Saturday, August 8, 2009

ஊவா, யாழ்., வவுனியாவில் இன்று தேர்தல்

ஊவா மாகாண சபை, யாழ்ப்பாணம் மாநகர சபை, வவுனியா நகர சபை ஆகியவற்றுக்கான தேர்தல்கள் இன்று (08) நடைபெறுகின்றன.
வாக்கெடுப்பு இன்று காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை நடைபெறும். முதலாவது முடிவு நள்ளிரவுக்குப் பின்னர் வெளிவரும் எனத் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் இம்முறை வாக்களிப்பதற்கு எட்டு இலட்சத்து 75 ஆயிரத்து 456 பேர் தகுதிபெற்றுள்ளனர். 23 கட்சிகளிலும், ஏழு சுயாதீனக் குழுக்களிலுமாக 600 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இவர்களுள் 30 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இங்கு 814 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தில் 5 இலட்சத்து 74 ஆயிரத்து 814 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளார்கள். 14 கட்சிகளிலும் நான்கு சுயேச்சைக் குழுக்களிலுமாகப் போட்டியிடும் 432 வேட்பாளர்களுள் 21 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். மொனறாகலை மாவட்டத்தில் 3 இலட்சத்து 642 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். நான்கு கட்சிகளிலும், இரண்டு சுயேச்சைக் குழுக்களிலுமாகப் போட்டியிடும் 168 வேட்பாளர்களில் 11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தல் கடந்த 12 வருடங்களுக்குப் பின்னர் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் வாக்களிக்க ஒரு இலட்சத்து 412 பேர் தகுதிபெற்றுள்ளனர். நான்கு கட்சிகளிலும் இரண்டு சுயேச்சைக் குழுக்களிலுமாக 174 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுள் 23 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவர்.

யாழ். மாநகர சபைத் தேர்தல் இறுதியாகக் கடந்த 1997 ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் திகதி நடைபெற்றது. இதில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட சரோஜினி யோகேஸ்வரன் மாநகர முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் 1997 மே மாதம் 17ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார். அதற்குப் பின்னர் இப்போதுதான் முதன் முறையாகத் தேர்தல் நடைபெறுகிறது.

யாழ். மாநகர சபைத் தேர்தலில் இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கென 16 வாக்குச் சாவடிகள் அடங்கலாக மொத்தம் 86 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்துக்கு வெளியில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், புத்தளம், அநுராதபுரம் ஆகிய இடங்களில் 15 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

யாழ். நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 75 பேர் வாக்களிக்க அரியாலை பார்வதி வித்தியாலயத்திலும் வாக்குச்சாவடியொன்று அமைக்கப்பட்டுள்ளது. மாநகர சபைக்கு வெளியில் இடம்பெயர்ந்த ஆறாயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் பீ. குகநாதன் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தவர்களுள் கொழும்பில் 285 பேரும், கம்பஹாவில் 871 பேரும், களுத்துறையில் 249 பேரும், புத்தளம் 4418 பேரும், அநுராதபுரத்தில் 132 பேரும் யாழ்ப்பாணத்தில் 75 பேருமாக 6030 வாக்காளர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 4978 பேர் மட்டுமே வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.
வவுனியா நகர சபைக்கான தேர்தல் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறுகிறது. இந்தத் தடவை இங்கு வாக்களிக்கவென 24 ஆயிரத்து 624 பேர் தகுதிபெற்றுள்ளதாக வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி தெரிவித்தார். 6 அரசியல் கட்சிகளிலும், 3 சுயேச்சைக் குழுக்களிலுமாக 135 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில் 11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். தேர்தல் பணிகளுக்கென 638 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைதியான தேர்தலை நடத்துவதற்காக தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஊவா, யாழ்ப்பாணம், வவுனியாவில் எவ்வித பதற்றமும் இன்றி மிகவும் சுமுகமான நிலைமை காணப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மூன்று இடங்களிலும் சுமுகமான நிலை இருப்பதால் நீதி, நேர்மையான தேர்தல் நடைபெறுமென தான் நம்புவதாக அவர் கூறினார்.
கடந்த கால தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இம்முறை வன்முறைகள் மிகவும் குறைவாக இருக்கிறதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்கென 638 அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.SATURDAY, AUGUST 08, 2009(விசு கருணாநிதி, லக்ஷ்மி பரசுராமன்)

No comments:

Post a Comment