Monday, July 12, 2010

விமல் வீரவன்சவின் உடல் நிலையில் முன்னேற்றம்



வீடமைப்பு நிர்மாணத்துறை யமைச்சர் விமல் வீரவன்சவின் உடல் நிலையில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோர் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கமைய அமைச்சருக்கு மிகவும் சிறப்பான முறையில் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் பணிப்பாளர் ஹுலுகல்ல கூறினார்.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள விசேட நிபுணர் குழுவைக் கலைக்குமாறு வலியுறுத்தி அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த வியாழக்கிழமை (08) காலை 10.15 முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்தார்.

மூன்று நாட்களாக நீருமின்றி உண்ணாவிரதம் இருந்து வந்த வீரவன்ச நேற்று முன்தினம் (10) மிகவும் சோர்வடைந்திருந்தார். மருத்துவர்களின் ஆலோசனைக்கமைய அமைச்சருக்கு நேற்று முன்தினம் நண்பகலளவில் சேலைன் ஏற்றப்பட்டது.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அன்றைய தினம் மாலை அமைச்சரை நேரில் சென்று பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு வருகை தந்து அமைச்சரை பார்வையிட்டதுடன் அவரோடு உரையாடி நீராகாரம் வழங்கினார். இதன் பின்னர் அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட்ட அமைச்சர் கொழும்பு இராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு விசேட சிகிச்சையளிக்கப்பட்டு வருவதன் பயனாக அமைச்சரின் உடல்நிலை தேறி வருவதாக லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார்.
MONDAY, JULY 12, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment