Friday, October 30, 2009

சுனாமி எச்சரிக்கை ஒத்திகை வெற்றி



கிழக்கு மாகாணம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை வெற்றிகரமாக நடத்தப்பட்டதென அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.


சுனாமி அனர்த்தம் இடம்பெறக்கூடியதற் கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு ஆகக் குறைந்தது 16 நிமிடங்களுக்குள் அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது மக்களும் ஆகக் கூடிய 30 நிமிடங்களுக்குள் காலி மாவட்டத்தின் பெரலியிவைச் சேர்ந்த மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவ்வதிகாரி தெரிவித்தார்.


சுமாத்திரா தீவில் நேற்று பி.ப. 2.50 மணிக்கு பூகம்பம் இடம்பெற்றதாக கற்பனை செய்து இலங்கையின் குறித்த ஆறு மாவட்டங்களிலும் சுனாமி அனர்த்தம் இடம்பெறக்கூடியதற்கான வாய்ப்பு இருப்பதாக மாலை 3.40 மணியளவில் அனைத்து அனர்த்த முகாமைத்துவ நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டது.


நிலைய இணைப்பாளர்கள் ஆறு மாவ ட்டங்களைச் சேர்ந்த கரையோர மக்களையும் விழிப்புணர்வூட்டி பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர். ஆகக்கூடியது 30 நிமிடங்களுக்குள் இதனை வெற்றிகரமாக செய்து முடிக்கக் கூடியதாக விருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய ஆறு மாவட்டங்க ளில் நேற்று சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடத்தப்பட்டமை குறிப்பித்தக்கது.

FRIDAY, OCTOBER 30, 2009 லக்ஷ்மி பரசுராமன்

பம்பலப்பிட்டி கடலில் இளைஞன் அடித்துக் கொலைபொலிஸ் விசாரணைக்கு உத்தரவு:


பம்பலப்பிட்டி கடலில் நேற்று மாலை இளைஞரொருவர் அடித்துக் கொல் லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.


குறித்த இளைஞனை பொல்லினால் தாக்கியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து தடுப்புக் காவலில் வைக்குமாறு தான் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டிருப்ப தாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மெத்திவக்க கூறினார்.


இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர் கள் எவராகவிருப்பினும் கைது செய்யப்படும் அதேவேளை, பொலிஸாராயிருந்தாலும் பக்கச்சார்பின்றி உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
பம்பலப்பிட்டி கரையோரத்தில் நேற்று மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:-


கரையோரத்திலிருந்த இளைஞரொருவர் நேற்றுக்காலை முதல் அவ்வழியாக சென்ற வாகனங்கள் மற்றும் ரயில்கள் மீது கற்களை எறிந்து வந்ததாக கூறப்படுகிறது. இறுதியாக ரயில் ஒன்றின் மீது குறித்த இளைஞன் கற்களை வீசி எறிந்த போது அங்கிருந்தவர்கள் கூடி அவனை நையப்புடைத்துள்ளனர்.
அதனையடுத்து கரையோரத்தில் சனக்கூட்டம் அதிகமாகவே அங்கிருந்த ஒருவரினால் இச்சம்பவம் வீடியோ படமாக்கப்பட்டுள்ளது.


அதில் சிலர் கடலுக்குள் வைத்து குறித்த இளைஞனை பொல்லினால் தாக்க முயற்சிப்பதாயும் சிறிது நேரத்தில் அவன் உயிரிழந்த நிலையில் கடலுக்குள் தாழ்ந்து செல்வதாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.


உண்மையில் இளைஞன் பொதுமக்களினால் கரையில் வைத்து தாக்கப்படும் போது தவறி கடலுக்குள் விழுந்தானா? அல்லது சம்பவ இடத்துக்கு விரைந்த பம்பலப்பிட்டி பொலிஸார் அவனை கைது செய்ய முற்பட்டவேளை தான் தப்புவதற்காக கடலுக்குள் குதித்தானா? என்பது குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மெத்திவக்க தெரிவித்தார்.


உயிரிழந்த இளைஞன் புத்தி சுவாதீனமற்றவன் எனத் தகவல்கள் கிடைத்துள்ளமையால் அது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனக் கூறிய பொலிஸ் பேச்சாளர், இளைஞன் பொல்லினால் தாக்குண்டதினால் தான் கொல்லப்பட்டானா என்பது குறித்தும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் நேற்று இரவுவரை மீட்கப்படவில்லை. மீட்புப் பணி கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

FRIDAY, OCTOBER 30, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Thursday, October 29, 2009

ஆறு மாவட்டங்களில் இன்று சுனாமி எச்சரிக்கை ஒத்திகை:ஒரு மணி நேரத்தினுள் மக்கள் பாதுகாப்பு’



தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு ஆறு மாவட்டங்களில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்வுகளை இன்றைய தினத்திலும் நடத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலேயே இன்று பிற்பகல் 3 மணி முதல் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடத்தப்படவி ருப்பதாக நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் காமினி ஹெட்டியாராச்சி நேற்று தெரிவித்தார்.

இடர்முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சில் நேற்று மாலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்தார்.

சுனாமி அனர்த்தம் எதிர்காலத்தில் இடம்பெறுமாயின் அதற்கு மக்கள் தைரியத்துடன் முகம் கொடுக்க வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டே இந்த முன் னெச்சரிக்கை ஒத்திகையை இன்று நட த்துவதாக கூறிய மேஜர் ஜெனரல் காமினி ஹெட்டியாராச்சி, தேசிய பாது காப்பு தினமான டிசம்பர் 26 ஆம் திகதி இந்த ஒத்திகையை 11 மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.

பூகம்பம் இடம்பெற்று சுனாமி ஏற்படக் கூடிய ஆபத்து இருப்பதாகக் கொண்டே இன்று 29 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு எமது ஒத்திகை நிகழ்வை ஆரம்பிக்கவுள்ளோம். அனர்த்த முகாமைத்துவ நிலையங்களுக்கூடாக குறித்த 06 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அதனூடாக பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் அங்கிருந்து கிராம சேவகர் பிரிவுகளினூடாக பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்கப்படும். சுமார் ஒரு மணித்தியாலத்துக்குள் மக்களை பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்வதே இச்செயற்பாட்டின் பிரதான நோக்கமெனவும் அவர் கூறினார்.

தொலைபேசி, குறுந்தகவல், மின்னஞ்சல், தொலைபண்ணி ஆகியவற்றினூடாக நாளை குறித்த ஆறு மாவட்டத்துக்கும் இது தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல் அனுப்பி வைக்கப்படும்.

கொழும்பில் லுனாவை, காலியில் பெரலிய, அம்பாந்தோட்டையில் பட்டஅத்த தெற்கு, அம்பாறையில் சாய்ந்தமருது, மட்டக்களப்பில் கல்குடா, திருகோணமலையில் நிலாவெளி ஆகிய பிரிவுகளிலேயே சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை இன்று நடத்தப்படும்.

இதற்கு முன்னர் இரு தடவைகள் இது போன்ற ஒத்திகை நிகழ்வுகளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
THURSDAY, OCTOBER 29, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, October 27, 2009

மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அரசு மறுப்பு



ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் காங்கிரஸ¤க்கு சமர்ப்பித்திருக்கும் அறிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் அறிக்கை சமர்பிக்க வேண்டுமென அதன் பேச்சாளர் வெளியிட்டுள்ள கருத்தை இலங்கை அரசாங்கம் வன்மையாக மறுப்பதாக மனித உரிமைகளுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிக ராலயத்திற்கு மனித உரிமைகள் தவிர்ந்த ஏனைய விடயங்களில் தலையிடுவதற்கு எவ்வித உரிமையும் இல்லையென அதன் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளைக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் எனவும் அமைச்சர் கூறினார். ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பில் 192 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இவர்கள் அனைத்து நாடுகளுக்கும் சேவை செய்வதை விடுத்து எப்போதும் ஒரு பிராந்தியத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருவது தவறு. ஏனைய அங்கத்துவ நாடுகளின் ஒத்துழைப்புடன் இதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளோமெனவும் அமைச்சர் சமரசிங்க நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். இதேவேளை வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்த 2 இலட்சத்து 88 ஆயிரம் பேருள் தற்போது ஒரு இலட்சத்து 96 ஆயிரத்து 88 பேரே தங்கியிருப்பதாகவும் ஏனையோர் மீளக் குடியமர்த்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

யாழ். நிவாரணக் கிராமங்களில் 6, 896 பேரும் மன்னார் நிவாரணக் கிராமங்களில் 1,590 பேரும் திருகோணமலை நிவாரணக் கிராமங்களில் 6,405 பேரும், ஆறு வைத்தியசாலைகளில் 1,626 பேரும் தங்கியிருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். கண்ணிவெடியகற்றும் பணிகளை துரிதப்படுத்துவதற்காக புதிதாக ஆயிரம் இராணுவ வீரர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கண்ணிவெடியகற்றும் 14 இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் இரு வாரத்தினுள் மேலும் 10 இயந்திரங்கள் கொண்டு வரப்படவுள்ளன. இவற்றுள் 05 ஐ. நா நன்கொடையாக வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
TUESDAY, OCTOBER 27, 2009 லக்ஷ்மி பரசுராமன்

அமெ. இராஜாங்க திணைக்களம் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக ஆராய சுயாதீன குழு: ஒருவாரத்துக்குள் ஜனாதிபதியால் நியமனம்



ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களம், அதன் காங்கிரஸ¤க்கு சமர்ப்பித்திருக்கும் அறிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி விரைவில் அறிவிக்கவுள்ளார். இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை தொடர்பாக ஆராயவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஒரு வார காலப் பகுதிக்குள் சுயாதீனக் குழுவொன்றை நியமிக்கவிருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார். காங்கிரஸ¤க்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையில், இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப் பகுதிக்குள் இடம் பெற்ற சம்பவங்களில் எந்தவொரு இடத்திலும் போர் விதிகளை மீறியமைக்கான ஆதாரபூர்வமான சாட்சிகள் இல்லையெனவும் அவை சட்ட ரீதியாக நிரூபிக்கப்பட வில்லையெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு இந்த அறிக்கை சாதகமாக அமைந்த போதிலும் இதனை பகடைக்காயாக உபயோகித்து சில அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புக்களும் அரசியல் இலாபம் தேட முனைத்துள்ளன.

இவ்வாறான அமைப்புக்களுக்கும் கட்சிகளுக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையிலேயே ஜனாதிபதியினால் மேற்படி அறிக்கை தொடர்பாக ஆராயவென சுயாதீனக் குழு நியமிக்கப்படவுள்ளது. இக்குழு பக்கச் சார்பற்ற முறையில் அதனை ஆராய்ந்து ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்.

குழு முன்வைக்கும் அறிக்கையின் பிரகாரம் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு ஜனாதிபதியி னால் விரைவில் அறிவிக்கப்படும்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இம் மாநாட்டில் அமைச்சருடன் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, ஜெனீவாவின் முன்னாள் உயர்ஸ்தானிகரும் புதுடில்லியின் புதிய உயர்ஸ்தானிகராக பதவியேற்க விருப்பவருமான பிரசாத் காரியவசம் உள்ளிட்ட ஐவர் கலந்து கொண்டனர்.
அறிக்கையின் முன்பக்க அட்டையில் “காங்கிரஸ¤க்கு சம்பவங்கள் தொடர்பான அறிக்கை” என்று தான் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் போர் குற்றங்கள் தொடர்பாக விபரிக்கப்படவில்லை.
இதன் மூன்றாம் பக்கத்தில் இலங்கையில் போர் குற்றங்கள் இடம்பெற்றதற்கான எந்த சாட்சியங்களும் இல்லையென தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் வெளியிட்ட தவறான கருத்துக்களை அடிப்படையாக வைத்தே காங்கிரஸ் இலங்கையில் போர்க் குற்றம் இடம் பெற்றிருப்பதாக விவாதத்தினை முன்னெடுத்திருக்க வேண்டுமெனவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறினார்.
சர்வதேச யுத்த நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த வேண்டுமென்பதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட சதியின் விளைவாகவே காங்கிரஸ¤க்கு இலங்கை அரசாங்கம் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இலங்கை மீது மட்டுமன்றி ஈராக், ஜோர்டான், பாகிஸ்தான், மெக்சிக்கோ உள்ளிட்ட பல நாடுகள் குறித்தும் காங்கிரஸ், இராஜாங்க திணைக்களத்திடம் அறிக்கை கோரியுள்ளதெனவும் அமைச்சர் சமரசிங்க கூறினார்.
TUESDAY, OCTOBER 27, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Monday, October 26, 2009

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகை



ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி வி லெவ்ரோ இன்று (26) திங்கட்கிழமை இலங்கை வருகிறார்.

குறுகிய கால விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

மேலும் இரு நாடுகளுக்குமிடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவுடன் இரு தரப்பு சந்திப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

இலங்கை, ரஷ்யா ஆகிய நாடுகளிடையே சட்டவிரோத ஆட்கடத்தல் போதைவஸ்து துஷ்பிரயோகம் ஆகியவற்றை தடுக்கும் பொருட்டு அமைச்சர்களான போகொல்லாகம, லெவ்ரோ ஆகியோரிடையே ஒப்ப ந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இதேவேளை இயற்கை அனர்த் தத்திலிருந்து பாதுகாத்தல், அவ் வாறான சூழ்நிலையின்போது அதனை ஆற்றுப்படுத் தல் என்பன தொடர்பாக இரு நாடுகளுக்கு மிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமெனவும் அமைச்சின் அதிகாரியொருவர் தெரி வித்தார்.
MONDAY, OCTOBER 26, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Friday, October 23, 2009

ஜனாதிபதி மஹிந்தவுக்கு மகத்தான வரவேற்பு:வியட்நாம் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்ய இணக்கம்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் அழைப்பை ஏற்றுக் கொண்ட வியட்நாம் ஜனாதிபதி நுயன் மின் ட்ரயட், இலங்கைக்கு விஜயம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற் கொண்டு வியட்நாம் சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டு ஜனாதிபதியை இலங்கை நேரப்படி நேற்று மாலை சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்தினார். இதன்போதே இந்த அழைப்பு முன் வைக்கப்பட்டது.

இச்சந்திப்பின்போது இரு அரசாங் கங்களுக்குமிடையில் முக்கிய பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. குற்றச்செயல்களை தடுத்தல், இரு நாடுகளினதும் பிராந்தியங்களினதும் பாதுகாப்பை பலப்படுதல் தொடர்பான ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கைச்சாத்திட்டன.

இரு தரப்பு சந்திப்பின்போது ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ, தென் கிழக்காசிய நாடுகளில் வியட்நாம் பொருளாதாரத்துறையில் பெரும் வளர்ச்சியடைந்து வருவதாக அந் நாட்டு ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளினதும் இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்தும் வகை யில் விசாயம் மற்றும் மீன்பிடித்துறை குறித்தும் இச்சந்திப்பின்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் யுத்தம் முடிவடைந்ததுடன் நாட்டில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கான சந்தர்ப்பம் அதிகரித்திருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பயங்கரவாதத்தை தோற்கடித்தமை க்காக இலங்கை ஜனாதிபதியை வியட்நாம் ஜனாதிபதி பாராட்டியதுடன் இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பாகவும் கூடிய கவ னம் செலுத்தியுள்ளார்.
FRIDAY, OCTOBER 23, 2009 லக்ஷ்மி பரசுராமன்

வறுமைக் கோட்டுக்குள் வாழ்வோரின் தொழிலை மேம்படுத்த உலகவங்கி ரூ.8.6 பில்லியன் உதவி


நாட்டில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களின் வாழ்வாதார தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் 8.6 பில்லியன் இலங்கை ரூபாவினை வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது.

செயற்படுத்தப்பட்டு வரும் சமுதாய அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிலை முன்னேற்றும் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளுக்காக இந்நிதி பயன்படுத்தப்படுமென நிதி, திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இச் செயற்திட்டத்தின் மூலம் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 800 பின்தங்கிய கிராமங்களிலுள்ள ஒரு மில்லியன் மக்கள் நன்மையடையவுள்ளனர். இதற்கான ஒப்பந்தம் நேற்று நிதி, திட்டமிடல் அமைச்சில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.

அரசாங்கத் தரப்பில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தரவும் உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் நாக் கோ இஷியும் இதில் கையொப்பமிட்டனர்.

உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் பதுள்ளை, மொனராகலை, அம்பாந் தோட்டை, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களை இலக்கு வைத்து இச்செயற்திட்டம் அமுல்படுத்தப்படும்.

இதன் பிரதான நோக்கம் கிராம அபிவிருத்தி, கிராமங்களுக்கிடையிலான தொடர்பை அபிவிருத்தி செய்தல், வாழ் க்கைத் தொழிலை முன்னேற்றல் என்ப னவாகும். தேச நிர்மாண மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கெமிதிரிய மன்றம், சமுர்த்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் இணைந்து இத்திட்டத்தை செயற்படுத்தவுள்ளது.
FRIDAY, OCTOBER 23, 2009 லஷ்மி பரசுராமன்

புலிகளின் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இரண்டு மீட்பு



புலிகள் தமது பயங்கரவாத செயற்பாடுகளுக்காக பயன்படுத்திய விமான எதிர்ப்பு ஏவுகணைகளான இரண்டு சேம் மிசைல்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தின் 8வது செயலணியின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவே புதுக்குடியிருப்பு இரணைப்பாளை எனும் இடத்திலிருந்து நேற்று இரண்டு விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் மீட்கப்பட்டுள்ளன.

புலிகள் தம்மிடமிருந்த அதிசக்தி வாய்ந்த ஏவுகணைகளைக் கொண்டு கடந்த காலங்களில் விமாப் படையினரின் விமானங்களை இலக்கு வைத்து பல்வேறு பயங்கரவாதச் செயற்பாடுகளை நடத்தியமையையும் பிரிகேடியர் நாணயக்கார சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அப்பகுதியிலிருந்து எம்.பி.எம்.ஜி உள்ளடக்கப்பட்ட ஒரு பீப்பாயும் 240 லீற்றர் மண்ணெண்ணெய் கொண்ட 10 பீப்பாய்களும், பல்வேறு வகையான மோட்டார் குண்டுகளும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இராணுவத்தின் 8வது செயலணியின் படைத் தளபதியான ரவிப்பிரிய லியனகே தலைமையிலான புலனாய்வுப் பிரிவினரே நேற்று இவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
FRIDAY, OCTOBER 23, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, October 13, 2009

உலக பேரழிவு குறைப்பு தினம்:மட்டு, அம்பாந்தோட்டையில் நாளை சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி


உலக பேரழிவு குறைப்பு தினத்தை முன்னிட்டு அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நாளை 14 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சிகள் நடத்தப்படவுள்ளன.

இந்து சமுத்திரத்தின் அரசாங்கங்களுக் கிடையிலான சுனாமி எச்சரிக்கை இணைப்புக்குழு இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
அன்றைய தினம் இந்து சமுத்திரத்தின் 15 நாடுகளில் இந்த சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

“சுனாமி பேரனர்த்தம் இடம்பெறு மாயின் அதனால் ஏற்படக்கூடிய பேரழிவிலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான முன் ஏற்பாடுகளை கற்பிப்பதற்காகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவுமே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது.

சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு இது நடத்தப்படவுள்ளது.
TUESDAY, OCTOBER 13, 2009 லக்ஷ்மி பரசுராமன்

புலிகளுக்கு தகவல் வழங்கிய நபர் கைது; படகும் மீட்பு


கொழும்புத் துறைமுகம் மற்றும் கடற்பரப்பின் நிலைமைகள் குறித்து புலிகளுக்கு தகவல் வழங்கி வந்த நபர் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.
TUESDAY, OCTOBER 13, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Friday, October 9, 2009

தென் மா. ச. தேர்தல் நாளை; சகல ஏற்பாடுகளும் பூர்த்தி




தென்மாகாண சபைத் தேர்தல் நாளை (10) நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்தல் நடைபெறும் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டுள்ளன. நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்கெடுப்பு நடத்தப்படும்.

தேர்தல் மோசடிகள் இடம்பெறும் பட்சத்தில் உடனடியாக அப்பகுதிக்கான தேர்தல் ரத்துச் செய்யப்பட்டு பிறிதொரு தினத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்படுமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க கூறினார்.

மூன்று மாவட்டங்களிலும் 17 இலட்சத்து 61 ஆயிரத்து 859 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 670 வாக்குச்சாவடிகள் அமைக்கப் படுவதுடன் 161 நிலையங்களில் வாக்குகள் கணக்கெடுக்கப்ப டவுள்ளன.
FRIDAY, OCTOBER 09, 2009 லக்ஷ்மி பரசுராமன்

இரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து: 3 பலி; 19 பேர் காயம்


காலி மாவட்டத்திலுள்ள கொஸ்கொடையில் நேற்று அதிகாலை இரண்டு பஸ் வண்டிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மூவர் உயிரிழந்திருப்பதுடன் 19 பேர் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து காலி நோக்கிச் சென்ற தனியார் பயணிகள் பஸ்ஸ¤ம் காலியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த இபோச பஸ்ஸ¤ம் ஒன்றுடனொன்று மோதியுள்ளன. விபத்தில் தனியார் பஸ்ஸின் சாரதி உட்பட மூவர் உயிரிழந்திருப்பதுடன்.

இரண்டு பஸ்களிலும் பயணித்தவர்களுள் 19 பேர் காயமடை ந்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். கொல்லப்பட்ட மூவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளனர். காயமடைந் தவர்கள் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுல்லானர்
FRIDAY, OCTOBER 09, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Thursday, October 8, 2009

தேர்தலுக்கு குந்தகம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை:தேர்தல்கள் ஆணையர்




தென்மாகாணத்தில் நாளை மறுதினம் 10ஆம் திகதி நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலின்போது வாக்குச்சாவடியி லிருந்து 500 மீற்றருக்கு உட்பட்ட பகுதியில் கட்சி ஆதரவாளர்களோ பொதுமக்களோ குழப்பங்களை உண்டுபண்ணக் கூடாது.

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குறிப்பிட்ட பகுதியில் ஏதேனும் அசம்பாவி தங்கள் இடம்பெறின் உடனடியாக அங்கு தேர்தல் ரத்துச் செய்யப்பட்டு பிறிதொரு தினத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்படுவது உறுதியென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸா நாயக்க தெரிவித்தார்.

வாக்காளர் அட்டையை பலவந்தமாக பறித்தல், குறித்த நபருக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தல் உள்ளிட்ட தேர்தலுக்கு குந்தகம் ஏற்படுத்தும் பல்வேறு சம்பவங்கள் இதன் போது கருத்திற்கொள்ளப்படும்.
இம்முறை வாக்களிப்பு நிலையம் மாத் திரமன்றி அதனைச் சூழவுள்ள 500 மீற்றர் வரையான சூழலும் தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்காக பொறுப்பாக் கப்பட்டுள்ளது. 500 மீற்றருக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் வன்முறைகள் இடம் பெறுமாயின் உடனடியாக அங்கு தேர்தல் ரத்துச் செய்யப்பட்டு பிறிதொரு தினத்தில் மீளநடத்தப்படுமெனவும் ஆணையாளர் கூறினார்.

இதேவேளை, வாக்குப்பெட்டிக்குள் தேர்தல் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்ப டுத்தும் வகையில் வாக்குச் சீட்டுக்கள் காணப்படுமாயினும் அச்சாவடிக்குரிய தேர்தலை உடனடியாக ரத்துச் செய்து பிறிதொரு தினத்தில் நடத்துமாறும் நான் உத்தரவிட்டுள்ளேன் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் நேற்றுமாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.

வடமேல் மாகாண சபைத் தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தில் நாயக் கர்சேனையில் கிடைக்கப்பெற்ற வாக்குப் பெட்டியில் நான்கைந்து வாக்குச் சீட்டு க்கள் ஒன்றாக மடித்து போடப்பட்டிருந்தன.

இதனையடுத்து நாம் உடனடியாக அப் பகுதிக்கான தேர்தலை ரத்துச் செய்தோம். அதுபோன்று வாக்குப் பெட்டிகளுக்குள் எமக்கு ஏதேனும் சந்தேகம் நிலவுமாயின் மறுபேச்சுக்கு இடமின்றி தேர்தல் ரத்துச் செய்யப்பட்டு பிறிதொரு தினத்தில் நடத்தப்படும் என்றும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.
THURSDAY, OCTOBER 08, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Tuesday, October 6, 2009

பருவப்பெயர்ச்சி மழையின் பாதிப்பை நிவாரண கிராமங்களில் தவிர்க்க திட்டம்: வடிகாலமைப்பு, சுகாதார வேலைத் திட்டம் 80 வீதம் பூர்த்தி


வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்கள் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாவண்ணம் முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதார மற்றும் உட்கட்டமைப்பு வேலைத் திட்டங்கள் 80 சதவீதம் பூர்த்தியடைந்திருப்பதாக இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்கள் அமைக்கப்பட்டிருக்கும் வவுனியாவில் அனைத்து வலயங்களிலும் பாதுகாப்பான முறையில் வடிகாலமைக்கும் வேலைத் திட்டங்கள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் 10 நாட்களுக்குள் இத்திட்டத்தின் பணிகள் முழுமையாக பூரணப்படுத்தப்படுமெனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

வன்னியில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின்போது இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தோரில், மீளக்குடியமர்த்தப்பட்டோர் மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டோர் தவிர்ந்த தற்போது தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருக்கும் 2 இலட்சத்து 88 ஆயிரத்து 679 பேரினதும் சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் இச் செயற்திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் சமரசிங்க சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இம்மாதம் இறுதி முதல் எதிர்வரும் டிசம்பர் வரையான காலப் பகுதியில் வவுனியாவில் பருவப் பெயர்ச்சி மழை எதிர்பார்க்கப்படுவது வழமை.

இம்மழைக்கு முகம் கொடுக்க கூடிய வகையில் வேலைத் திட்டங்கள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கை அரசாங்கத்தின் இந்த வேலைத் திட்டங்கள் ஐ.நா. அமைப்புக்களின் அனுசரணையுடன் நடைபெற்று வருகின்றன.

வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் மீள்குடியேற்றம் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் இதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

மழைகாலத்தின்போது நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்கள் பாரிய அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அவ்வாறானதொரு சூழ்நிலையை தவிர்க்கும் முகமாகவே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

மழையினால் ஏற்படக் கூடிய அசாதாரண சூழ்நிலைகளை தவிர்க்கும் முகமாக அநேகமான வேலைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

வவுனியா வலையம் 01 இல் 95 சதவீதமான வேலைத் திட்டம் பூர்த்தியாகியிருப்பதாகவும் வலையம் 02 இல் 100 சதவீதமும் வலையம் 03 இல் 80 சதவீதமும் வலையம் 04 இல் 80 சதவீதமும் வலையம் 05 இல் 90 சதவீதமும் வலையம் 06 ‘எ’ யில் 40 சதவீதமும் வலையம் 06 ‘பி’ யில் 50 சதவீதமும், வலையம் 08 இல் சுமார் 70 சதவீதமான வேலையும் பூர்த்தியடைந்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். வலையம் ‘0’ மற்றும் வலையில் 07 இல் வேலைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
TUESDAY, OCTOBER 06, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Monday, October 5, 2009

குருநாகலில் வாகனமொன்றில் பெருந்தொகை ஆயுதங்கள்


பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று வாகனமொன்றிலி ருந்து பெருந்தொகையான அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டிரு ப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

குருநாகல் மாஸ்பொத்த பகுதியில் வைத்து 56-9968 என்ற இலக்கம் கொண்ட வான் ஒன்றிலிருந்தே சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டு, இலத்திரனியல் டெட்டனேட்டர்கள், கிரனைட்டுகள், ரவைகள் உள்ளிட்ட பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

குறித்த வாகனத்திலிருந்து நேற்று 340 - ரி56 ரவைகளும், 5 கிலோ கிராம் நிறை கொண்ட ஆறு கிளேமோர் மைன்கள், 04 - ரி-56 தோட்டாக்களும், 100 - இலத்திரனியல் டெட்டனேட்டர்களும், 288-9 மில்லி மீற்றர் ரவைகளும், 02 - ரிமோட் கருவிகளும், 06 - 9 வோல்ற் பற்றரிகளும், 06 கிளேமோர் குண்டு பொருத்திகளும், மைக்ரோ பிஸ்டல் ஒன்றும், 50 மீற்றர் டெட்டனேட்டர் கோர்ட்டும், 06 - கிரனேற் கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.
MONDAY, OCTOBER 05, 2009 லக்ஷ்மி பரசுராமன்)

வெளிநாடுகளுக்கு படகு மூலம் ஆட்களை அனுப்பிய மூவர் கைது




வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக படகுகள் மூலம் ஆட்களை அனுப்பி வந்ததாகக் கூறப்படும் மூவர் நேற்று கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே சிலாபத்தில் வைத்து இம் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.
MONDAY, OCTOBER 05, 2009 லக்ஷ்மி பரசுராமன்

கிளிநொச்சி இராணுவ தலைமை வளவுக்குள் இடம்பெற்றது விபத்தே


கிளிநொச்சியில் நேற்றுக்காலை இராணுவ தலைமை அலுவலக வளவுக்குள் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவம் ஒரு விபத்தென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.

புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட அதிசக்தி வாந்த வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்த கன்டேனர் வாகனத்தில் திடீரென ஏற்பட்ட தீயினாலேயே இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றி ருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிளிநொச்சியிலுள்ள இராணுவத்தின் 58 ஆம் படைப்பிரிவினரின் தலைமை அலுவலக வளவுக்குள் நேற்றுக்காலை இவ் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது.

இது ஒரு விபத்தெனவும் இதனால் எந்தவொரு உயிர் ஆபத்தோ சேதமோ ஏற்படவில்லையெனவும் பிரிகேடியர் மேலும் கூறினார்.
MONDAY, OCTOBER 05, 2009 லக்ஷ்மி பரசுராமன்

தொப்பிகல காட்டுக்குள் ஆயுதங்கள் மீட்பு


பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கும் புலி உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலையடுத்து நேற்று பெருந் தொகையான ஆயுதங்களும் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு, நரக்கமுல்ல, தொப்பிகலை பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதிக்குள்ளிருந்தே இவை மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 91 – ரி 56 ரக துப்பாக்கிகள், 10 – ரி-56 துப்பாக்கிக்கான தோட்டாக்கள், 1360 கண்ணி வெடிகள், 56 கிலோ கிராம் நிறைகொண்ட சி 4 வெடிப் பொருட்கள் ஆகியனவே மீட்கப்பட்டுள்ளன.
வவுனியா பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரே இப் புலி சந்தேக நபரை கைது செய்ததுடன் அவர் வழங்கிய தகவல் களுக்கமைய ஆயுதங்கள் மற்றும் வெடிப் பொருட்களை கைப்பற்றியிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்

MONDAY, OCTOBER 05, 2009 லக்ஷ்மி பரசுராமன்

379 குடும்பங்களை வவுனியாவில் மீளக்குடியமர்த்த துரித நடவடிக்கை



வவுனியா மாவட்டம் சாளம்பைக் குளத்தில் 379 குடும்பங்களை உடனடியாக மீளக்குடியமர்த்துவதற்குத் தேவையான அத்தியாவசிய நடவடிக்கைகளை துரிதகதியில் முன்னெடுக்குமாறு மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சாளம்பைக் குளத்திலிருந்து கடந்த 90 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த 400 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள இக்கிரிகொல்லாவை என்ற இடத்தில் தற்காலிகமாக தங்கி வாழ்கின்றனர்.
இவர்களுள் முதற்கட்டமாக 21 குடும்பங்கள் அண்மையில் சாளம்பைக் குளத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டனர். இக்கிரிகொல்லாவையில் தங்கியிருக்கும் ஏனைய 379 குடும்பங்களையும் அடுத்த மாதத்திற்கு முன்னதாக அவர்களது சொந்த இடத்தில் மீளக்குடியமர்த்துவதே அமைச்சரின் விருப்பமாகும். அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் முகமாக அமைச்சர் தலைமையில் விசேட கூட்டமொன்று கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருஞானசம்பந்தர், பிரதேச செயலாளர், பொலிஸ் அதிகாரிகள் உட்பட மீள்குடியேற்றத்துடன் சம்பந்தப்பட்ட பல அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
இதேவேளை இக்கிரிகொல்லாவையில் தற்போது இடம்பெயர்ந்து வசித்து வரும் மக்கள் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று முதல் தடவையாக தமது சொந்த இடமான சாளம்பைக்குளத்துக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தின்போது சாளம்பைக்குளத்திலிருக்கும் 10 குடிதண்ணீர் கிணறுகளையும் சுத்திகரிக்குமாறும் மின்சார மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்துமாறும் அமைச்சர் ரிசாட் மேலதிக அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
MONDAY, OCTOBER 05, 2009 லக்ஷ்மி பரசுராமன்