Monday, March 15, 2010

வவுனியா வடக்கு;மீளக்குடியேறிய குடும்பங்களுக்கு இவ்வாரம் முதல் இலவச மின்சாரம்



வவுனியா வடக்கில் மீளக்குடியமர்த்தப் பட்டிருக்கும் குடும்பங்களுக்கு இவ்வாரம் முதல் இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்படவிருப்பதாக அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்றுத் தெரிவித்தார்.

மின்சார இணைப்பு வழங்கப்பட்டது முதல் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு இலவசமாக மின் விநியோகம் செய்யப்படுமெனவும் இதற்காக எவ்வித கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாதெனவும் அவர் தெரிவித்தார்.

வடக்கின் வசந்தம் மற்றும் கமநெகும வேலைத் திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக நிறைவு செய்யப்பட்டிருக்கும் மின் இணைப்பை பெற்றுக் கொடுக்கும் 14 செயற்திட்டங்களே இவ்வாரம் முதல் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. அதன்படி கணேசபுரம், ஓமந்தை,
நொச்சிமோட்டை, கட்டான்குளம் உள்ளிட்ட 14 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள மக்கள் இவ்வாரம் முதல் மின் இணைப்பை பெற்றுக் கொள்கின்றனர்.

இவர்களுள் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதிக்குப் பின்னர் அப்பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்டவர்களுக்கே இலவச மின் இணைப்பு வழங்கப் படுகிறது.

வவுனியா மற்றும் செட்டிக்குளம் பிர தேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட 14 கிராம சேவகர் பிரிவுகளிலும் தற்போது 500 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன. இவர்களுள் குறித்த திகதிக்கு பின்னதாக மீளக்குடியமர்த்தப்பட்டிருக்கும் சுமார் 200 குடும்பங்களே இலவச மின் இணைப்பை பெறவுள்ளன.

வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட 200 செயற் திட்டங்களுக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதில் முதற் கட்டமாக நிறைவு செய்யப்பட்டிருக்கும் 14 செயற்திட்டங்களே பொதுமக்களின் இவ்வாரம் முதல் கையளிக்கப்படவிருப்பதாகவும் அரசாங்க அதிபர் நேற்றுத் தெரிவித்தார்.
MONDAY, MARCH 15, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment