Tuesday, August 18, 2009

தொ.நு. கல்லூரி மாணவன் நிப்புன தாக்குதல் சம்பவம்:கைது செய்யப்பட்டுள்ள 11 பேருக்கும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியல்:3 சப் இன்ஸ்பெக்டர்கள், பொலிஸ் சார்ஜன்



மாலபே தொழில்நுட்ப கல்லூரி மாணவனான நிப்புன ராமநாயக்கவின் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல மேலதிக நீதவான் மஹதில் பிரசாந்த டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.

மாணவனின் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 03 சப் இன்ஸ்பெக்டர்கள், பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் ஏழு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உட்பட பதினொரு பேர் கைது செய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 11 பேரும் நேற்று கடுவெல நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் எஸ். எஸ். டி. வாஸ் குணவர்தனவின் மகன் ரவிந்து குணவர்தன சுகயீனம் காரணமாக பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகியிருந்த குற்றத்தடுப்புப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படுவர்.

சம்பவம் தொடர்பான முறைப்பாடு பொலிஸ் தலைமையகத்துக்கு கிடைக்கப்பெற்றதையடுத்து பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ணவின் பணிப்புரையின் பேரில் உடனடி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பிரதி பொலிஸ் மா அதிபர் சேனாநாயக்க கூறினார்.

வழக்கின்போது கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிரதான சந்தேக நபரான ரவிந்து குணவர்தனவின் உடல்நிலை தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேலதிக மாவட்ட நீதவான் நுகேகொடை மஜிஸ்ட்ரேட்டுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை மாவட்ட நீதவான், நீதிமன்ற வளாகத்தினுள் வான் ஒன்றின் மூலம் அழைத்துவரப்பட்டிருந்த பதினொரு சந்தேக நபர்களையும் பார்வையிட்டார்.

மாணவனான நிப்புன ராமநாயக்க கண்கள் கட்டப்பட்ட நிலையில் பொலிஸ் ஜீப் ஒன்றிலேயே கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கடத்திச் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர்களுள் ஒருவர் மாணவனை தனது துப்பாக்கியால் தாக்கியுள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் வாஸ் குணவர்தனவின் மகன் தனது வீட்டுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு “அம்மா கதவை திறந்து வையுங்கள். நான் உங்களுக்காக பரிசு ஒன்றை எடுத்து வருகின்றேன்” என்று தனது அம்மாவிடம் கூறியுள்ளார்.

வீட்டில் வைத்து பிரதான சந்தேக நபரின் தாயும் மேற்படி மாணவனை தாக்கியிருப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். பின்னர் சிலர் இந்த மாணவனுக்கு சித்தாலேப பூசிவிட்டுள்ளதுடன், காயப்பட்ட பகுதிகளுக்கு ஐசும் வைத்து விட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவன் மீண்டும் ஜீப்பில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பொரளை காசல் வீதி சமிக்ஞை விளக்குகளை கடந்து செல்லும்போது வண்டியின் முன்னிருக்கையில் எஸ். எஸ். பி. வாஸ் குணவர்தன அமர்த்திருப்பதை மாணவன் கண்டுள்ளான்.

காயங்களுக்குள்ளாக்கப்பட்ட மாணவன் நேரடியாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு வைத்து வாக்குமூலமொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் மாணவன் அதில் கையொப்பமிட மறுத்துள்ளார். ஏனெனில், அது அம்மாணவனினது வாக்குமூலம் கிடையாது. மாணவன் சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று நண்பகல் 12.45 மணிக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் நண்பகல் 1.30 மணியளவிலேயே அவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இந்த கடத்தல் மற்றும் தாக்குதலுடன் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்ந்த எந்தவொரு அதிகாரியும் சம்பந்தப்படவில்லையெனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் கூறினார்.

இச்சம்பவத்தையடுத்து எஸ். எஸ். பி. வாஸ் குணவர்தன உடனடியாக பொலிஸ் தலைமையகத்துக்கு பொலிஸ் மா அதிபரினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் கூறினார்.

மேலும் சேவையிலுள்ள 80 ஆயிரம் பொலிஸாரில் ஒருவர் செய்த பிழைக்காக முழு பொலிஸ் படையையும் யாரும் குறை கூறிவிட முடியாது எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.
தாக்கப்பட்ட மாணவனின் பெற்றோரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். TUESDAY, AUGUST 18, 2009 லக்ஷ்மி பரசுராமன்,

No comments:

Post a Comment