Monday, February 1, 2010

62வது சுதந்திர தின கொண்டாட்ட ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி:தலதா மாளிகையிலிருந்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை



இலங்கையின் 62வது சுதந்திர தினத்தை கண்டியில் வெகுவிமர்சையாக கொண் டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு மேற்கொண்டு வருவதாக அதன் செயலாளர் டி. திசாநாயக்க தெரிவித்தார்.

சுதந்திர தின வைபவம் திட்டமிட்டபடி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வுகள், தேசத்தின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களுக்கான இரண்டு நிமிட மெளன அஞ்சலியுடன் ஆரம்பமாகுமெனவும் அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்காக உரையாற்றுவார். நிகழ்வில் 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படும்.

சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர, சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்கு பண்டார, மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரும் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

இம்முறை சுதந்திர தினக் கொண்டாட்டம் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகாமையிலுள்ள வளாகத்தில் நடத்தப்படவுள்ளது.

மூன்று தசாப்த காலமாக நிலவி வந்த புலி பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாட்டின் சிறந்த தலைமைத்துவம் பதவியிலிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இந்த சுதந்திர தினங்கள் கொண்டாடப்படுகின்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக பதவியேற்று பின்னர் கலந்து கொள்ளவிருக்கும் முக்கியமான தேசிய நிகழ்வு இதுவாகும். அதனால் இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தை வெகுவிமர்சையாக கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ தலதா புனித ஸ்தலத்திலிருந்து மக்களுக்கு உரையாற்றவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
MondAY, February 01, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment