Thursday, April 15, 2010

30 வருடங்களின் பின் நாடளாவிய ரீதியில் அமர்க்களமாக நடந்த புத்தாண்டு கொண்டாட்டம்:நிவாரண கிராமங்கள் மற்றும் புனர்வாழ்வு நிலையங்களிலும் குதூகலம்



பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டதை யடுத்து 30 வருடங்களுக்குப் பின்னர் நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த தமிழ், சிங்கள மக்கள் எவ்வித அச்சமும் இன்றி இம்முறை வெகு அமர்க்களமாக புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டதைக் காணமுடிந்தது.

நிவாரணக் கிராமங்கள் மற்றும் புனர்வாழ்வு நிலையங்களில் புத்தாண்டு குதூகலங்கள் இடம்பெற்றன. இவர்களி டையே புத்தாடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன. இதனைத் தவிர மலையகம் மற்றும் வடமாகாணத்திலும் மக்கள் அமைதியாகவும் சிறப்பாகவும் புத்தாண்டு கொண்டாட்ட ங்களில் ஈடுபட்டனர்.

விகிர்தி வருடப் பிறப்பை முன்னிட்டு நாள்ளிரவு முதல் அதிகாலை வரை பட்டாசுச் சத்தம் கேட்டது. கோயில்களிலும் விகாரைகளிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மக்கள் புத்தாடை அணிந்து பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

ஒருவருக்கொருவர் பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிக் கொண்டதுடன் உணவு, சிற்றுண்டி ஆகியவை அயலவர்களிடையே பரிமாறப்பட்டன.

புதுவருடம் பிறந்ததையடுத்து நேற்றைய தினமே கைவிசேடம் வழங்குவதற்கான சுபவேளை ஆரம்பமாகியிருந்தது. பெரியவர்களிடம் ஆசிர்வாதம் மற்றும் கைவிசேடம் பெற்றுக் கொண்டதுடன் பலர் தமது குடும்பத்தாருடன் உற்றார், உறவினர்களின் வீடுகளுக்கு சென்று வந்தனர்.

கொழும்பிலும் ஏனைய பிரதான நகரங்களிலுமுள்ள பெரும்பாலான அரச மற்றும் தனியார் வங்கிகளில் தமிழ், சிங்கள புத்தாண்டு கொடுக்கல் வாங்கல் களை கட்டியிருந்தது. அன்றைய தினம் பணத்தை வைப்புச் செய்வோருக்காக விசேட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. கடந்த காலங்களை விட இம்முறை அதிகமான வாடிக்கையாளர்களை வங்கிகளில் காணமுடிந்தது.

தமிழ், சிங்கள பாரம்பரிய கலா சார நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் விளை யாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட் டன. நாட்டின் பல இடங்களில் விசேட இசை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

நேற்று 15ம் திகதி எண்ணெய் தேய்க்கும் தினமாக அமைந்தது- தேசிய எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு இம்முறை திஸ்ஸமஹாராமவிலுள்ள விகாரையொன்றில் நடத்தப்பட்டது.

சித்திரைப் புதுவருடப் பிறப்பையடுத்து நேற்றைய தினம் வீதியெங்கும் வெறிச்சோடிக் காணப்பட்டதுடன் அரச அலுவலகங்களில் உத்தியோகத்தர்களின் வரவு கணிசமான அளவு குறைந்திருந்தது. சந்தைகள், பஸ் வண்டிகள், வங்கிகள் அலுவலகங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்ததை காணமுடிந்தது.

புதுவருடத்தினை வடமாகாண மக்கள் குதூகலமாக வரவேற்றனர்.
பூநகரியில் கடந்த 30 வருடங்களுக்குப் பின்னர் முதற்தடவையாக கடந்த புதன்கிழமை சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இராணுவத்தின் 66 வது படையணியினர் இந்த வைபவத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.

புதுவருட தினம் வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலய தேர்த்திருவிழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையில் புதுவருடத்தை முன்னிட்டு அதன் முகாமையாளர் .சீ. கியாஸ்தீன் தலைமையில் நடத்தப்பட்ட விசேட கொடுக்கல், வாங்கல் நிகழ்வுகளில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
FRIDAY, APRIL 16, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment