Monday, July 19, 2010

சீரற்ற காலநிலை தொடரும்:மலையகத்தின் நீரேந்து பகுதிகளில் கடும் மழை: வான் கதவுகள் திறப்பு


நாட்டில் தற்போது நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்குமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

தென்மேல் பருவப்பெயர்ச்சி காரணமாக காலநிலையில் ஏற்பட்டிருக்கும் இம்மாற்றம் நாட்டின் தென் மேற்குப் பகுதியிலுள்ள மலைப் பிரதேசங்களில் அதிகூடிய மழையினையும் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் இடைக்கிடை கடும் காற்றினையும் ஏற்படுத்துமென காலநிலை அவதான நிலைய அதிகாரியான தமயந்தி திக்கெட்டி ஹேவாகே தெரிவித்தார்.

இதன்படி, கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் கென்யோன் பகுதியிலேயே அதிகூடிய மழை வீழ்ச்சியாக 114.5 மில்லி மீற்றர் பெய்தமை பதிவாகியுள்ளது.
லக்ஷபானவில் 89.5 மில்லிமீற்றர் மழையும், நோர்ட்டன் பிரிஜ்ஜில் 83.03 மில்லி மீற்றர் மழையும், மவுசாகலையில் 77.5 மில்லி மீற்றர் மழையும் பதிவாகியிருப்பதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்தது. அத்துடன் மஸ்கெலியாவில் 57 மில்லி மீற்றர் மழையும் கொத்மலையில் 43.03 மில்லி மீற்றர் மழையும் பெய்துள்ளது.


மலையகத்தின் தென் மேற்கு பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் அதிகூடிய மழை காரணமாக கென்னியோன், லக்ஷபான மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்கள் உயர்ந்துள்ளதை யடுத்து அவற்றின் வான் கதவுகள் நேற்று நண்பகல் 12 மணி முதல் திறந்து விடப்பட்டிருப்பதாக நோட்டன் பிரிஜ்ஜுக்குப் பொறுப்பான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அறிவித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி கூறினார். இதேநேரம்; கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் திறந்துவிடப்படவுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழ்வோர் அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மலையத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக மண்சரிவு அபாயம் இருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அநாவசிய விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு இக்காலப்பகுதியில் மலையகத்தின் குறித்த பகுதிகளுக்கான தூர பிரயாணங்களை தவித்துக் கொள்வது சிறந்ததெனவும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங் களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று இடைக்கிடை வெயிலுடன் கூடிய மழை பெய்யும். அதேவேளை கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று ஓரளவு மழை எதிர்பார்க்கப்படலாமெனவும் காலநிலை அவதான நிலைய அதிகாரி கூறினார்
MONDAY, JULY 19, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment