
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிந்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் கூறினார். இராஜகிரியிலுள்ள முதலாளிமார் சம்மேளனத்தில் நேற்று சுமார் இரண்டு மணித்தியாலங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித இணக்கப்பாடும் காணப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை ஆகக்கூடியது 500 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பாக தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையில் நேற்றுடன் ஆறு தடவைகள் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளன.
நாட் சம்பளத்தை ஆகக்கூடியது 500 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பாக இதற்கு முன்னர் 05 தடவைகள் இருதரப்புக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததையடுத்து தோட்டத் தொழிற்சங்கங்களினால் ஒத்துழையாமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆறு நாட்களாக தொழிற்சங்கப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று ஆறாவது தடவையாக முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி முடிந்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை ஆகக்கூடியது 360 ரூபாவாக அதிகரிப்பதாக முதலாளிமார் சம்மேளனம் இப்பேச்சுவார்த்தையின் போது தீர்மானத்துக்கு வந்துள்ளது. இருப்பினும் தோட்டத் தொழிற்சங்கங்கள் இதனை நிராகரித்துள்ளன. அதனையடுத்து பேச்சுவார்த்தை எவ்வித இணக்கப்பாடுமின்றி முடிவுக்கு வந்ததாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பேச்சாளர் கூறினார்.
தாம் முன்வைத்திருக்கும் கோரிக்கைக்கு சாதகமான முடிவு கிட்டும் வரை ஒத்துழையாமை தொழிற்சங்கப் போராட்டம் தொடருமெனவும் தேவையேற்படின் வேறு விதமான தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க தயாரெனவும் தோட்டத் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
பேச்சுவார்த்தையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், பிரதியமைச்சர்களான முத்து சிவலிங்கம், எஸ். ஜெகதீஸ்வரன், முன்னாள் எம். பி. யோகராஜன் மற்றும் ஹரிஸ் சந்திரசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சார்பாக கே. வேலாயுதம், மொஹிதீன் மற்றும் பெருந்தோட்டக் கூட்டு கமிட்டி சார்பாகவ எஸ். இராமநாதன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
TUESDAY, SEPTEMBER 08, 2009 லக்ஷ்மி பரசுராமன்

Colombo Time
Canberra Time
Berlin Time
London Time
Ontario Time
Washington Time
No comments:
Post a Comment