Monday, November 9, 2009

சு. க. வின் 19வது தேசிய மாநாட்டில் 15 நாடுகளின் பிரதிநிதிகள்



“சூழ்ச்சிகளை முறியடித்து நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதியுடன் கைகோர்ப்போம்” எனும் தொனிப் பொருளிலேயே இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு நடத்தப்படவிருப்பதாக மேல் மாகாண ஆளுநரும், சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவருமான அலவி மெளலான தெரிவித்தார்.

கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி தேசிய மாநாட்டை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சி ஏற்பாட்டாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 19வது தேசிய மாநாடாகும். மூன்று மணியளவில் ஆரம்பமாக விருக்கும் இந்த மாநாட்டிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குவார்.

இந்த மாநாட்டில் அரசாங்கத்தின் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கான கொள்கை அறிக்கை வெளியிடப்படுவதோடு, தேர்தல்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பும் வெளியிடப்படுமென சு.க. வட்டாரங்கள் தெரிவித்தன. நாடு முழுவதிலுமிருந்து சு.க. கிளைகளின் பிரதிநிதிகள், சு.க. அமைப்பாளர்கள், ஐ.ம.சு.மு. வில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றுவார்கள்.

சு.க. வின் தேசிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனா, இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் பத்துக்கு மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்வதெனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்தார். சு.க. வின் அழைப்பையேற்று பிரிட்டிஷ் கன்சர்வேட்டிக் கட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பங்குபற்றுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்களெனத் தெரியவருகிறது.
MONDAY, NOVEMBER 09, 2009 லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment