Monday, July 19, 2010

மீள்குடியேறியோர் உட்கட்டமைப்பு மேம்பாடு;உதவி வழங்கும் பேரவையை இலங்கையில் அமைக்க பேச்சுவார்த்தை


மீள்குடியேற்றம் மற்றும் குடியேற்றப்பட்டோரின் உட்கட்டமைப்பு வசதிகளை துரிதப்படுத்தும் வகையில் அரசாங்கம் ஏழு நாடுகளின் உதவிகளைப் பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சின் செயலாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, கனடா, சுவீடன், நோர்வே, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளிடமிருந்து நிதியுதவி மற்றும் நன்கொடைகளை பெற்றுக்கொள்ளும் முகமாக அரசாங்கம் இந்நாடுகளுடன் ஆரம்ப கட்டப் பேச்சுக்களில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.


மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டு வருவதுடன் அவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளும் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்படுகி ன்றன. மேற்படி செயற்திட்டங்களை துரிதப்படுத்தும் வகையில் மேற்குறிப்பிட்ட ஏழு நாடுகளின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் செயலாளர் சுட்டிக்காட்டினார்.


இந்நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் மிக விரைவில் இந்நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு அழைக்கப்பட்டு மீள்குடியேற்றத்துக்கான உதவி வழங்கும் பேரவையொன்றை ஸ்தாபிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இப்பேரவையினூடாக தேவையான நிதி மற்றும் நன்கொடையினைப் பெற்று மீள்குடியேற்றம் மற்றும் குடியேற்றப் பட்டவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியுமென நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
MONDAY, JULY 19, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment