Friday, September 17, 2010

துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் கொல்லப்பட்ட விவகாரம்:5 பொலிஸ் உட்பட 9 பேர் கைது; இரு அத்தியட்சகர்கள் இடமாற்றம்


பேருவளையில் பொலிஸாருக்கும் கொள்ளைக் கோஷ்டியொன்றுக் குமிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸார் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்றது. சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் மகரகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஐந்து பொலிஸாரும் நான்கு பொது மக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் நுகேகொடை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன் மற்றும் மிரிஹானை பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் சேனாபதி ஆகியோர் நேற்று பொலிஸ் களப்பிரிவு தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

பேருவளை நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வைத்து கொள்ளைக் கோஷ்டியினரை சுற்றி வளைத்துப் பிடிக்கும் நோக்கில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்குமிடையில் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றது.

இதன்போது அப்பகுதியில் முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த 07 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததுடன் அவனது தந்தை காயங்களுக்கு உள்ளானார். சம்பவத்தின்போது தப்பிச் சென்ற கொள்ளைக் கோஷ்டியினரை கைது செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று 16 ஆம் திகதி மாலை களுத்துறை மேலதிக நீதவான் நாமல் பெரேரா முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது எதிர் வரும் 30 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
FRIDAY, SEPTEMBER, 17, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment