முயற்சியாகவே நேற்று சம்பந்தன் எம்.பியை சந்தித்து அழைப்பு விடுத்திருப் பதாகவும் சிவாஜிலிங்கம் கூறினார்.

சந்திப்பின் போது சம்பந்தன் எம்.பி. இது தொடர்பாக தன்னுடன் ஏற்கனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறியிருப்பதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் தமது கட்சியின் இறுதி முடிவை அறிவிப்பதாகவும் இவ்விடயம் தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் அமைச்சர் டக்ளஸ¤டன் உரையாடுவதாகவும் தெரிவித்ததாக சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

மற்றைய இரண்டு கட்சிகளுடனும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளப் போவதாக சிவாஜிலிங்கம் மேலும் கூறினார்.

TUESDAY, JUNE 29, 2010 லக்ஷ்மி பரசுராமன்

Monday, June 28, 2010

ஜனாதிபதி இன்று உக்ரேய்னுக்கு விஜயம்



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (29) உக்ரேய்ன் ஜனாதிபதி விக்டர் யனு கோவிச்சின் விசேட அழைப்பினையேற்று உக்ரேய்னுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அங்கு செல்லும் ஜனாதிபதி, அந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்கள் பலரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். ஜனாதிபதி உக் ரேய்ன் நாட்டின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்யவிருப்ப துடன் இலங்கை- உக்ரேய்ன் வர்த்தக பேரவை கூட்டங்களிலும் கலந்து கொள்வார்.

இவ்விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக, பொருளாதார, சுற்றுலா மற்றும் மனிதவள அபிவிருத்தி செயற்பாடுகள் மேலும் வலுப்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரேய்னுக்கு ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் செல்லவிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

TUESDAY, JUNE 29, 2010 லக்ஷ்மி பரசுராமன்

கட்டுநாயக்க - போபால் நேரடி விமான சேவையினால் சாஞ்சி புனித தலத்துக்கு இலகுவில் செல்ல வாய்ப்பு



இந்தியாவின் போபால் பிராந்திய விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டதுடன் இலங்கையர்கள் நேரடியாக போபால் சென்றடைய முடியுமென இங்கு வந்திருக்கும் இந்தியாவின் மத்திய பிரதேஷ் முதலமைச்சர் ஸ்ரீ சிவராஜ் சிங் சவ்ஹான் தெரிவித்தார்.
தமது இந்தத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெரிதும் வரவேற்றதுடன் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கும் இணக்கம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம் இலங்கை வந்த இந்திய மத்திய பிரதேஷ் முதலமைச்சர் நேற்றுக் காலை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார்.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இலங்கைக்கு பெளத்த மதத்தை எடுத்துவந்த சங்கமித்தை பிக்குனி மற்றும் மஹிந்த தேரர் ஆகியோரின் பிறப்பிடமான சாஞ்சியை பெளத்தர்களின் வணக்கஸ்தலமாக பிரகடனப்படுத்துவதன் மூலம் இலங்கை மற்றும் இந்தியாவுக்கான உறவை மேலும் பலப்படுத்த முடிவதுடன் இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க முடியுமென நம்புவதாகவும் மத்திய பிரதேஷ் முதலமைச்சர் சிவராஜ் சிங் கூறினார்.

போபால் பிராந்திய விமான நிலை யத்திலிருந்து சுமார் 30 தொடக்கம் 40 நிமிடங்களுக்குள் தரை மார்க்கமாக சாஞ்சியை சென்றடைய முடியுமெனவும் அவர் கூறினார்.

இதனைத் தவிர, நீர் வழங்கல் வடி காலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன கடந்த வருடம் மத்திய பிரதேஷ் மாநி லத்திற்கு விஜயம் செய்தபோது கேட் டுக்கொண்டதற்கமைய அங்கு சர்வதேச பெளத்த பல்கலைக்கழகம் ஒன்றை நிறு வுவதற்கு இணங்கியிருப்பதுடன் அதற்கென 65 ஏக்கர் காணியையும் 25 மில்லியன் இலங்கை ரூபாவினையும் மத்திய பிர தேஷ் மாநிலம் வழங்க முன்வந்துள்ள தெனவும் முதலமைச்சர் சிவராஜ் சிங் கூறினார்.

மேலும் இலங்கை - இந்திய உறவை பலப்படுத்தும் வகையில் 2600வது சம்புத்த ஜயந்தியை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் இவ்வருட இறுதியில் மூன்று நாள் கலை நிகழ்வுகள் நடத்துவதற்கு தீர் மானித்துள்ளோம்.
ஒக்டோபர் 22ஆம் 23ஆம் திகதிகளில் கஜுராவோவில் வர்த்தகர் களுக்கான மாநாடு நடத்தப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தக குழுவொன்றும் இல ங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் எனக் கூறிய முதலமைச்சர் இரு நாடுகளும் அபிவிருத்தியில் பாரிய வளர்ச்சி காண வேண்டுமென்பதே எமது விஜயத்தின் நோக்கமெனவும் கூறினார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தினேஷ் குணவர்தன, மத்திய பிரதேஷ் முதலமைச்சரின் செயலாளர் ஸ்ரீ அனுராக் ஜெயின், பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ சந்தன் மித்ரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
MONDAY, JUNE 28, 2010லக்ஷ்மி பரசுராமன்

முன்னாள் பெண் புலிகளுக்கு முன்பள்ளி டிப்ளோமா நெறி


வவுனியா புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள முன்னாள் பெண் புலி உறுப்பினர்களுக்கென முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறியொன்று அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவிருப்பதாக புனர்வாழ்வு நிலையத்தின் ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க தெரிவித்தார்.

வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு நிலையங்களில் முன்னாள் பெண் புலி உறுப்பினர்கள் 120 பேர் தங்கியுள்ளனர். இவர்களுக்காக இக்கற்கை நெறி நடத்தப்படவுள்ளது. வவுனியா பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் 60 பெண்களும், பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் 60 பெண்களும் தங்கியுள்ளனர். இவர்களுக்கு இக்கற்கை நெறி வெவ்வேறாக நடத்தப்படவுள்ளது

MONDAY, JUNE 28, 2010லக்ஷ்மி பரசுராமன்


Monday, June 21, 2010

நிவாரணக் கிராமங்களில் அரிசி விநியோகத்தில் மாற்றமில்லைதமிழ் அரசியல் பிரமுகரின் குற்றச்சாட்டுக்கு அரசாங்க அதிபர் சார்ள்ஸ் பதிலடி:


வவுனியா நிவாரணக் கிராமங் களில் அரிசி வழங்கப்படுவதில்லை யென்றும் தண்ணீருக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் வெளியாகியிருக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவையென வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ளோருக்கு அரிசி வழங்கப்படுவதில்லை யெனவும் அதற்கு பதிலாக
மா மாத்திரமே வழங்கி வருவதாகவும், தண்ணீர் வசதிகளின்றி மக்கள் அங்கு அவதியுறுவதாகவும் தமிழ் அரசியல் வாதியொருவரை மேற்கோள் காட்டி பத்திரிகையொன்றில் (தினகரனில் அல்ல) வெளியாகியிருக்கும் செய்திகளை தான் மறுப்பதாகவும் வவுனியா அரசாங்க அதி பர் கூறினார். குறித்த பத்திரிகையில் வெளி யாகியிருக்கும் செய்தியில் எவ்வித உண்மை யுமில்லையென கூறிய திருமதி சார்ள்ஸ், வழமைபோலவே நிவாரணக் கிராமங்களில் உள்ளோருக்கு அரிசி வழங்கப்பட்டு வருவதாகவும் அதில் எவ்வித சிக்கலு மில்லையெனவும் குறிப்பிட்டார்.

நிவாரணக் கிராமத்தில் தங்கியிருப்போரு க்கு அரிசியும் மாவும் வழங்கப்படுகிறது. சில தினங்களாக எமது களஞ்சியசாலையில் மைசூர் பருப்புக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டின் காரணமாக பருப்பு கிடைக்கப்பெறாதவர் களுக்காக குறித்த அளவு மாவினை நாம் மேலதிகமாக வழங்கினோமே தவிர அரிசி நிறுத்தப்படவில்லை” எனவும் அரசாங்க அதிபர் சுட்டிக் காட்டினார்.
சுமார் மூன்று இலட்சம் பேர் இருந்த நிவாரணக் கிராமங்களில் தற்போது 45 ஆயிரம் பேர்வரையிலானோரே தங்கி யுள்ளனர். மூடப்பட்ட நிவாரணக் கிரா மங்களைத் தவிர்ந்த ஏனையவற்றில் முன்பிருந்த அதே வசதிகளே தொடர்ந்தும் காணப்படுகின்றன. இந்நிலையில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதற்கு எவ்வித சாத்தியக்கூறுகளுமில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

அங்கு வேலை பார்க்கும் உத்தியோகத் தர்களிடமிருந்தோ பொதுமக்களிடமிருந்தோ நீர் மற்றும் மலசலகூட வசதியின்மை தொடர்பாக இதுவரை தனக்கு எவ்வித முறைப்பாடும் கிடைக்காதபட்சத்தில் இந்த குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பான தகவலெனவும் கூறினார்.
MONDAY, JUNE 21, 2010லக்ஷ்மி பரசுராமன்

Friday, June 18, 2010

வடக்கில் அபிவிருத்தி, மீள்குடியேற்ற செயற்பாடுகள் சிறப்பாக முன்னெடுப்புஅரசின் நடவடிக்கை திருப்தி - பெஸ்கோ



வடக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி மீள்குடியேற்றம், மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான செயற்பாடுகள் பூரண திருப்தியளிப்பதாக இலங்கை வந்திருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் வின் பெஸ்கோ தெரிவித்தார்.

ஐ.நா. செயலாளர் நாயகம் இந்நாட்டு ஜனாதிபதியுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையின் செயற்பாடுகள் சிறப்பான முறையில் முன் னெடுக்கப்பட்டு வருவதனை தான் நேரில் காணக்கூடியதாக விருந்ததாகவும் பெஸ்கோ நேற்று கூறினார்.

இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் வின் பெஸ்கோ ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர், தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரை சந்தித்து உரையாடியதுடன் முன்னாள் யுத்த பிர தேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து கொழும்பிலுள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் அவர் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்த தனது நிலைப்பாட்டை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனது இந்த உத்தியோகபூர்வ விஜயம் இலங்கையுடனான ஐ.நா.வின் உறவை மேலும் பலப்படுத்தியிருப்பதாக நான் நம்புகின்றேன்” என்று கூறிய பெஸ்கோ கடந்த மு¨றான் இங்கு வந்திருந்ததை பார்க்கவும் கூடுதலான அபிவிருத்தி செயற்பாடுகளையும் மீள்குடியேற்றத்தையும் நேரில் காணமுடிந்ததாகவும் இது தேசிய அரசாங்கத்தினதும் உள்ளூர் அதிகாரிகளினதும் அர்ப்பணிப்புடனான செயற்பாட்டையே பிரதிபலிக்கிறது என்றும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். மாணவர்கள் பாடசாலைக்குச் செல்கின்றனர். அவர்களது இயல்பு வாழ்க்கையை மீளப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சித்து வருவதனை என்னால் அவதானிக்க முடிந்தது. ஐ.நாவின் முகவர் அமைப்புக்கள், உள்ளூர் மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அர்ப்பணிப்புடன் இப்பகுதிகளில் செயலாற்றி வருகின்றன.

இலங்கையில், பல தசாப்தங்களாக நிலவி வந்த மோதலால் ஏற்பட்ட ரணங்களுக்கு ஓரிரவில் மருந்து கட்டட முடியாது என்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால், அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு இதுவே உகந்த தருணம் என்பதனால் சிறப்பானதொரு அரசியல் தீர்வை எதிர்பார்க்கிறோமெனவும் பெஸ்கோ குறிப்பட்டார்.

இதேவேளை, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் ஐ.நா. செயலாளர் நாயகம் அடுத்த வாரம் ஆரம்பத்தில் தன்னால் நியமிக்கப்பட்டிருக்கும் நிபுணத்துவ குழு தொடர்பாக அறிவிக்கவுள்ளாரெனவும் பெஸ்கோ சுட்டிக்காட்டினார்.
FRIDAY, JUNE18, 2010லக்ஷ்மி பரசுராமன்

பொன்சேகாவின் கைது உள்விவகாரம்; ஐ.நா. தலையிடாது - பெஸ்கோ கூறுகிறார்



இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் கைது விவகாரத்தில் ஐ.நா. தலையிடமாட்டாதென இலங்கை வந்திருக்கும் ஐ.நா செயலாளர் நாயகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் வின் பெஸ்கோ தெரிவித்தார்.

சரத் பொன்சேக்காவின் கைது உள்நாட்டு விவகாரம். அது அந்நாட்டு சட்ட திட்டங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்ப ட்ட விடயமென்பதால் அதில் ஐ.நா. தலையிட விரும்பவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நேற்று மாலை வின் பெஸ்கோ தலைமையில் செய்தியாளர் மாநாடொன்று நடைபெற்றது. அதில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதேபோல், கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் புலி உறுப்பினர்கள் 11 பேர் தொடர்பான விடயமும் நாட்டின் உள்விவகாரமென பெஸ்கோ சுட்டிக் காட்டினார்.

அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அதன் பிரகாரம் விடுதலை செய்யப்படவேண்டியவர்கள். ஆகையால், அது தொடர்பாகவும் ஐ.நா. தலையிடாதென அவர் கூறினார். நாட்டின் அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் என்பனவே ஐ.நாவின் முக்கிய குறிக்கோள்களாகும். இவற்றையே நாம் உலக நாடுகளுக்கு வலியுறுத்தி வருகின்றோம். அந்த வகையில் இலங்கையில் மோதல்களுக்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளில் நாம் அதிக ஆர்வத்துடன் உள்ளோமெனவும் பெஸ்கோ குறிப்பிட்டார்.
FRIDAY, JUNE18, 2010லக்ஷ்மி பரசுராமன்

Thursday, June 17, 2010

ஐ.நா. அதிகாரி பெஸ்கோ நேற்று முல்லைத்தீவு விஜயம்


ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான செயலாளர் லிங் பெஸ்கோ நேற்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் செய்தார்.

நேற்று நண்பகல் ஒருமணியளவில் அங்கு சென்ற அவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்குடியேற்றம், அபிவிருத்தி நடவடிக்கைகள், கண்ணிவெடி அகற்றல் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ,மெல்டா சுகுமார் தெரிவித்தார்.

வற்றாப்பளையில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளோரைச் சந்தித்து உரையாடிய அவர், அவர்களது தேவைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

வற்றாப்பளையிலுள்ள கூட்டுறவுக் களஞ்சியங்கள், உணவு விநியோகங்கள் என்பனவற்றைப் பார்வையிட்டதுடன் அவை திருப்தியளிப்பதாகவும் தெரிவித்தார். THURSDAY, JUNE17, 2010 லக்ஷ்மி பரசுராமன்

Monday, June 7, 2010

ஜனாதிபதி தலைமையில் உயர் குழு நாளை புதுடில்லி விஜயம்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை செவ்வாய்க்கிழமை புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளாரென வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் இருதரப்பு உறவுகள், அரசியல், பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பாக ஆராய்ந்து பல புதிய தீர்மானங்களை முன்னெடுக்கும் நோக்கிலேயே ஜனாதிபதினின் இந்தியாவுக்கான விஜயம் அமையவிருப்பதாகவும் அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.என். கிருஷ்ணா, அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்துவார்.

இச்சந்திப்புக்களின் போது, அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள், நல்லிணக்க குழு வின் செயற்பாடுகள், அரசியலமைப்பு மாற்றம் உள்ளிட்ட நாட்டின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பாக ஜனாதிபதி அந்நாட்டுத் தலைவர்களுக்கு விளக்க மளிப்பார்.


இந்த மூன்று நாள் விஜயத்தின் போது இரு நாடுகளுக்குமிடையிலான 03 இருதரப்பு ஒப்பந்தங்களும் 02 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் (மொத்த மாக 05 ஒப்பந்தங்கள்) கைச்சாத்திடப் படவிருப் பதாகவும் அமைச்சின் அதிகாரி தெரிவித்தார்.

ஜனாதிபதியுடன் அமைச்சர்களான ஜீ. எல். பீரிஸ், கெஹெலிய ரம்புக்வெல்ல, டக்ளஸ் தேவானந்தா, நிதியமைச்சின் செயலாளர் பி. பி. ஜயசுந்தர, மின் சக்தியமைச்சின் செயலாளர் பெர்னான்டோ, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க, போக்குவரத்து அமைச்சின் செயலாளர், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட குழுவினரும் நாளை இந்தியா பயண மாகின்றனர்
MONDAY, JUNE07, 2010லக்ஷ்மி பரசுராமன்

30,000 மாணவருக்கு இலவச கணனி பயிற்சி நெறி


முப்பதாயிரம் மாணவர்களுக்கு இலவசமாக கணனிப் பயிற்சி யினை வழங்க தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சு முன்வந்துள்ளது. அமைச்சர் திஸ்ஸ வித்தாரணவின் ஆலோசனையின் பேரில் நாடளாவிய ரீதியிலுள்ள ‘விதாதா’ நிலையங்களினூடாகவே இலவச கணனிப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

நாட்டு மக்களிடையே கணனி அறிவினை மேம்படுத்துவதற்காக வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவியரீதியில் ‘விதாதா’ பயிற்சி நிலையங்கள் நிறுவப்பட்டன. கடந்த வருடம் 15 ஆயிரம் மாணவர்கள் இதனூடாக பயிற்சி பெற்றிருந்தனர். தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ளோர் எந்தவொரு ‘விதாதா’ நிலையத்தினூடாகவும் அதற்கான பயிற்சிகளை பெற்றுக் கொள்ளலாம்.
MONDAY, JUNE07, 2010லக்ஷ்மி பரசுராமன்

மஹதிர் மொஹமட் நாளை இலங்கை வருகை


மலேசிய முன்னாள் பிரதமர் மஹதிர் மொஹமட் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு நாளை செவ்வாய்க்கிழமை இலங்கை வருகிறார்.

நாளை மாலை 5.45 மணியளவில் இலங்கை வரும் அவரை வரவேற்பதற்காக பிரதி வெளிவிவகார அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் செல்லவிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

விசேட அழைப்பினை ஏற்று இலங்கை வரும் மஹதிர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இங்கே தங்கியிருப்பார். அவர் இங்கிருக்கும் காலப் பகுதியில் பிரதமர் தி.மு. ஜயரட்னவை சந்தித்து பேச்சு நடத்துவாரென எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர்
MONDAY, JUNE07, 2010லக்ஷ்மி பரசுராமன்
குறிப்பிட்டார்