Thursday, May 27, 2010

நாடு முழுவதும் கண்கவர் வெசாக் கொண்டாட்டங்கள்



வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் இம்முறை வெசாக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. கொழும்பு உள்ளிட்ட அனைத்து பிரதான நகரங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும் பாரிய அலங்கார பந்தல்கள், வெளிச்சக் கூடுகள், கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

ஜுன் 08 ஆம் திகதி வரை வெசாக் உற்சவத்திற்கான காலப் பகுதியாக அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் வெளியிடங்களிலிருந்து அலங்காரப் பந்தல்களை பார்வையிடுவதற்காக கொழும்பு வருவோரின் பாதுகாப்புக் கருதி பெரும் எண்ணிக்கையான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

புத்த பெருமானின் பிறப்பு, இறப்பு மற்றும் பரி நிர்வாணம் ஆகிய மூன்றையும் குறிக்கும் இன்றைய தினத்தை முன்னிட்டு கதிர்காம் கிரி விஹாரை, தலதா மாளிகை, சிவனொளிபாதமலை உள்ளிட்ட அனைத்து விகாரைகளிலும் விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றதுடன் பெளத்தர்கள் சில் அனுஷ்டிப்பில் ஈடுபட்டதனையும் காண முடிந்தது.

கொழும்பு பெளத்தாலோக்க மாவத்தை, கங்காராமை வீதி ஆகியன வெசாக் பிராந்தியங்களாக பிரகடனம் செய்யப்பட்டு ள்ளன. லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் விசேட வெசாக் நிகழ்ச்சிகள் நிறுவனத்தின் முன்றலில் இடம் பெற்றன.

நேற்றைய நிகழ்ச்சிகளை தகவல் ஊடகத்துறையமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆரம்பித்து வைத்தார். கொட்டாவை பகுதியில் 20 வது வருடமாக இம்முறையும் பாரிய அலங்கார பந்தலொன்று அமைக்கப்பட்டுள்ளது. காய்ந்த இலை, கொடிகளைக் கொண்டே இப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தமை அதன் சிறப்பியல்பாகும்.

பொரளையில் 64 அடி உயரத்திலும் 55 அடி அகலத்திலுமாக அலங்கார பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தெமட்டகொடை பிரதேசத்தில் 36 வது தடவையாக இம்முறை பந்தல் போடப்பட்டுள்ளது. பலாமரத்தடிச் சந்தியில் 8 வது தடவையாக 27 ஆயிரம் மின் விளக்குகளுடன் பந்தல் போடப்பட்டுள்ளது. பாலத்துறையில் 58 வது தடவையாக இம்முறை 70 அடி உயரத்தில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

முல்லேரியாவில் 10 ஆயிரம் மின் விளக்குகளுடன் 40 அடி உயரத்திலும் 30 அடி அகலத்திலுமாக அலங்கார பந்தல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர புறக்கோட்டை, இராஜகிரிய, பிலியந்தலை, இரத்மலானை, மாலபே, அத்துருகிரிய என பல்வேறு இடங்களிலும் வெசாக் பந்தல்களையும், தான சாலைகளையும் காண முடிந்தது.

வெளியிடங்களைச் சேர்ந்த மக்கள் குடும்பம் குடும்பமாக வேன்களிலும் லொறிகளிலும் ட்ரக்டர்களிலும் வந்து அலங்கார வேலைப்பாடுகளை பார்வையிட்டுச் சென்றதுடன் தான சாலைகளிலும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம்
இதேவேளை, வெசாக் உற்சவத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் 700 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ். பாதுகாப்புக்கான கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இம்முறை வெசாக் உற்சவத்தை சிறப்பாக நடத்துவதற்கு யாழ். பாதுகாப்பு பிரிவு தலைமையகமும், பொலிஸ் தலைமையகமும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.

யாழ். பாதுகாப்பு பிரிவு தலைமையகம், யாழ். கோட்டை, துரையப்பா விளையாட்டரங்கு மற்றும் யாழ். பொது நூலகம் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண நகரின் மணிக் கூண்டு கோபுரத்துக்கு முன்னால் கண்கவர் வெசாக் தோரணம் அமைக்கப்பட்டுள்ளது.

யாழ். கோட்டை, துரையப்பா வி¨ளாயட்டரங்கு மற்றும் யாழ். பொது நூலகத்துக்கு இடைப்பட்ட பிரதேசம் நேற்று 27 ஆம் திகதி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தெற்கில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்காக வெசாக் வலயமாக மாற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இம் முறை நடைபெறும் வெசாக் உற்சவத்துக்கு நகரிலுள்ள வர்த்தகர்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்க தீர்மானித்துள்ளனர்.
தமது வர்த்தக நிலையங்களை வர்ண மின்சார பல்புகளால் அலங்கரித்துள்ளதுடன் பல்வேறு அலங்காரங்களையும் செய்துள்ளனர்.
FRIDAY, MAY 28, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment