Monday, August 3, 2009

சுற்றுலாத் துறையை மேம்படுத்த சங்காய் பிரதிநிதிகள் இலங்கை வருகை

இலங்கை, சீனா ஆகில நாடுகளுக்கிடையே சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சங்காய் மாநகர சுற்றுலாப் பணியகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

சங்காய் மாநகர சுற்றுலாப் பணியகத்திலிருந்து நேற்று இலங்கை வந்திருக்கும் 10 பிரதிநிதிகளைக் கொண்ட குழு எதிர்வரும் 08 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்குமென வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இக்குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், சங்காய் மாநகர சுற்றுலாப் பணியகம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புச் சபை ஆகியவற்றுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், சீனாவில் இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையிலும் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவிருப்பதாகவும் அமைச்சின் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சங்காயிருந்து இலங்கை வந்திருக்கும் பிரதிநிதிகள் குழு சுற்றுலாத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறையுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்திப்பதுடன், கண்டி பெரஹெராவில் கலந்து கொள்வரெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சங்காய் மாநகர சுற்றுலாப் பணியகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வருகை தந்திருப்பது இதுவே முதல் தடவையாகு மெனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. (03-08-2009-லக்ஷ்மி பரசுராமன்)

No comments:

Post a Comment