Friday, January 22, 2010

எதிர்க்கட்சியினரின் தேர்தல் விஞ்ஞாபனம்:‘பிரதான அபிவிருத்திகளை அடையும் வழிமுறைகள் எதுவும் இல்லை’



சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணமுடியாத பொருளாதார அபிவிருத்திக்கான பாதையினை மஹிந்த சிந்தனை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றதென பொருளியலாளர் கலாநிதி லலிதசிறி குணருவன் நேற்று தெரிவித்தார்.

பிரதான இரு ஜனாதிபதி வேட்பாளர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களின் பொருளாதார அபிவிருத்தி நோக்குப் பற்றி பொருளியலாளர்கள் நேற்று தகவல் திணைக்களத்தில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினர். இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினர் வெளியிட்டிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரதான அபிவிருத்திகளை அடைவதற்கான வழி முறைகள் எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எதிரணியில் கூட்டுச் சேர்ந்திருக்கும் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக பிரிந்து செல்ல நேரிடுமோ என்ற பயத்தினாலோ என்னவோ பொன்சேக்கா அதுபற்றி எதுவுமே கூறாமல் இருக்கிறார் போலும், என்றும் அவர் தெரிவித்தார்.

இச் செய்தியாளர் மாநாட்டில் பேராசிரியர் புத்ததாச ஹேவாவித்தாரண, பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன், கலாநிதி லொயிட் பெர்னாண்டோ ஆகியோரும் கருத்துத் தெரிவித்தனர்.

கலாநிதி லொயிட் பெர்னாண்டோ கூறுகையில் :-

ஒவ்வொரு மனிதனுக்கும் இலக்கு அவசியம். அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கு இது மிகவும் இன்றியமையாதது. அப்படியானதொரு இலக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் காணக்கூடியதாகவுள்ளது. எமது நாட்டையும் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைப் போல அபிவிருத்தி செய்வதே எமது ஜனாதிபதியின் கனவு.

ஒரு நாடு அபிவிருத்தியடைய வேண்டுமாயின் அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், தொழில்நுட்ப மயம், சிறந்த நிர்வாக முறை என்பது அவசியம், இவற்றை மஹிந்த சிந்தனையில் காணக்கூடியதாகவுள்ளதாக தெரிவித்தார்.

பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் தெரிவிக்கையில் :-

கடந்த வருடம் இலங்கையின் பொருளாதாரம் உறுதியானதொரு நிலையிலிருப்பதனை எதிர்க் கட்சியினர் நன்கு அறிவர். தேர்தல்களையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை மேலும் உறுதிப்படுத்துவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லையென்றார்.

பேராசிரியர் புத்ததாச ஹேவாவித்தாரண, ஜனாதிபதி நாட்டில் ஐங்கேந்திரங்களின் மையத்தை தோற்றுவிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தவுள்ளார். இது இலங்கை வரலாற்றில் முன்னொரு போதும் இல்லாத சவாலாகும். ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனையில் தேசிய வேலை திட்டத்துக்கு உட்பட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை காணமுடிகின்றது.

SATURDAY, JANUARY 23, 2010 லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment