
இதேவேளை மன்னாரில் மாந்தை மேற்கு, மடுவின் சில பகுதிகளில் தற்போதும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய இரு பிரதேச செயலாளர் பிரிவுகளையும் சேர்ந்தவர்களை மடுவில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பிரதேசமொன்றினுள் சிறிது காலத்திற்கு தற்காலிகமாக மீளக்குடியமர்த்த தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
மெனிக்பாம் நிவாரண கிராமத்தில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் யாழ்ப்பாணத்தில் மிதிவெடியகற்றப்பட்ட இடங்களைச் சேர்ந்தவர்கள் எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதிக்குள் தமது சொத்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.
நிவாரணக் கிராமங்களிலிருக்கும் யாழ்ப்பாணத்தின் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாத பகுதிகளை தமது சொந்த இருப்பிடங்களாக கொண்டவர்கள் அப்பணிகள் நிறைவடையும் வரை யாழ்ப்பாண நிவாரணக் கிராமங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்படுவரேனவும் அமைச்சர் றிசாட் சுட்டிக்காட்டினார்.
மேலும் மெனிக்பாம் நிவாரணக் கிராமத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களும் இருப்பதால் அவர்களையும் அதே காலப்பகுதியினுள் தமது சொந்த இடங்களுக்கு திருப்பியனுப்புவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை தத்தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித் துள்ளது.
இதற்கமைய நிவாரணக் கிராமங்களில் உள்ளோரது சொந்த இருப்பிடங்கள் பற்றிய தகவல்கள் பதியப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி, முல்லைத்தீவைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தமது சொந்த இருப்பிடம் பற்றிய சரியான தகவலை வழங்கினால், அதனை அந்தந்த மாவட்டத்தின் அரசாங்க அதிபர்கள் உடன் உறுதிப்படுத்திய பின்னர், அவர்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு திருப்பியனுப்பப்படுவரென வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் டீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.
நாட்டில் மோதல் இடம்பெற்ற வேளை ஏனைய மாவட்டங்களிலிருந்து தற்செயலாக வன்னிப் பகுதிக்குச் சென்றிருந்தவர்கள் மற்றும் பயங்கரவாதிகளிடமிருந்து தஞ்சம் கோரியிருந்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் படையினரினால் வவுனியா நிவாரணக் கிராமத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
வடக்கே மோதல் இடம்பெற்ற பகுதிகளில் நிலக்கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மெனிக்பாம் உள்ளிட்ட ஏனைய நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை எதிர்வரும் இருவார காலப்பகுதிக்குள் மீளக் குடியமர்த்த அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் றிசாட் பதியுதீன் மேலும் கூறினார்.MONDAY, AUGUST 24, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Colombo Time
Canberra Time
Berlin Time
London Time
Ontario Time
Washington Time
No comments:
Post a Comment